ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் உறவு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. ஈழமும் தமிழகமும் நிலத்தாலும் இனத்தாலும் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்த இரண்டு நிலங்களும் நிலத்தால் ஒன்றுபட்டிருந்தன என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு கடலால் பிரிக்கப்பட்ட போதும் ஈழத்தை அண்டிய தமிழக நிலத்தின் பண்பாட்டிற்கும் ஈழத்திற்கும் ஒரு இடையறாத தொடர்பு காணப்படுகிறது. நில அமைப்பிலும்கூட தமிழகத்தின் குழந்தைபோல ஈழத்தின் அமைப்பு இருப்பதும் இரண்டு நிலங்களுக்கும் இடைியலான நெகிழ்வைக் காட்டுகிறது.
ஈழத்தில் சிங்கள அரசினால் தமிழ் மக்கள் அழிக்கப்படுகிறபோதெல்லாம் தமிழகம் பெரும் சினம் கொண்டிருக்கிறது. இனவழிப்பை தடுக்கவும் தமிழர் உரிமையை மீளளிக்க வேண்டும் என்றும் தமிழகம் உருக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் நாங்கள் பேச முடியாது வாய்க்கள் கட்டப்பட்டு ஒடுக்கப்படுகின்ற காலத்தில் எங்கள் குரலாக தமிழகம் இருந்திருக்கிறது. ஈழம் என்ற விடயத்தில் மாத்திரம், தமிழகத்தின் கட்சிகள் வேறுபாடின்றி இணைந்து செயற்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஈழம் உணர்வுபூர்வமான இடத்தை வகிக்கிறது.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஈழத்திற்கு வெளியில் இருந்து முதலாவது சட்டபூர்வமான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து அதிக உரையாடல்களும் கவனப்படுத்தல்களும் போராட்டங்களும் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் ஈழத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தது. எமது கடல்வளத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானது என்பதுதான் பெருத்த துயரமானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களில் சிலர் மாத்திரம் கலந்து கொண்ட அந்தப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை. ஏனென்றால் தாய் தமிழகத்திற்கு எதிராக இப்படியொரு போராட்டத்தை நடத்துவதை ஈழமக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்திருந்தால் இத்தகையவொரு போராட்டம் நடக்குமா?
உண்மையில் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான கடல் என்பது தமிழக மக்களும் ஈழமக்களும் பாரம்பரியமாக பகிர்ந்து கொண்ட கடல் வளம். இன்றைக்கு சிங்கள அரசு ஈழத்தைக் கைப்பற்றிய பிறகுதான் ஈழக் கடலில் தமிழக மீனவர்கள் கடல் வளத்தை அபகரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இந்தக் குற்றச்சாட்டு எழவில்லையே? தற்போதைய எண்ணிக்கையின் படி இதுவரையில் 800 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை பலியெடுத்திருக்கிறது. அண்மையில்கூட ராஜ்கிரன் என்ற தமிழக மீனவர் கொல்லப்பட்ட நிலையில் ஈழத்தில் இப்படி ஒரு போராட்டத்தை தமிழ் தலைவர்கள் ஏற்படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்.
ஏனென்றால் தமிழகத்தையும் ஈழத்தையும் பிரித்துவிட வேண்டும் என்பதில் சிங்கள அரசு குறியாக இருக்கிறது. இதனால் கடலில் ஈழ – தமிக மீனவர்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதன் வாயிலாக இரண்டு விடயங்களை சாதிக்க சிங்கள அரசு முற்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் தமிழக குரலை இல்லாமல் செய்வது ஒரு நோக்கம். இரண்டாவது இலங்கை அரசு மேற்கொண்ட தமிழக மீனவர் படுகொலையை நியாயப்படுத்துதல் இரண்டாவது நோக்கமாகும். இதில் துயரம் என்னவெனில் இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு துணைபோகும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போராட்டம் முனைந்ததுவே.
தமிழக – ஈழ கடல் சார்ந்த சிக்கல்கள் இருந்தால் அதனை தமிழக மற்றும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் தாலைவர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவும் சட்டபூர்வமாகவும் இரண்டு நிலங்களுக்கும் இடையிலான உறவை அப்படித்தான் போண வேண்டும். இன்றும்கூட ஈழத்தில் நடக்காத அளவில் தமிழகத்தில் தான் ஈழ விடுதலைக்கான போராட்டங்கள் நடக்கின்றன. மே 17 இனப்படுகொலை நினைவேந்தல், மாவீரர் நாள் என்பன இப்போதும் தமிழகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக தமிழகமே செயற்பட்டு இருக்கின்றது. அதில் தமிழக மீனவர்களின் பங்களிப்பும் தென் தமிழகத்தின் பங்களிப்பும் அளப்பெரியது. ஒருவகையில் சொன்னால் தமிழக மீனவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக இரத்தம் சிந்தியுள்ளார்கள். தமிழக மீனவர்கள் இல்லை என்றால் ஈழவிடுதலைப் போராட்டம் இல்லை என்றே கூற வேண்டும். காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்வதற்காக விரைந்த தமிழக மீனவர்களின் படகுகளும் அதனால் காயம்பட்டு இரத்தம் சிந்திய மீனவர்களும் இருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் ஈழவிடுதலை போராட்டத்தின் பெரும்பாலான செயற்பாடுகள் தமிழகத்தில்தான் முன்னெடுக்கப்பட்டன. புரட்சிப் பாடல்கள் அங்குதான் தாயாரிக்கப்பட்டன. விடுதலை சம்பந்தமான புத்தகங்கள் அங்குதான் பதிப்பிக்கப்பட்டன. விடுதலைப் போராட்ட நிர்வாகம் சார்ந்த கட்டமைப்புக்கள் தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புக்கள் தமிழகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. அப்போது விடுதலைப் போராளிகளின் போக்குவரத்துச் செயற்பாடுகளில் தமிழக மீனவர்களின் பங்களிப்பும் இரத்தம் சிந்துதலும் இருந்தது வரலாறு.
அதைப் போல ஈழத்தில் போர் மூண்ட தருணங்களில் எல்லாம் மக்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு புலம்பெயர்ந்தார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இதுவரையில் கடல்வழியாக புலம்பெயர்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரையும் கடலில் கொண்டு சென்றவர்களும் கடலில் மீட்டவர்களும் தமிழக மீனவர்கள்தான். ஈழத்தில் பெரும் ஆபத்துக்களை சந்தித்த எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தமது உயிரை காக்க அந்தரித்த தருணங்களில் அவர்களை தமிழகத்திற்கு கொண்டு சேர்த்தவர்களும் தமிழக மீனவர்கள்தான்.
ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான பாரம்பரிய உறவுக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. எத்தனையோ கதைகள் இருக்கின்றன. எத்தனையோ வரலாறுகள் இருக்கின்றன. சங்ககாலத்தில் ஈழத்தில் இருந்து சென்று தமிழகத்தில் சங்கக் கவிதை இயற்றிய பூதந்தேவனார் தொட்டு தமிழ் நவீன கவிதையின் பிதாமகனாக கருதப்படுகின்ற பிரமிள் வரை இலக்கியத் தொடர்புகூட நீண்ட பாரம்பரியம் கொண்டது. சம காலத்தில் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் இலக்கியப் பதிப்புக்கள் கூட தமிழகத்தில் தான் நடக்கின்றன.
இந்தப் பாரம்பரிய உறவில் விரிசலை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் பெற முனைவதுதான் இலங்கை அரசின் எண்ணம். அதற்கு இனி ஒருபோதும் இலங்கை தமிழ் தலைவர்கள் துணைபோகக் கூடாது. ஈழத்தில் சிங்கள மீனவர்கள் ஈழக் கடலையும் ஆக்கிரமித்து, ஈழ நிலத்தையும் ஆக்கிரமித்து மக்களை குடிபெயரச் செய்து மேற்கொள்ளுகின்ற ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதில் தான் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
ஈழக் கடலில் ஈழ மீனவர்களை விரட்டி மீன் பிடித்து மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பால் ஈழ மீனவர்களின் வாழ்வாதாரம் மாத்திரமின்றி வாழ்நிலமும் பறிபோகிறது. அதை தடுப்பதில்தான் தமிழ் தலைவர்களின் அக்கறை இருக்க வேண்டும். அதைவிடுத்து தமிழக – ஈழ மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமிழக மீனவர் படுகொலையை நியாயப்படுத்த முனையும் இலங்கை அரசின் எண்ணத்திற்கு துணைபோகாமல், தமிழகத்திலிருந்து எழுகின்ற ஈழ ஆதரவுக் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தீபச்செல்வன், ஈழக் கவிஞர், எழுத்தாளர்.