தீபச்செல்வன்
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மாபெரும் இனவழிப்பை சந்தித்த பிறகும் அந்தக் குருதி காய்வதற்கு முன்னரே ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லை என்ற குறை ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் எந்த வித்தத்தில் அணுகப்படுகிறார்கள் என்பதைதான் தெளிவாக உணர்த்துகிறது. இதில் தமிழர்கள் வருந்துவதற்கு அவசியம் இல்லை. ஆனால் தமிழர்கள் தங்கள் இருப்பு குறித்து மிகுந்த சிரக்தை எடுத்துக்கொள்ள வேண்டியதைதான் உணர வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் அடிப்படையில் ஜனாதிபதி அதிகாரத்தின் கீழ் இச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்பது சிங்களவர்களையும் சிங்களப் பேரினவாதிகளைவிடவும் பேரினவாதக் கொள்கைகளுக்கு துணைபோகக் கூடிய முஸ்லீம்கள் நான்கு பேரும் இந்த செலயணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைமைப் பொறுப்பை கலாகொட அத்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளமைதான் நகைச்சுவையான அதே நேரம் பயங்கரமான தீர்மானமாகும். ”ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற விடயதானத்தை ஆராய்ந்து, அதற்கான சட்டங்களை மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை முன்வைப்பதே இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும். இதில் தமிழர்கள் இல்லை என்று ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழர்களுக்கு எதிரான சட்டம் இயற்ற தமிழர்கள் தேவையில்லை என்பதுதான் அரசின் கொள்கையாக இருக்கலாம்.
கொழும்பில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஞானசார தேரரின் பொதுபலசேனா அமைப்பு வைத்திருந்த கொடியை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். ஸ்ரீலங்கா கொடியில் தமிழ், முஸ்லீம் இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற வண்ணங்களை நீக்கிய தனிச் சிங்களக் கொடியையே ஞானசார தேரரின் பொதுபலசேனா பயன்படுத்தியிருக்கிறது. அத்துடன் இது சிங்கள நாடு என்று பேரினவாதக் கடும் போக்கில் இவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் சிறுபான்மை மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
2009இற்குப் பிறகு மகிந்த ராஜபக்ச காலத்தில் பொதுபலசேனா உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் இன்றைய ஆட்சியாளர்களே இருப்பதாக ஸ்ரீலங்கா எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தின. ஸ்ரீலங்கா அரசின் பேரினவாதக் கடும்போக்குக் கருத்துக்களை பரப்புகின்ற முகவராக அவர் செயற்படுவதாகவும் தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்க பயன்படுத்தப்படுகின்ற கருவியாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிறுபான்மை இனங்களில் ஒன்றான முஸ்லீம்மக்கள்மீது கடுமையான வெறுப்பை ஞானசார தேரர் கக்கி வந்தார்.
2017இல் ஸ்ரீலங்கா பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசாரதேரருக்கு பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஆறு ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. 2019இல் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கு பொதுமன்னிப்பு அளித்தார். இப்படிப்பட்ட ஒருவரைத்தான், நீதிமன்றத்தை மதிக்காத சட்டத்தை மதிக்காத ஒருவரைத்தான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்தை இயற்ற ஜனாதிபதி கோத்தபாய தெரிவு செய்துள்ளார் என்றால் அந்தச் சட்டம் எப்படி இருக்கும் என்பதை உணரலாம்.
உண்மையில் ஸ்ரீலங்கா ஒரு விசித்திர நாடுதான். இங்கே போராளிகளைப் பயங்கரவாதிகள் என்பார்கள். குற்றவாளிகளை நீதிபதிகள் ஆக்குவார்கள். சட்டத்தை மதிக்காதவர்களை சட்டம் இயற்றும் செயலணிக்கு தலைவராக்குவார்கள். இனப்படுகொலை செய்பவர்களை ஆட்சியாளர்கள் ஆக்குவார்கள். கொலைகளை செய்பவர்களுக்கு விடுதலை கிடைக்கும். அப்படியொரு நகைச்சுவைக் கூத்தாகவே ஞானசாரதேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றலும் தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதில் உள்ள ஆபத்துக்களை நாம் அவதானத்துடன் உணரை வேண்டும். ஞானசார தேரரின் உருவாக்கமும் நோக்கமும்கூட இந்த சந்தர்ப்பத்தில் அம்பலமாகியுள்ளது.
1958இல் தனிச்சிங்கள சட்டத்தை அப்போதைய பிரதமர் பண்டார நாயக்கா உருவாக்கிய போது அதற்கு பின் தளத்தில் நின்றவர்கள் இன்றைய ஞானசார தேரர் போன்ற பிக்குளே. தனிச்சிங்கள சட்டம் இலங்கையில் பெரும் இரத்த ஆற்றை ஓட வைத்தது. ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்றழிக்கும் கருவியானது. இரும்புக் கம்பிகளை காய்ச்சி தமிழர்களினக் முதுகில் ஸ்ரீ என முத்திரையிட்ட கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் மக்கள் தனிநாடு குறித்து சிந்திக்கவும் அதுவே நியாயமென்ற மனநிலைக்குச் செல்லவும் தனிச்சிங்களச் சட்டம் வழிகோலியது.
58ஆம் ஆண்டில் இந்தக் கொடுமை நடப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையில் ஸ்ரீலங்காவின் சுதந்திரத்திற்காக தமிழர்களும் உழைத்தார்கள். தனிச்சிங்கள சட்டத்தை இயற்றிய பண்டார நாயக்காவை பிரித்தானிய சிறையில் இருந்து மீட்டு வந்தார் சேர் பொன் இராமநாதன். இலங்கைத் தீவு இரண்டாகப் பிரிக்கக்கூடாது என்ற நிலைப்பாடு எடுத்த தமிழ் தலைவர்களுக்குப் பரிசாக 58இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது தனிச் சிங்களத்தை பிரகடனப்படுத்தும் சிங்கள தேசத்திடமிருந்து தமிழர் தேசத்தை விடுவித்து பிரிந்து செல்வதே வழி என்றும் அத்தகைய தீர்மானத்திற்கு தமிழர்களை தள்ளியது பண்டாரநாயக்கா என்றும் அன்றைய சிங்கள தலைவர்களே குரலிட்டனர்.
அதற்கு ஒப்பான ஒரு நிகழ்வைத்தான் தற்போதைய அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ச எடுத்திருக்கிறார். ஸ்ரீலங்கா தற்போது பெரும் பொருளாதார பின்னடைவில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. தென்னிலங்கையில் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக கடும் அலைகள் வீசத் தொடங்கியுள்ளன. தற்போதைய அரச தலைவர் பெரும் வீழ்ச்சியையும் பொதுமக்களின் எதிர்ப்பையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக இத்தகைய சட்டம் ஒன்றை உருவாக்கி தென்னிலங்கையில் சிங்களப் பேரினவாத அலையை ஏற்படுத்தி தொடர்ந்தும் ஆட்சியைத் தக்க வைப்பதுவே திட்டமாகும்.
“தனியார் சட்டங்களை மனித உரிமைகள்சார் தரத்திற்கு அமைவாக மாற்றியமைப்பதாக இருந்தால், அதனைச் செய்வதற்கான இயலுமையும் நேர்மையுடைய பிரதிநிதிகளால் வழிநடத்தப்படுகின்ற தேர்ச்சிபெற்ற குழுவொன்று அவசியமாகும். இருப்பினும் தற்போது ஞானசாரதேரர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய புதிய ஜனாதிபதி செயலணி அதற்கு முற்றிலும் நேர்மாறானதாகவே காணப்படுகின்றது. எனவே செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக இரத்துச்செய்யவேண்டும்…” என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது
எனினும் இலங்கையில் தற்போதுள்ள சட்டங்களே சிறுபான்மையினரை குறிப்பாக ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கி அழித்து துடைக்கின்ற வகையில் இருக்கிறது. இந்த நிலையில் கோத்தபாயவின் சிந்தனையில் ஞானசார தேரரின் தலைமையில் இயற்றப்படுகின்ற ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இலங்கைத் தீவு முழுவதையும் ஒரே இனம் ஆக்கும் திட்டத்தையே கொள்ளலாம். அதாது தமிழ் பேசும் மக்கள் இல்லாதொழிக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுதையும் சிங்களவர் வசமாக்குவதாகவே அமையும்.
காலம் காலமாக ஸ்ரீலங்கா அரசின் சட்டங்களும் நடவடிக்கைகளையும் தமிழ் மக்களை ஸ்ரீலங்கா பிரஜைகள் இல்லை என்பதையே உணர்த்தியும் நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இதன் இன்னொரு உச்ச வடிவமாக பெரும் அபாயமாக ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றும் முயற்சி நடக்கின்றது. தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை என்பதை ஸ்ரீலங்கா அரசு உணர்த்துகின்ற போதெல்லாம் தமிழர்கள் தமது அடையாளத்தையும் இருப்பையும் தமது நிலத்தையும் பாதுகாக்க அறிவுபூர்வமாக செயல்படவேண்டும்.