திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416- 332-0269
“ சிலையாக நின்றாலும் சீரான வாழ்வுதரும்
செம்மை சேர் எழிலரசி
செவ்வானம் பொழிகின்ற சிங்கார அருள்முத்து
தேவியுந் தன் அருளாசியே
நித்தமும் சித்தத்தில் நின்றுமே அருளுட்டும்
நீடுபுகழ் உலகரசியே
நத்திடும் நங்கையர் மாங்கல்யம் காத்திடும்
நாயகி மாதரசி நீயே.”
அன்னையின் ஆணையை ஏற்ற இராமேஸ்வர அந்தணர், தக்கிணகைலாயமாகிய திருகோணமலைக்கு வந்து, கனவிலே குறிப்பிடப்பட்ட இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து, புதைக்கப்பட்டிருந்த கிடாரத்தினை வெளிக்கொண்டு வந்த போது, அதனுள் அன்னை ஸ்ரீ பத்திரகாளியின் திருவுருவச்சிலை (தாமிரவிக்கிரகம்),
மற்றும் தீபத்தட்டு, பூசைக்குப் பயன்படும் பொருட்கள், ஆகியவற்றைக் கண்டெடுத்தார். அத்திருவுருவத்தை முறைப்படி பூசை செய்து வணங்கி, வழிபட்டுத் தவத்தை மேற்கொண்டார். ஆலயத்திலே காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட அம்பாளின் இத்திருவுருவத்தினைத் தற்பொழுதும் ஆலயத்திலே காணலாம். சில விசேட உற்சவ காலங்களில், அம்பாளின் இத்திருவுருவத்தினை எழுந்தருளச் செய்வது வழக்கமாகக் காணப்படுகின்றது.
ஆலயத்திலுள்ள சிங்க வாகனம்பற்றிய கதையும் அற்புதமானது. ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் அருளைப் புலப்படுத்துவதாக இக்கதை காணப்படுகின்றது. ஆலயத்திலுள்ள சிங்கவாகனம் கடல் அன்னை அளித்த பரிசாகும். ஓரு சந்தர்ப்பத்தில் இந்தியாவிலிருந்து சிங்க வாகனம் ஒன்றை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல், திருகோணமலைக் கடற்பரப்பில், ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்திற்கு நேராக வந்ததும் ஓட மறுத்துவிட்டது.
அம்பிகையின் அருளால் கப்பல் தலைவன் தான் கண்ட சொப்பனத்தின்படி, கப்பலில் இருந்த சிங்க வாகனத்தை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சேர்த்தபின்னரே மீண்டும் கப்பல் ஓடத் தொடங்கியது. இவ்வாறு, ஆலயத்திற்குச் சிங்க வாகனம் வந்தது பற்றிய கர்ணபரம்பரைக்கதை வழங்கிவருகின்றது. மிகப் பயங்கரமான தோற்றத்துடன் குழந்தையொன்றைக் கவ்விய நிலையில் இந்த வாகனம் காணப்பட்டுள்ளது. பின்னர் சிங்கவாகனத்தினின்றும் குழந்தையை நீக்கிவிட்டு, சிங்கத்தின் பிடரி மயிர் முதல் உடல்வரை சீவிச் சிறுப்பித்துக் காணப்படுவதே, இப்பொழுது ஆலயத்திலுள்ள சிங்கவாகனமாகும். இவ் வாகனம் தொடர்பான கல்வெட்டொன்றும் ஆலயத்திலுள்ளது. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் மகிஷாசுரமர்த்தனத்திற்கு எழுந்தருளும்பொழுது மட்டுமே சிங்கவாகனம் பயன்படுத்தப்படுகின்றது.
மகிஷாசுரமர்த்தனம் நவராத்திரி விழாவோடு தொடர்புடையது. மகிஷாசுரன் என்னும் அரக்கன் தனது ஆணவத்தால் முனிவர்களுக்கும், ஏனையோருக்கும் துன்பத்தை ஏற்படுத்தி வந்தான். துன்பம் தாங்காது அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அடியவர் துயர்தீர்க்க அன்னை பராசக்தியானவள் துர்க்கை வடிவெடுத்து, மகிஷாசுரனை அழித்து, அனைவரையும் காப்பாற்றி அருள் புரிந்தாள். இந்நாளில் வன்னிவாழைவெட்டும் நிகழும்.
மகிஷாசுரனாக வாழையொன்றினை உருவகம் செய்தே வாழைவெட்டு நிகழும். மகிஷாசுரமாத்தனம் பல அரிய கருத்துக்களைக் கொண்டது. அன்னை பராசக்தி, அதர்மத்தின் உருவான மகிஷாசுரனை அழித்ததாகக் கூறுவது, மனித மனத்திலே குடிகொண்டுள்ள மகிடமாகிய தாமச (அகங்காரம்) குணத்தை அழித்து, அமைதியான சாத்வீக குணத்தை மக்களுக்கு அருளிய திருநாளாக மகிஷாசுரமர்த்தனத்தைக் கொள்ளலாம்.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று, ஸ்ரீ பத்திரகாளியின் மீது மக்கள் பயபக்திகொள்ள வைத்துள்ளது. பொதுவாக அம்மன் எழுந்தருளியிருக்கும் ஆலயச் சுற்றாடல்களில், மக்கள் ஆசாரமாக நடந்துகொள்வது வழக்கம். இதை மீறி நடப்போர் பல துன்பங்களுக்கு ஆளாவதை நடைமுறையில் பலரும் அனுபவித்துள்ளனர். இவ்வாறான சம்பவமொன்று ஸ்ரீ பத்திரகாளி கோயிலோடும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. யாவுகப் பெண்மணியொருவர் தலைவிரிகோலமாக இவ்வாலயத்தின் முன்பு அகங்காரத்துடன் சென்றார். வீடுசென்ற பெண்மணியுடைய தலை ஒரு பக்கம் திரும்பிக் கழுத்து வாங்கலால் பெரும் அவதிப்பட்டார்.
அன்று சொப்பனத்திலே, அம்மாளை அவமதித்து ஆசாரமற்று நடந்ததாகக் கனவு கண்டு, தனது குற்றத்தை உணர்ந்து, ஆலயத்திற்கு வந்து, நேர்த்திக்கடனாகத் தனது தலைமுடியைக் கத்தரித்துக் கொடுத்தார். இதன் பின்னர் அப்பெண்மணி கழுத்து வாங்கலில் இருந்து சுகமடைந்தார். இத்தலை முடியைப் பாதுகாத்து வைத்திருந்து மகிஷாசூரசம்மாரம் நடைபெறும்பொழுது அம்பாளுடைய சடைமுடியோடு சேர்த்துக் கட்டி, அலங்கரிக்கும் வழக்கம் வழமையில் இருந்துள்ளது. இவ்வாறு பெண்மணி நேர்த்திக்கடனாக அளித்த தலைமுடியின் ஒருபகுதி தற்பொழுதும் உள்ளது.
முன்னொருகாலத்திலே இவ்வாலயத்திலே பூசை செய்யும் குருக்கள் ஒருவர் தன்னுடன் தனது மகனையும் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். இரவுப் பூசை முடிந்ததும், ஆலயத்துள் மகன் இருப்பதை மறந்து ஆலயத் திருக்கதவை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டிற்குச் சென்று சாப்பிடும்வேளையில் பிள்ளையைக் காணாமல் எல்லா இடமும் தேடிவிட்டு ஆலயத்திற்கு வந்து பார்த்தபோது, பிள்ளை அங்கிருப்பதைக் கண்டு மனைவியிடம் மகன் கோயிலுள் இருப்பதைத் தெரிவித்தார். அத்தோடு, பூசை முடிந்து திருக்கதவை மூடியபின் ஆலயத்தைத் திறப்பது சாத்திர விரோதமானது என்றும், காலையில் மகனை அழைத்துவரலாம் என்று மனைவியிடம் கூறியபோதும், மனைவி அதனை ஏற்றுக்கொள்ளாமல், மகனை உடன் அழைத்து வரும்படி கூறினார். மனைவியின் வற்புறுத்தலால் ஆலயத்திற்குச் சென்று கதவைத் திறந்தபோது, ஆலய காவல்தெய்வமாகிய வைரவர் அந்தப் பிள்ளையை இரண்டாகக் கிழித்துப் போடுவதைக் கண்டார்.