பருத்தித்துறையிலே தும்பளை என்றொரு அமைதியான கிராமம் இருக்கிறது. அக் கிராமத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பண்டிதர்கள், விவசாயிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக தனக்கே உரிய தாற்பரியங்களுடன் கோவில்கள், தேவாலயங்கள் சூழ்ந்த அழகிய ஒரு சிறிய பகுதியாக தும்பளை மேற்கு என்ற கிராமம் இருக்கிறது. தும்பளை மேற்கில் கொம்பலட்டியில் விசித்த திரு. பாலகிருஷ்ணன் (1931 -1991) திருமதி கமலாம்பிகை பாலகிருஷ்ணன் (1938 – 2009) தம்பதிகளுக்கு இணுவில் மக்லியொட் மருத்துவமனையில் 12.09.1959 இல் பிறந்தவர்தான் இரகுவரன்.
சிறு வயதிலேயே கல்வியிலும், கலைகளிலும், விளையாட்டிலும் மிக ஆர்வமுள்ளவர். சரஸ்வதி பூஜை நாட்களில் கலை நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இரகுவரன் நடத்துவார். ஒரு பழைய ரங்குப் பெட்டியில் (Trunk ) மேளம் அடித்து லிப் ஸ்டிக்கும் பூசிக் கொண்டு குயிடெக்க்ஷும் அப்பிக் கொண்டு ஆச்சி ஓடிப் போட்டா ஆய் ஊய் மீனாச்சி எலிகள் பட்டாளம் என்ற pop பாடல்களை இசைத்து எம்மையெல்லாம் மகிழ்விப்பார். ஒரு பெட்டியினுள் மின் குமிழை ஒளிரச் செய்து ஒரு சிறிய சதுர வடிவான துவாரத்தை ஏற்படுத்தி. அதனூடாக வருகின்ற ஒளியின் முன்னே தடித்த மட்டையில் ஆண், பெண், விலங்குகள் போன்ற உருவங்களை அசைத்து காட்டி அதன் விம்பத்தை சுவரிலே விழுத்தி அதன் மூலம் கதைகளை சொல்லி சிறுவர்களை பரவசப் படுத்துவார். இதிலிருந்து ஆரம்பித்தது அவரது கலைப் பயணம்.
இரகுவரன் சிறுவனாக இருக்கும் போதே அவரது தந்தையார் புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தமையினால் இரகுவரனுக்கும் அம்புலிமாமா வாங்கி கொடுப்பார். அதை அவர் விருப்புடன் வாசிப்பது மட்டுமல்லாது சிறுவர்களாக இருந்த எமக்கும் வாசிக்கத் தருவார். சிறிது சிறிதாக கல்கி, சிரித்திரன், வீரகேசரி பிரசுரங்கள் என ஏனைய புத்தகங்களையும் சிறு வயதிலேயே வாசிக்கப் பழகிக் கொண்டார். பிற்காலங்களில் பருத்தித்துறையில் இருந்த மயில்வாகனம் வாசிகசாலையும் நண்பர் குலசிங்கம் அவர்களின் புத்தக கடையும் அவரின் அறிவுத் தேடலுக்கு தீனி போடும் இடமாகியது.
தும்பளை சிவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்ப கல்வியை ஆரம்பித்தவர், 1972 இல் ஹாட்லி கல்லூரி அனுமதி பரீட்சையில் சித்தி பெற்று அக் கல்லூரியில் உயர்தரம் வரை பயின்றார். சிவப்பிரகாச வித்தியாசாலையில் நாடகம், விளையாட்டு ஆகியவற்றுக்கான வலுவான அடித்தளம் இடப்பட்டது. சிவப்பிரகாச வித்தியாசாலையில் குமணன், சங்கிலியன் போன்ற நாடகங்களில் நடித்திருக்கிறார். நாடகப் போட்டிகளிலும் பங்கு பற்றினார். 1971 இல் சங்கிலியன் நாடகத்தில் காக்கைவன்னியனாக நடித்திருக்கிறார். சிவப்பிரகாசாவித்தியாசாலை சார்பாக ஓட்டப் போட்டிகளிலும் ஏனைய பாடசாலைகளுடன் போட்டியிட்டு சான்றிதல்களைப் பெற்றிருக்கிறார்.
ஹாட்லி கல்லூரியில் படிக்கும் காலத்தில் Abraham இல்லத்தின் சிறந்ததொரு மெய் வல்லுனராக குறிப்பாக ஓட்டப் பந்தய வீரனாக தட கள போட்டிகளில் தனது திறமையினை வெளிப் படுத்தி இருந்தார். 1973 ஆம் ஆண்டு Under-13 இல் 200m, 300m ஓட்டப்போட்டிகளில் முதலிடம் பெற்றார்.
அதுவே ஹாட்லி கல்லூரியில் அவரது விளையாட்டுத்துறையின் ஆரம்பமாகும். க. பொ. த. உயர்தரத்தில் உயிரியல் பாடத்தில் சிறப்பாக பயின்று கொண்டிருந்தார். இவ்வாறான திறமைகளை பாடசாலை நாட்களில் வெளிப் படுத்தி இருந்தமையினால் மாணவர் தலைவராக (Prefect) பொறுப்பேற்று தனது ஆளுமையையும் தலைமைத்துவ பண்பையும் வெளிப் படுத்தி இருந்தார்.
க.பொ. த. உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்றார். படிப்பிலும் தனது திறமையை வெளிப் படுத்தி இருந்தார். வைத்தியராக வருவார் என்று ஊரவர்களின் எதிர்பார்ப்பு, அப்போது அறிமுகமான தரப்படுத்தல் முறையினாலும், அப்போதைய அரசினால் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கூடுதலான மாணவர்கள் உள் வாங்கப் பட்டதனாலும் பழைய பாடத் திட்டத்தை தொடர்ந்த ரகுவரனுக்கு துரதிஷ்ட்ட வசமாக பல்கலைக் கழக அனுமதி
கிடைக்கவில்லை. அதன் பின்னர் CME என்கின்ற டியூட்டோரியில் விஞ்ஞான பாடத்தை கற்பித்தார். 1984 இல் அரசாங்க விஞ்ஞான ஆசிரியராக களுத்துறை மக்கோனா அல் – ஹசனியா மகாவித்தியாலயத்தில் ஆசிரிய பணியை ஆரம்பித்தார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இருபாலையில் இயங்கிய நேரத்தில் ரகுவரனும் ஆசிரிய பயிற்சியை இரு வருடங்கள் (1988 -1989 ஆகிய ஆண்டுகளில்) தொடர்ந்தார்.
குயிலோசை என்றொரு கை எழுத்து சஞ்சிகை தும்பளை மேற்கு சனசமூக நிலையத்துடன் தொடர்புடைய இளைஞர்களால் எழுபதுகளின் பிற்பகுதியில் வெளியிடப் பட்டது. அதனுடன் சம்பந்தப் பட்டவர்களை சரியாகத் தெரியவில்லை. எனினும் இரகுவரனும் அதில் ஈடுபாடு காட்டியிருந்தார். சிறுகதைகள் எழுதும் ஆர்வத்தை தூண்டியது குயிலோசை என்ற கையெழுத்து சஞ்சிகைதான். 1982 இல் சிரித்திரன் நடாத்திய பாரதி நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டிக்காக பாலரகு (பாலகிருஷ்ணன் ரகுவரன்) என்ற பெயரில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற ஒரு சிறுகதையை எழுதி இரண்டாம் பரிசை தட்டிக்கொண்டார். இதுவே அவரின் அங்கீகாரம் பெற்ற முதலாவது சிறுகதையாகவும், எழுத்தாளராக பரிணாமம் அடைவதற்கு இரகுவரானால் போடப் பட்ட பிள்ளையார் சுழியாகவும் இருந்தது. இதன் உத்வேகத்தால் எழுதப் பட்ட சூரியனும் கறுத்துப் போச்சு என்ற மற்றுமொரு சிறுகதை 1986இல் சிரித்திரனில் வெளியாகியது. இதன் களமாக எமது வீட்டில் இருந்த பதுங்கு குழியே அமைந்தது. 1987 இல் மல்லிகையில் நிலாக்காலத்து சோகம் என்ற சிறுகதையையும் எழுதி இருந்தார்.
ஒரு விடயத்தை வாசித்தால் அது பற்றி மேலும் பல தேடல்களை மேற்கொண்டு பல ஆய்வுகள் செய்து பூரண அறிவைப் பெறுவதிலும் ஆர்வம் அதிகம் உள்ளவர். பறவைகள் பற்றி அறிய ஆர்வம் கொண்டு அது பற்றிய நூல்களை கற்று. காணும் பறவைகளின் பின்னால் திரிந்து அதன் நடத்தைகள் பற்றி நிறையவே அறிந்ததை நான் அறிவேன். வானில் தோன்றும் உடுக்களைப் பற்றி சில காலங்கள் ஆராய்ந்தார். அதற்காக இரவினில் வீட்டுக் கூரையின் மேல் ஏறி நிற்பதை நான் எங்கள் வீட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். நாட்டுக் கூத்துக்கள் பற்றிய ஆராய்ச்சியின் போது இரவினில் கூட உடுக்கு அடித்து பாடுவது எங்கள் வீடு வரை கேட்டிருக்கிறது.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் மன்றத்தின் தலைவராக இருந்ததனால் பல விடயங்களை செய்வதற்கு முடிந்தது. போதை என்ற வைத்தியர்களின் கட்டுரைகள் அடங்கிய நூலை தமிழ் மன்றத்தின் ஆதரவுடன் தொகுப்பாளராக இருந்து 1989 இல் வெளியீடு செய்தார், இங்கிருக்கும் போது யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாக இருந்த பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் மௌனகுரு, கலாநிதி குழந்தை சண்முகலிங்கம், கலாநிதி சிதம்பரநாதன் போறவர்களுடனும், மாணவர்களாக இருந்த (தற்போது விரிவுரையாளராக இருக்கின்ற) ஜெய்சங்கர், சிறீ கணேசன், அகிலன் போன்றோரின் தொடர்பு ஏற்பட்டது. அதனால் நாடகம் சம்பந்தமான அறிவுத் தேடலுக்கு சரியானதொரு இடம் அமைந்தது. இக் காலப் பகுதியில் தான் பேராசிரியர் மௌனகுருவும், கலாநிதி சண்முகலிங்கமும் இணைந்து உருவாக்கிய மகாகவியின் புதியதொரு வீடு நாடகத்திற்கான பயிற்சிப் பட்டறையை சில மாதங்கள் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் நாடக நடிப்பு சம்பந்தமான நுணுக்கங்களை அறியக் கூடிய அரிய வாய்ப்பு ரகுவரனுக்கு கிடைத்தது. 1989 இல் பேராசிரியர் மௌனகுரு, கலாநிதி சிதம்பரநாதன், பிரான்சிஸ் ஜெனம் ஆகியோரின் வழிகாட்டலில் ஒரு வருட நாடக களப் பயிற்சியைப் பெற்றார். இதில் ஏற்பட்ட உந்துதலினால் 1991 இல் நாடகமும் அரங்கியலும் பட்டப் படிப்புக்கு தன்னை ஒரு வெளிவாரி மாணவனாக இணைத்துக் கொண்டார். 1996 இல் BA (Honours) Special in Drama and Theatre பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்திட்டத்தில் வெளிவாரியாக பட்டம் பெற்ற முதல் மாணவனும், கடைசி மாணவனும் ரகுவரனே என்பது தும்பளையைச் சேர்ந்த எமெக்கெல்லாம் பெருமையே. வடமராட்சியில் நாடக மரபுகள் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து படப் பின் படிப்பு செய்வதற்கும் (MPhil ) அவருக்கு அனுமதி கிடைத்தது.
1990.01.01 இல் ஹாட்லிக் கல்லூரியிற்கு விஞ்ஞான ஆசிரியராக அளுத்கம இலிருந்து மாற்றலாகி வந்தார். நாடகமும் அரங்கியல் என்கின்ற பாடத்தையும் கற்பிக்கத் தொடங்கினார். ஹாட்லியும் ஐந்து ஆண்டுகள் இடம்பெயர்ந்து விட்டு தனது சொந்த மண்ணுக்கு வந்தது.1988 இல் நடந்திருக்கவேண்டிய ஹாட்லியின் 150 ஆவது ஆண்டுவிழாவை 1990 இல் கல்லூரியில் நடத்தத் தீர்மானித்து இருந்தனர். ''ஆச்சிசுட்ட வடை''என்ற சிறுவர்நாடகத்தைப் பழக்கி 150 ஆவது ஆண்டுவிழாவில் ஹாட்லி கல்லூரியில் அரங்கேற்றினார். 1990 இலிருந்து 2019 வரையிலான 30 ஆண்டுகள் ஹாட்லி கல்லூரியிலும் வேறு பல பாடசாலைகளிலும், புலோலி ஞானசம்பந்தர் கலை மன்றத்திலும் சொந்தமாக தயாரிக்கப்பட்ட பல நாடகங்களும், குழந்தை சண்முகலிங்கம், பேராசிரியர் மௌனகுரு போன்றோர்களின் பல சிறுவர் நாடகங்களும் ரகுவரானால் பயிற்றப் பட்டு மேடையேற்றப்பட்டன. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளும், சூழல் மாசடைவதை தடுப்பதற்கான விழிப்புணர்வுகளும் அவரது அநேக நாடகத்தில் பிரதான களமாக இருந்தது.
தும்பளைக் கிராமத்திலே ஒரு பெரும் வரலாறே புதைந்திருக்கிறது என்று அது பற்றி அறிவதற்காக பல வீடுகளுக்கும் ஏறி இறங்கியதிலுருந்து ஆரம்பமானதுதான் அவரது சமூகவியல் பற்றிய ஆராய்ச்சிகள். அவ் ஆராய்ச்சியின் பலனாக 2001 இல் உருவானதுதான் அவரது முதலாவது சமூகவியல் ஆவணமான தும்பளையின் வரலாற்றை, கலாச்சாரத்தை, கல்வியை, கலையை பற்றி கூறும் ஊரும் வாழ்வும் என்ற நூல். அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்த போதும் எதிர் விமர்சனகளும் இருந்தது உண்மைதான். ஆயினும் தனி ஒருவனாக நின்று அந்த நூலை வெளியிட்டது ஒரு பெரும் வெற்றி தான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2012 இல் பருத்தித்துறையின் வரலாறு, வாழ்கை முறை, பாடசாலை மரபுகள், விளையாட்டு மரபுகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை கூறும் பருத்தித்துறையூராம் என்ற இரண்டாவது சமூகவியல் ஆவணத்தையும் வெளியிட்டிருந்தார். கல்லூரி நாடகங்கள், பண்டைத் தமிழர் நாடகங்கள், வடமராச்சியில் நாட்டுக் கூத்துக்கள் என்ற நாடகம் சம்பந்தமான நூல்களும் கண்டல் தாவர சாகியம் என்ற சூழலியல் சம்பந்தமான நூலும் தொடராக இரகுவரானால் வெளியிடப்பட்ட நூல்கள் ஆகும்.
பிற் காலத்தில் சூழல் வளங்களையும் தொல் பொருட்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற பேரவாவில் முகப்பு புத்தகம் மூலம் பல விடயங்களையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கின்றார். குறைந்த பட்ஷம் அவை அழிவதற்கு முன்னும் புகைப்படம் எடுத்து அதனை அதனை ஆவணப் படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் அலைந்து திரிந்து பலவற்றை சேர்த்தும் வைத்துள்ளார். இந்த விடயத்தில் அவருக்கு தேவையான ஆளணியும் நிதி வசதியும் இருப்பின் இன்னும் நிறையவே அவரால் செய்ய முடிந்திருக்கும். இவரின் திறமையையும், கலையை வளர்ப்பதில் இவரின் சேவையையும் இனம் கண்டுகொண்ட
தும்பளை மேற்கு கலை பண்பாட்டுக் கழகத்தினர் நாடகச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து கலைவாருதி, யாழ் முத்து என்கின்ற பட்டத்திற்கும் சொந்தக்காரர் ஆனார். அவர் நாடகத்திற்கு ஆற்றிய சேவைக்காக அண்மையில் (October 2021) வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு அவரிற்கு கலைக் குரிசில் என்ற பட்டத்தை வழங்கி
கௌரவித்து இருக்கிறது.
திருவாளர் இரகுவரன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இன்னும் பல சேவைகளை கலைக்கும் நம் சமூகத்திற்கும் ஆற்றவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.
கலாநிதி க. வாகீசர்