பார்த்தீபன்
ஸ்ரீலங்காவை ஆசியாவின் ஆச்சரியம் என கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்தபோது சொல்லி வந்தார். தற்போது அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ஸ்ரீலங்கா உலகின் ஆச்சரியமாக மாறி வருகின்றது. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றி, அறிவிக்கப்படாத இராணுவத் தளபதியாக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச நாட்டை முழுமையாக இராணுவமயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதன் அடுத்த ஆபத்தான கட்டமாக கல்வித்துறையையும் கொலை செய்கின்ற அளவுக்கு இலங்கையின் நிலமை வந்துவிட்டது.
ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி கடந்த பல மாதங்களாக தமது பணியைப் புறக்கணித்து போராடி வருகிறார்கள். தற்போதைய ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களும் முன்னைய ஆட்சியாளர்களும் ஸ்ரீலங்காவின் ஆசிரியர் பணித்துறையில் உள்ள சம்பள முரண்பாடு தொடர்பில் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலக நாடுகளில் ஆசிரியத்துறை என்பது வரையறுக்கப்பட்ட தனித்துறையாக காணப்படுகின்றது. பதவி உயர்வு, சம்பன வழங்கல், சம்பள உயர்வு என்பன தனித்துவமான முறையில் காணப்படுகின்றது. அத்துடன் சமூகத்தின் அனைத்துக் கட்டமைப்பு சார் ஆளுமைகளையும் ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள் என்பதால் அவர்களுக்கு பணிக்கு மதிப்பளித்து உயரிய ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு உலக நாடுகளில் வழங்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை ஆசிரியர்கள் உலக நாடுகளின் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை மாதம் ஒன்றுக்கு பெறுகின்றனர். அதேவேளை இலங்கையின் எழுத்தறிவு விகிதம், இலங்கையின் கல்வி அறிவு வீதம் என்பன உயர்வான நிலையிலேயே பேணப்படுகிறது. அத்துடன் இலங்கை ஆசிரியர்களின் கற்பித்தல் ஆளுமையும் உலக அளவில் ஒப்பிடுகின்ற போது சிறப்பான நிலையில் உள்ளமையை பல்வேறு ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் ஆசிரியர்களின் மகத்துவ தன்மை என்பது போற்றத் தகு நிலையிலும் உணர்ச்சி பூர்வமான மதிப்பிலும் இருக்கிறது. எந்த நிலையில் உயர்ந்து வருகின்ற மனிதர்களும் தமது ஆசிரியர்களை மறக்க முடியாத கருவியாக ஆயுதமாக ஏணியாக நினைவு கொள்ளுகின்றனர். இத்தகைய நிலமைகளுக்கு மாறாகவே ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு இருக்கிறது. நாள் ஒன்றிற்கு ஆயிரம் ரூபா அளவில் ஆசிரியர்கள் சம்பளம் பெறுகின்றனர். இன்றைய பொருளாதார சூழலில், இன்றைய விலைவாசி அதிகரிப்பு சூழலில் இந்த ஊதியம் என்பது மிகக் குறைந்த கொடுப்பானவாகும். இதனால் ஆசிரியர்கள் வேறு பல்வேறு தொழில்களை பகுதி நேரமாக செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஆசிரியர்களின் தொழில் வாண்மையை பாதிக்கவும் கூடும். அத்துடன் அவர்கள் கடும் உள நெருக்கடிகளுக்கு ஆளாகவும் நேரிடும். ஆசிரியர்களை மதிக்கின்ற நாட்டில், மதிப்பான சம்பளத்தை வழங்குவதன் வாயிலாகவே நாட்டின் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இந்த நிலையில் ஆசிரியர் சேவைத்துறையின் சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் வகையில் ஒரே முறையில் முரண்பாட்டைத் தீர்த்து சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கோரியே தற்போது போராட்டம் நடைபெறுகிறது.
அவரவர் தொழில் என்பது அவரவர் துறை சார்ந்தது. கல்வித்துறை என்பது துறைசார் ஆளுமையாலும் கல்வி உளவியல் நுட்பத்தாலும் ஆனது. அதைப் போலவே ஒவ்வொரு துறையும் தனித்துவம் பெறுகின்றது. அதனை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் தொழில்சார் உரிமைகளுக்காக போராடுகின்றவர்களை மதிப்பதும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதும் அவசியமான பண்பு. இந்த நாட்டில் அரச தலைவர் முதல், பிரதம மந்திரி வரையிலும் ஆசிரியர்களிடம் பாடம் படித்து வந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது. இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து அதிகாரிகளும் தங்கள் ஆசிரியர்களை மனதில் கொண்டு அவர்களின் போராட்டத்தை தமது அரசியல் மற்றும் பதவி நலன்களை கொண்டு கொச்சைப்படுத்தக்ககூடாது.
ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தை மதிக்க வேண்டிய அரசு தற்போது இராணுவத்தை வைத்து பாடசாலைகளை நடத்துவோம் என்ற வகையிலும் ஆசிரியர்களை மிரட்டி வருகின்றது. இங்குதான் ஸ்ரீலங்கா உலகின் ஆச்சரியம் மிகுந்த நாடாகிறது. கடந்த காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஸ்ரீலங்கா இராணுவத்தை முழுமையாகப் பயன்படுத்தியது. தடுப்பூசி ஏற்றுவதிலும் கூட இராணுவத்தினரே பயன்படுத்தப்பட்டனர். அது தடுப்பூசி குறித்த சந்தேகத்தையும் அச்சத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தியதும் வெளிப்படையானதே.
இலங்கையில் சுகாதாரத்துறை செத்துவிட்டதா என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பிய நிலை தோன்றியிருக்க, தற்போது பாடசாலைகளையும் இராணுவத்தை கொண்டு திறப்போம் என்பது நாட்டின் கல்வித்துறையையும் இராணுவ மயப்படுத்துகின்ற இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருகின்ற தலையீடு ஆகும். ஏற்கனவே வடக்கு கிழக்கில் கல்வி மற்றும் பாடசாலை நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள் காணப்படுவதாகவும் பாடசாலைகளை அண்டிய பிரதேசங்களில் இராணுவப் பிரசன்னங்கள் மாணவர்களின் கல்வியை பாதிப்பதாகவும் கல்விச் சமூகங்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக மாபெரும் இனப்படுகொலையைப் புரிந்திருக்கிறது. இராணுவத்தினரைப் பார்க்கும் போதெல்லாம் முள்ளிவாய்க்காலும் அங்கே நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையும் நினைவுக்கு வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச ரீதியாக இலங்கை இராணுவத்திற்கு எதிராக வலுத்த யுத்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இராணுவத்தை நுழைத்து இராணுவத்தின் இரத்தக் கறைகளைக் கழுவ தற்போதைய அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது.
இதனால் எதற்கெடுத்தாலும் இராணுவத்தைக் கொண்டு நடத்துவோம், திறப்போம் என்ற இராணுவமயப்படுத்தல் மனநிலை அதிகரித்து வருகின்றது. இனி வரும் காலத்தில் ஸ்ரீலங்காவில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டால், இராணுவத்தினரைக் கொண்டு சத்திரகிசிச்சைகளைச் செய்வோம் என்றும் ஸ்ரீலங்கா அரச தரப்பினரும் அதிகாரிகளும் சொல்லக் கூடும். அதைப்போல ஸ்ரீலங்காவில் நீதிபதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் இராணுவத்தினரை நீதிபதியின் இருக்கையில் அமர்த்தி நீதிமன்றம் நடத்துவோம் என்றும் ஸ்ரீலங்கா அரச தரப்பினரும் அதிகாரிகளும் சொல்லக் கூடும் சொல்லக் கூடும்.
பாடசாலைகளில் இராணுவத் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிங்கள தேசம், தமிழர்கள் மாத்திரம் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வாழ வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. அத்துடன் இத்தகைய அணுகுமுறைகள், ஈழத் தமிழர்கள் எத்தகைய அடக்குமுறை சூழலிலும் இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இந்த உலகிற்கு எடுத்துரைக்கிறது.