(சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்)
இருபது வயதாகும் போது ஒரு இளைஞரோ அல்லது யுவதியோ வாழ்க்கையில் பலவற்றை கற்று அடுத்து வேலை வாய்ப்பு, திருமணம் போன்ற அடுத்த படிநிலைகளை நோக்கிச் செல்வது உலக இயல்பு. அதுவே நடைமுறை, யதார்த்தம் மற்றும் எதிர்பார்ப்பு. இது ஒரு அரசியல் கட்சி, நிறுவனம், கல்விச்சாலை போன்று அனைத்திற்கும் பொருந்தும். இருபது ஆண்டுகளைக் கடந்தவுடன் அனைவரும் வெள்ளிவிழாவை எதிர்பார்ப்பது ஒரு அரசியல் கட்சியாக அந்த எதிர்பார்ப்பு வளர்ச்சி, சாதனை, மக்கள் ஆதரவு, ஆட்சி அதிகாரம் போன்ற பல அம்சங்களையும், ஒரு நிறுவனமாக இருந்தால் அதன் உற்பத்தி, லாப நிலைமை, கூடுதல் தொழிற்சாலைகள் தொடக்கம் போன்றவையும், கல்விச்சாலையாக இருந்தால் இருபது ஆண்டுக்காலத்தில் அங்கிருந்து வெளியேறிய மாணவர்கள் எவ்வளவு சிறந்த கல்விமானாக வந்துள்ளதன் சாதித்துள்ளனர் என்பதைப் பொறுத்து அமையும்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடங்கி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த அமைப்பு என்ன சாதித்துள்ளது என்று சற்று ஆறுதலாக விருப்புவெறுப்பின்றி அசைபோட்டால், சாதனைகள் என்பதைவிட ஏமாற்றங்களே அதிகம் இருந்துள்ளன என்பது கசப்பான உண்மை. தேர்தல்முறை தவிர்க்க முடியாதது, ஜனநாயக ரீதியாக வெற்றிபெற வேண்டுமென்றால் அந்த பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம் என்று உணர ஆரம்பித்த காலம் இந்த நூற்றாண்டின் ஆரம்பக்காலப் பகுதி. ஆயுதப் போராட்டத்தால் மட்டுமே எண்ணிய இலட்சியத்தை அடைய முடியாது என்கிற சிந்தனை விடுதலைப் புலிகள் அமைப்பால் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவளித்த கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அமைப்புகள் ஆகியவர்களாலும் முன்வைக்கப்பட்டது. மேலும் தமிழர் பகுதியில் சிங்கள கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு செல்வாக்கு இல்லை, அங்கு தமிழர்கள் தாம் விரும்பிய பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பார்கள், அவர்கள் மூலமே நாடாளுமன்றத்தில் தமது குரலை ஒலிக்கச் செய்து, தனிநாடு என்பதற்கான அடிப்படையாகக் கருதப்படும் பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவது ஆகியவற்றை முன்னெடுக்க முடியும் என்று சர்வதேச சமூகம் தமிழர் தரப்புக்கு அறிவுறுத்தியிருந்தது.
அவ்வகையில் 2001 ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பு தொடங்கப்படுவதற்கான தேவை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றதேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சி முக்கியமான ஒரு காரணமாகும். அந்த அதிர்ச்சியின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. தமிழர்களின் தாயகப் பகுதிகளான வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட தோல்வி தமிழ் கட்சிகள் மட்டுமல்ல தமிழர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தமிழீழம் அமைந்தால் அதன் தலைநகராக இருக்குமென்று அறியப்பட்ட திருகோணமலையிலிருந்து தமிழர்கள் யாரும் தெரிவாகவில்லை. அம்பாறை மாவட்டத்திலிருந்து ஈபிடிபி ஆதரவு பெற்ற ஒரு தமிழர் தெரிவானார். யாழ் தேர்தல் மாவட்டத்தில் போனஸ் ஆசனம் உட்பட 4 இடங்களை டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி வென்றது. வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜா மகேஸ்வரன் வென்றதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கால்பதித்தது. இந்தத் தேர்தலில் மாபெரும் அதிர்ச்சியாக எந்த தமிழ்கட்சிக்கும் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்குமளவுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப புத்தாயிரமாம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போதிய அளவில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத சூழல் உருவானது. இதற்கு அடிப்படை காரணம் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாதது. அதன் காரணமாக வாக்குகள் சிதறின. அதன் முடிவு `குரங்கு பங்கிட்ட ஆப்பம் கதையானது`. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழ் கட்சிகளிடம் மக்களிடம் எதைச் சொல்லி வாக்கு கேட்பது என்கிற குழப்பமும் காணப்பட்டது.
இந்த முடிவிலிருந்து மீள முடியாமல் தமிழ் கட்சிகளும் அதன் தலைவர்களும் திணறினர். இருந்ததும் போய்விடுமோ என்கிற கவலையுடன் தமிழ்க் கட்சிகள் இருக்க, மக்கள் இவர்களிடையேயான முரண்பாடு தமது எதிர்க்காலத்தை குலைத்துவிடுமோ என்று அஞ்சினர்.
ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க முடியுமா, இழந்த வாக்கு வங்கியை மீண்டும் பெற முடியுமா, தமிழர் தாயகப் பகுதியிலிந்ருது அடுத்த தேர்தலிலாவது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியுமா போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் தமிழ்க் கட்சிகள் அல்லாடின.
இந்நிலையில் இழந்ததை மீட்பது எப்படி என்பதை ஆராயக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளரும், ஊடகவியலாளருமான `தராக்கி` சிவராம் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தார். இந்த கருத்தரங்கில் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விமான்கள் உட்பட பலர் பங்குபெற்றனர்.
அந்த கருத்தரங்கம் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி, அவை தமிழ் மக்களின் நலன்களைக் கருதி தம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாகச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் என்றும், அப்படியான அந்த அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இப்படியான ஒரு பரந்துபட்ட அரசியல் அமைப்பிற்கு விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்தை பெறுவது என்றும் முடிவானது.
எனினும் தாங்கள் எடுத்த இந்த தீர்மானத்திற்கு விடுதலைப் புலிகளின் ஒப்புதல் கிடைக்குமா என்கிற கேள்வியும் எழுந்தது. அதேவேளை புலிகளுக்கும் ஜனநாயக ரீதியில் ஒரு முன்னெடுப்பு மற்றும் அரசியல் முகம் தேவைப்பட்டது. இவை இரண்டும் இந்த கருத்தரங்கின் முடிவில் ஒன்று சேர்ந்தன. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சனை உருவானது. அந்த மணியைக் கட்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் போன்றோர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவுக்கு பல பணிகள் காத்திருந்தன. ஆனால் அனைத்திலும் முக்கியமாக மூன்று அம்சங்களை அவர்கள் முன்னெடுக்க வேண்டியிருந்தது. அதில் ஆகக் கூடியது இனி எக்காலத்திலும் தமிழ் வாக்குகள் பிரியக்கூடாது என்பதாகும். மற்ற இரண்டில் ஒன்று விடுதலைப் புலிகள் அமைப்பு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் உட்பட எந்த தமிழ் அரசியல்வாதிகளையும் படுகொலை செய்யக் கூடாது என்பதாகும். அதே நேரம் புலிகளை சமாதானப்படுத்தி இதற்கு ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை, அனைத்து தமிழ்க் கட்சிகளும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக இருப்பார்கள், அவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் தமிழ் மக்கள் சார்பாக அவர்களே பங்கேற்பார்கள் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டு அது பெரும் அழுத்தங்களுக்கு இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற பலர் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர்.
நிபந்தனைகள் இதோடு மட்டும் நிற்கவில்லை. ஆயுதமேந்தி போராடிய ஈபிஆர்எல் எஃப், புளாட், டெலோ போன்ற கட்சிகள் தமது ஆயுதங்களைக் கைவிட வேண்டும், மேலும் அரசுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க துணைபோகக் கூடாது, இதர ஆயுதமேந்தியக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதிலும் பிரச்சனைகள் இருந்தன என்று சிவராம் என்னிடம் தெரிவித்திருந்தார். இதற்கு அப்பாற்பட்டு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் தமக்குளிருத பிணக்குகளை களைந்து முன்னாள் போராளிக் குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த ஒருங்கிணைப்புக் குழுவுக்குச் சொல்லப்பட்டது.
“ஆயுதமேந்தியவர்களைக் கூட சமாளித்து ஒப்புக்கொள்ள வைக்க முடிந்தது, ஆனால் சூரியனையும் சைக்கிளையும் இணங்க வைக்க படாதபாடுபட வேண்டியிருந்தது“ என்று அந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த மற்றொருவர் வேறொரு சந்தர்ப்பத்தில் இந்த எழுத்தாளரிடம் கூறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆகியோருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் இருந்த பகை ஊரறிந்த விஷயம்.
இப்படியான இழுபறிகள் மற்றும் கடும் முரண்பாடுகளுக்கு இடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று சேராத அல்லது சேர விரும்பாத கலவையான ஒரு கூட்டணி உருவானது. நான்கு கட்சிகள் இணைந்து குறைப் பிரசவத்தில் பிறக்கும் சூழலுக்கு ஆளான அந்தக் கூட்டமைப்பை அவசர கதியில் உருவாக்கின. இதில் கீரியும் பாம்புமான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் இரண்டு முக்கியக் கட்சிகளாகவும், ஈபிஆர்எல்எஃப் மற்றும் டெலோ ஆகியவை `ஜுனியர் பார்ட்னராகவும்` இணைந்தன. அந்த நான்கு கட்சிகளும் நீறுபூத்த நெருப்பாக உருவாக்கியது தான் த தே கூ.
அந்த கூட்டமைப்பு தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகளின் மறுவுருமாகவே திகழ்ந்தது. அந்த கூட்டமைப்பிற்கு யார் தலைமை ஏற்பது, எந்த சின்னத்தில் போட்டியிடுவது, யார் யாருக்கு என்னென்ன பதவிகள், யார் இறுதி முடிவை எடுப்பார்கள், இவர்கள் கூறுவதை புலிகள் கேட்பார்களா அல்லது புலிகள் வலியுறுத்துவதை இவர்களால் நிறைவேற்ற முடியுமா, இதர தமிழ் கட்சிகள் இந்தக் கூட்டமைப்பை எப்படி நோக்கும் என்று ஏராளமான பிரச்சனைகள். ஆனாலும் அப்போதிருந்த சூழலில் பெரும்பாலான தமிழர்களுக்கும் சரி, விடுதலைப் புலிகளுக்கும் சரி ஒரு `குடை` அமைப்பு தேவைப்பட்டது.
இப்படித் தொடங்கிய கூட்டணியின் பயணம் எப்படியிருந்தது, அவர்களால் இலக்கை அடையை முடிந்ததா? போன்றவை அடுத்த பகுதியில்………..