(28-10-2021)
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் மீண்டும் கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் செயல்படுத்தப்படும் சூழலைக் கருத்தில் கொண்டு, மற்றொரு கொவிட் அலையைத் தடுக்க திட்டவட்டமான நடவடிக்கை எடுப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
புதிய கொவிட் அலையொன்று மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை மருத்துவ சங்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 4 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை சிறந்த மேற்பார்வையின் கீழ் கடுமையாக அமலாக்குதல், ஃபைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை முன்னுரிமை குழுக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பரிந்துரைகள் அவற்றுள் அடங்குகின்றன.
மேலும், அதிக தொற்றுநோய் பரவல் மற்றும் நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளை செய்து தொற்றாளர்கள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்துதல் குறித்த பரிந்துரைகளில் அடங்கும்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் வெற்றிகரமாக தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 340,000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.