(மன்னார் நிருபர்)
(01-11-2021
மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு , உளுந்து மற்றும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான விதைகள் வழங்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) இடம் பெற்றது.
நிலையான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் அனுசரனையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று திங்கட்கிழமை காலை முதல் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
-பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கமநல அபிவிருத்தித் தினைக்களத்தில் வைத்து விவசாயிகளின் விவசாய ஊக்குவிப்பை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உளுந்து மற்றும் பயறு செய்கைக்கான விதையினங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், பிரதேச செயலாளர்கள், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. சகீலா பானு, உதவி கமநல சேவை ஆணையாளர் மெரீன் குமார் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.