(சிவா பரமேஸ்வரன்-மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்)
பல ஆண்டுகளாகத் தென் இந்தியாவில் குறிப்பாக அவசர உணவாக அறியப்பட்டது உப்புமா அல்லது கிச்சடி. இதை விரைவாகச் செய்யலாம். இதற்கு அடிப்படையானது ரவை. அத்துடன் வெங்காயம், இருந்தால் தக்காளி மற்றும் பச்சைமிளகாய் (கொச்சிக்காய்) இருந்தால் நிமிடங்களில் சுடச்சுடச் சுவையான இந்த உணவைத் தயார் செய்துவிடலாம். இப்போது இந்தியா மட்டுமின்றி இப்போது பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பிரபலமாகிவரும் கிச்சடி உப்புமாவின் ஒரு மேம்பட்ட பரிமாணமாகும். இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. கிச்சடியில் வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றிற்கு அப்பால் நாம் விரும்பும் காய்களைச் சேர்க்க முடியும், உதாரணமாக கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் போன்றவை அதற்குச் சுவை கூட்டும்.
அதைச் செய்வது (உருவாக்குவது) சுலபம், பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும், சரியாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் சுவையாகவும் இருக்கும். ஆனால் சேர்க்கப்படும் பொருட்கள் சரியான வீதத்தில் இல்லாமல் இருந்தால் கிச்சடி சந்தோஷத்திற்கு பதிலாக சங்கடத்தை ஏற்படுத்தும். எனினும் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு கிச்சடிக்கு ஒரு சிறப்பு குணாம்சமும் உண்டு. அதாவது அந்த கலவையில் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; ஒன்றோடு ஒன்று இணைந்து செல்ல வேண்டும் என்பதில்லை மற்றும் எதுவும் இல்லாமலும் அது இருக்கும். சுருங்கச் சொன்னால் எது எதோடு வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளும் ஒரு முறை சேர்ந்தது போல் மறுமுறை சேர வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும் என்பதில்லை. இதை அடிப்படையாக வைத்துத் தான் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு ஒரு குறுகிய நோக்கத்திற்காக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியை
`கிச்சடி` பொலிடிக்ஸ் என்று அழைக்கும் முறை இப்போது வழக்கத்தில் வந்துவிட்டது. கிச்சடிக் கூட்டணியில் கொள்கை என்பதற்கெல்லாம் இடமில்லை. அதில் ஒரே நோக்கம் வாக்கு வங்கி சிதறாமல் இருப்பது, மற்றும் எப்படியோ ஆட்சிக்கு வருவது ஆகியவை மட்டுமே.
இந்த கிச்சடி இலக்கணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பொருந்தும். ஏன்?….அடிப்படையில் அதிலிருந்த கலவை…இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அக்டோபர் 2001 இல் நான்கு கட்சிகள் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் ஒரு கிச்சடி கூட்டணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற் அரசியல் கூட்டணி உதயமானது. அதில் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியோருடன் ஆயுதக் குழுவாக இருந்து அரசியல் கட்சியாக உருமாறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ பி ஆர் எல் எஃப்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ( டெலோ) ஆகியவை இணைந்தன. இதில் ஆளுமை என்கிற வகையில் அதிகம் பலம் வாய்ந்ததாக உதய சூரியன் சின்னத்தைப் பெற்றிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் அதில் அங்கம் வகித்திருந்த இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவையே இருந்தன. ஈபிஆர்எல்எஃப் மற்றும் டெலோ அன்றும் சரி இன்றும் சரி பெயரளவிலேயே அரசியல் கட்சிகளாக இருந்தன, கூட்டணி பலத்திலேயே அவர்களின் அரசியல் தங்கியிருந்தது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை போன்றே த தே கூ ஆரம்பம் முதலே தத்தளித்தது. அந்த கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் அன்று முதல் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தர், சைக்கிள் கட்சி என்றழைக்கப்படும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் நல்லைய்யா குமரகுருபரன், டெலோ சார்பில் ஸ்ரீகாந்தா மற்றும் ஈபிஆர்எல்எஃப்பின் கந்தையா (சுரேஷ்) பிரேமச்சந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்ட நாலவரில் குமரகுருபரன் சைக்கிள் கட்சியிலிருந்து வெளியேறி மற்ற கட்சிகளுக்கு சென்றுவிட்டார். ஸ்ரீகாந்தாவும் டெலோவிலிருந்து விலகி வேறு கட்சிகளுக்கு சென்று தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில் உள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈபிஆர் எல் எஃப் கட்சியும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.
ஆகவே 2001 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது இல்லை என்பதே உண்மை மற்றும் யதார்த்தம். கூட்டமைப்பு இப்படி உடைந்து போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலவோட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் பல மாறுதல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக அந்த கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றம் சென்று அதில் வெற்றி பெற்றது தனிக்கதை. அதன் பிறகு கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இன்றுவரை இலங்கை தமிழரசுக் கட்சியே இருந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் என்ற முறையில் சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராகவும் இரண்டு தசாபத்தங்களாத் தொடருகிறார். கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக 2004 ஆம் ஆண்டு முதல் வீடு உள்ளது. அதற்கு முன்னர் அவர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
தொடக்கத்திலிருந்து இரண்டு கட்சிகள் வெளியேறியதை அடுத்து புளாட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற பலமும் போர் முடிந்த பிறகு மெல்ல மெல்லச் சரிய ஆரம்பித்தது. பத்மினி சிதம்பரநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, அரியநேந்திரன் போன்ற பலரால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியவில்லை.ஆனாலும் வடக்கு-கிழக்குப் பகுதியிலிருந்து 2001, 2004, 2010, 2015 மற்றும் 2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகப்படியான இடங்களை வென்றது.
ஆனால் மாகாணசபைத் தேர்தல்களில் பார்த்தால், கூட்டமைப்பின் நிலை ஆரோக்கியமாக இல்லை என்பதை உணரக் கூடியதாக உள்ளது. கிழக்கில் போருக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த விநாயகமூர்த்தி முரளிதரனுடன்(கருணா) இருந்து பின்னர் அவருடன் முரண்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றிய சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைக்கு 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதலமைச்சரானார். அதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர் என்ற பெயரையும் அவர் பெற்றார். கிழக்கு மாகாணம் மூவின மக்களும் செறிந்து வாழும் பகுதி என்றாலும், அந்த தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது அல்லது அவ்வாறு செய்யுமாறு விடுதலைப் புலிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. முக்கிய தமிழ்க் கட்சிகளின் கூட்டணியாக பார்க்கப்பட்ட த தே கூ இத்தேர்தலில் போட்டியிடாததால், கிழக்கில் சிவநேசதுரை சந்திரகாந்தன் `பிள்ளையான்` தலைமையிலான அரசு பதவியேற்று ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அத்தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாமல் புறக்கணித்தது சரியல்ல, அது தவறான செயலாகும் என்ற விமர்சனம் இன்றளவும் உள்ளது. அதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் பிரதான தமிழ்க் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் ஒரு இடத்ததை இழந்ததோடு மட்டுமின்றி தனது பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டமைப்பு பங்குபெற்றாலும் மூவின மக்கள் பெரும்பாலும் சரிசமமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் எதிர்கட்சியாக மட்டுமே வரமுடிந்தது. அடுத்து 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலும் அதற்கு பின்னர் நடைபெற்ற அரசியல் கூத்துகளும் உலமறிந்தது.
இன்றைய நிலையில் கூட்டமைப்பில் பிராதான கட்சியாக இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உட்கட்சி மோதல் அதிகரித்து வருவதை மறுக்க முடியாது. அதற்கு பல காரணங்கள். இதில் நீறுபூத்த நெருப்பாக வடக்கு-கிழக்கு மோதலும், வடக்கிற்குள்ளேயே யாழ்ப்பாணம்-வன்னி மோதல்கள், கிழக்கே மட்டக்களப்பு-திருகோணமலை மோதல்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி வலுவில்லாமல் இருக்கும் கூட்டமைப்பிற்குள்ளே இருக்கும் கட்சிகளுக்கு இடையேயும் கடுமையான முரண்பாடுகள் உள்ளன. கூட்டமைப்பின் நிலைமை ஆரோக்கியமாக இல்லை என்பதற்கு அண்மைக் காலத்தில் மிகச் சிறந்த உதாரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவர்களுக்கு கிடைத்த ஒரு போனஸ் ஆசனத்தை யாருக்கு அளிப்பது என்பதில் எழுந்த சர்ச்சை, கடும் வார்த்தைப் பிரயோகங்கள், வெளிப்படையான ஏச்சுக்கள் ஆகியவற்றை அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் கண்டனர். தேர்தலில் தோல்வியடைந்த மாவை சேனாதிராஜாவுக்கே அந்த ஆசனம் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுக்க அது நிராகரிக்கப்பட்டு, கிழக்கே அப்பாறை மாவட்டத்திற்கான தமிழர் பிரதிநிதித்துவமாக தவராசா கலையரசனுக்கு அந்த இடம் அளிக்கப்பட்டது. மாவை அந்த ஆசனத்தைக் கோரியதில் நியாயம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்தச் சம்பவம் கையாளப்பட்ட விதம் கூட்டமைப்பிற்குள் ஆழமான விரிசல்கள் இருப்பதைக் காட்டியது. உரசல் விரிசலானது, அதை இன்றுவரை ஒட்டவைக்க முடியவில்லை.
கூட்டணி அல்லது கூட்டமைப்பு என்றால் அதிலுள்ள அனைவரும் சமமாக நடத்தபப்ட வேண்டும் என்பதே பொதுவான விதி அல்லது மரபு என்று சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் கூறினாலும், அவர்களுக்குச் செவிசாய்க்க சம்பந்தர் தயாராக இல்லை. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இசைவாகச் செயல்பட்டால் கூட்டணியில் இருக்கலாம் அல்லது வெளியேறலாம் என்பதே அவரது நிலைப்பாடாகத் தோன்றுகிறது. மேலும் ஆயுதமேந்தியவர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் ஏதும் அளிக்கப்படாது என்பதிலும் அதன் தலைவர் உறுதியாக இருந்தார். இதனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியேறி கடந்த தேர்தலில், கூட்டமைப்பால் முதலமைச்சராகப்பட்ட விக்னேஸ்வரனுடன் இணைந்து கூட்டமைப்புக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டு இருந்த வாக்கு வங்கி மற்றும் செல்வாக்கையும் இழந்தார்.
வடக்கு மாகாண சபை தேர்தலில் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கருதப்படும் மாவை சேனாதிராஜாவை ஓரங்கட்சி அரசியல் அனுபவமே இல்லாத ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் முதல்வராக நிறுத்தப்பட்டார். இதிலும் பிரச்சனை எழுந்தது. ஆனால் இந்த முன்னெடுப்பிற்கு கூட்டமைப்பிற்குள்ளே முழு ஆதரவு இருக்கவில்லை. ஆனால் தலைவர் சம்பந்தர் தான் எடுப்பதே முடிவு அதுவே இறுதியானது என்கிற வகையில் செயல்பட்டார் என்கிற விமர்சனத்திற்கு ஆளானார். பின்னர் விக்னேஸ்வரன் அவருடனே முரண்பட்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறி சுரேஷ் பிரேம்சச்சந்திரன் மற்றும் வேறு சிலருடன் இணைந்து புதுக்கட்சி ஆரம்பித்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் மட்டுமே வென்றார். அவரது செயல்பாடுகளாலும் கூட்டமைப்பு மேலும் வலுவிழந்தது.
இப்படி இடியப்ப சிக்கலில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு எதிர்காலம் என ஒன்று உள்ளதா?………..தொடரும்……..