ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை மாத்திரமே தாம் எதிர்பார்ப்பதாகவும் அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ, ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் என்றோ தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.
நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஆராதனைகளின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அப்பாவி மக்கள் எவ்வித காரணமும் இன்றி கொல்லப்படுவதற்கு ஏதுவாய் அமைந்த காரணி எது என்பதையே நாம் தொடர்ந்தும் வினவிக் கொண்டிருக்கின்றோம். இதனை தெரிந்து கொள்வது எமது உரிமையாகும்.
எனவே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக வெளிப்படுத்துமாறு நாட்டின் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இதனை மீண்டும் அரசியல் தலைவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
மாறாக அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ இ ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.