-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.05:
கல்வியிலும் மொழிசிந்தனையிலும் மற்றும் இலக்கியப் படைப்பிலும் சமயம் கலவாதிருத்தல் சிறப்பு. மொழி அறிஞர்களின் பார்வையும் அதுதான். அந்த வகையில் மலேசிய அரச தமிழ் வானொலியான மின்னல் பண்பலையில் தமிழ் இலக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அமுதே தமிழே’ என்னும் நிகழ்ச்சியில் வாரம் தப்பாமல் சமய இலக்கியமும் இடம்பெறுவது பொருத்தமா என்பதையும் ஏற்புடையதுதானா என்பது குறித்தும் சான்றோர் பெருமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவ்வாறாக ஒரு சமய சார்புடைய கருத்து மட்டும் தொடர்ந்து இடம்பெற்றால், ‘அமுதே தமிழே’ என்னும் நிகழ்ச்சி தன்னுடைய இலக்கியப் பாட்டையை இழக்க நேர்வதுடன் அன்றி, தமிழை தாய்மொழியாகக் கொண்ட பிற சமயத்தவர் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்கவும்கூடும்.
அல்லது ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் எல்லா சமயங்களுக்கும் வாய்ப்பளித்து, அது இலக்கிய நிகழ்ச்சி என்பதையும் மாற்றிவிட வேண்டும்.
இதைவிட, 2021 அக்டோபர்த் திங்கள் நிறைவு நாளில்(தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு) இடம்பெற்ற வாராந்திர நிகழ்ச்சியான ‘அமுதே தமிழே’-வில் தீபாவளி புனைகதைகளை தமிழ் இலக்கியம் என்பதாக வரையறுத்தனர். இது, அப்பட்டமான தமிழ் துரோகம் ஆகும்.
மீனா குமாரி என்னும் அறிவிப்பாளர், ராஜ சேகரன் காலத்தில் அரச தமிழ் வானொலியான் மின்னல் பண்பலை வானொலியில் இருந்து இடைநீக்கப்-பட்டவர்; அதன்பின் டிஎச்ஆர் ராகா வானொலியில் அறிவிப்பு பணி மேற்கொண்டிருந்தார். இப்பொழுது, மின்னல் வானொலியின் நிருவாகியான கிருஷ்ணமூர்த்திக்கு மிகவும் பழக்கமானவர் என்பதால், மீண்டும் திடீரென்று மின்னல் வானொலியில் குதித்திருக்கிறார்.
அவர் படைத்த அமுதே தமிழே நிகழ்ச்சியின்போதுதான், தீபாவளி புனைகதைகளை தமிழ் இலக்கியம் என்று வலிந்து வலிந்து சொன்னார்.
உலகின் தொல்குடியினரான தமிழரின் ஆன்மிகப் பயணம் மிகமிக நெடியது; ஆதித் தமிழனின் ஆன்மிக எண்ணம், முதன்முதலில் பயத்தில்தான் உருவானது. ‘ஆ..’ என்னும் அலறல் சத்தத்தால் மருண்டபொழுதும் ‘ஓ’வென்ற மிரட்சிகலந்த ஓல ஒலியால் நடுங்கி ஒடுங்கிய வேளையிலும் உருவானதுதான் ஆதித் தமிழனின் ஆன்மிகப் பயணத்தின் தொடக்கப்புள்ளி.
இடி, மின்னல், சூரைக் காற்று, காட்டுத் தீ, திடீரென எதிர்ப்படும் கொடிய வன விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு மிரண்ட அந்நாளையத் தமிழன், இன்னொரு வகையாலும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து நிம்மதியை இழந்தான்.
வேட்டை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அக்காலத் தமிழன், காட்டை ஒட்டியப் பகுதிகளில் குறிப்பாக புதர்களை அண்டி அடைக்கலம் தேடிக் கொண்டிருந்தான். அந்த நாட்களில் தன்னுடன் வாழ்ந்த ஒருவன் இறந்து விட்டால், அவன் இறந்து விட்டான் என்பதை அறியாமலேயே, அசைவற்று நிலத்தில் சரிந்துகிடந்த சகமனிதனை தான் வாழ்ந்துவந்த புதருக்கு அருகிலேயே கிடத்திவிடுவான்.
இரண்டொரு நாட்களில் அந்த உடல் கெட்டு, அழுகுவதால் எழும் சகிக்க முடியாத நாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதவனாகவும் அதிலிருந்து மீளும் வழிவகை அறியாதவனாகவும் பரிதவித்தான்; போதாக் குறைக்கு, அழுகிய உடல்களை பிய்த்துத் திண்பதற்காக இரவு நேரங்களில் ஒன்றுகூடும் ஒநாய், நரி போன்ற விலங்குகளுடன் பிணந்தின்னி கழுகுகளும் பாம்புகளும் கூடி ஒன்றையொன்று அடித்துக் கொண்டு எழுப்பும் சத்தத்தாலும் கழுகுகளின் இரைச்சலாலும் நரிகள் எழுப்பும் ஊளையினாலும் இரவில் தூங்க முடியாமல் கொடுந்துன்பத்தை அனுவிப்பது அன்றாடம் தொடர்ந்தது.
இந்தக் கட்டத்தில்தான் அடைக்கலத்தைத் தேடி, தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கை அன்னையின் பல்வேறு வடிவங்களை வணங்க முற்பட்டான்.
பொழுது புலரும்பொழுதும் சாயும்பொழுதும் தோன்றும் செஞ்சூரியன், மழை, நெருப்பு, அருவி போன்ற இயற்கை வடிவங்களைத் தொழ தொடங்கியவன், கூடவே, வாலைக் குமரி வடிவினளான இளங்குமரியை உருவகம் செய்து, அவளின் கைகளில் வேட்டைக் கருவிகளையும் வைத்து வணங்க முற்பட்டான்.
இந்த முறைதான் பின்னர் கொற்றவை வணக்க முறையாக உருமாறி, இப்பொழுது இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள ஆறு கொள்கைகளில்(பெயருக்குத்தான் ஆறு; ஐயப்பன் வழிபாடு, அனுமன் வணக்கம், முனியாண்டி சாமி வணக்க முறை, சாய் பாபா வழிபாடு, காட்டேரி வழிபாட்டு முறை, சனி பகவான் வழிபாடு, குல தெய்வ வணக்கம், வீட்டுக்கு வீடு கடைப்பிடிக்கப்படும் முன்னோர் வழிபாடு, இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் அதிர்ஷ்ட தேவதையை வரவழைத்து வணங்குதல், அருள் வந்ததாகவும் வாக்கு சொல்வதாகவும் காட்டிக் கொண்டு ஆடும் மனிதர்களின் காலில் விழுதல், பலவித காவடிகளை சுமந்து செல்வோரிடம் சிரம் பணிதல், அன்னை-தந்தையின் தாள் பணிதல், நெருக்கடியான நேரத்தில் உதவி செய்பவரை ‘குறுக்கே வந்த கும்பிடபோன தெய்வம்’ எனல், மந்திரித்த கயிறை கையிலும் தாயத்தைக் கழுத்திலும் அணிதல், இல்லத்தரசியர் கணவனையே கண்கண்ட தெய்வமாக வணங்குதல் என்றெல்லாம் கணக்கிட்டால் இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள ஆன்மிகக் கொள்கைகளுக்கு எண்ணிக்கையே இல்லை) ஒன்றான சக்தி வழிபாட்டு முறை.
ஆதிகாலம், கற்காலம், உலோகக் காலம், பொது மறுமலர்ச்சிக் காலம், நதிக்கரையோரம் மலர்ந்த வேளாண்தொழில் நாகரிகக் காலம், மனிதன் நவீன நாகரிகத்தை எட்டியபின் தோன்றிய இயந்திர தொழில் காலம், காகிதமும் அச்சுத் தொழிலும் மலர்ந்த புதுயுகம், மொழியும் கல்வியும் உருவாகி அறிவியலுக்கு அடித்தளம் அமைத்த காலம் என தொடர்ந்து தமிழனின் ஆன்மிக எண்ணத்திலும் வழிபாட்டிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே வந்தது;
இதற்கிடையில், ஆட்சி நிருவாகம், உள்ளூரிலும் கடல்கடந்தும் மேற்கொண்ட வணிகம், அரசியல் சிந்தனை என புதுப்புது பாங்கு மனிதனிடத்தில் மலர்ந்ததால் அந்தந்தக் காலத்தே சமய சிந்தனையும் அடுத்தடுத்து மறுமலர்ச்சி கண்டு வந்தன.
இப்படியாக தமிழன் தன்னுடைய ஆன்மிகப் பயணத்தை காலந்தோறும் பரிமாண வளர்ச்சிக்கு உட்படுத்தி வந்த வேளையில், முல்லை நிலத்து மக்கள் தங்களின் வழிபாட்டு நாயகனாகக் கொண்டது தமிழ்க் கடவுள் என்னும் முருகனைத்தான்.
அதையடுத்து சைவ நெறி தழைத்தது. சைவ நெறியைப் பொறுத்தவரை, அது ஒரு முதிர்ச்சிபெற்ற முழு சமயமாக தமிழர்க்கு வாய்த்தது. காரணம் சக்தி வழிபாட்டையும் உள்ளடக்கிய முழுமுதற் கடவுளான சிவபெருமானை வழிபாட்டு நாயகனாகக் கொண்ட சமயமாக சைவம் விளங்கியது.
சைவ நெறிக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. தமிழரை தமிழர் ஆட்சி புரியாத காலத்தில் தமிழ் மொழி தழைக்கவும் துணை நல்கிய சமயம், சிவமயமான சைவ சமயம். ஆழ்வார் பெருமக்களும் நாயன்மார் சான்றோரும் போற்றிய சைவத்தில் பூசை, புனஸ்காரம, அபிஷேகம், ஆராதனைக்கு வேலை இல்லை.
தொண்டறம்.. தொண்டறம்.. தொண்டறம்.. என, தொண்டறமே சைவத்தின் மூலமாக அமைந்தது.
அடியார் பெருமக்கள், தன்னைக்கூட வணங்காமல், பிற அடியார்க்கு செய்யும் தொண்டையே தனக்கான தொண்டாகக் கருதிய சிவபெருமான், அத்தகைய சிவத் தொண்டர்களைத் தானாக அணுகி, அவர்களுக்கு அருளளித்த வரலாறு சைவ நெறியில் ஏராளம் உண்டு. அதனடைப்படையில், சைவக் குரவர்களை ஆண்டவனே இறங்க வந்து ஆட்கொண்ட வரலாறு சிவத்திற்கே உரிய தனிச் சிறப்பு. இதற்கு சரியான சான்று சிறு தொண்டர் வரலாறு.
இப்படிப்பட்ட சிவநெறிக்கு ஓர் அபகீர்த்தியும் உண்டு.
சைவம் உருவாதற்கு முன் தமிழர்கள் பற்றி இருந்த பெருஞ்சமயம் சமணம். சமணத்திற்கு சற்றே முன் உருவாகி பரந்துபட்ட மதமாக விளங்கியது பௌத்தம். மௌரிய சக்கரவர்த்தி அசோகப் பெருமன்னன் கலிங்கப் போரின் வெற்றிக்குப் பின் மனம்மாறி, போரை வெறுத்து, அமைதி மார்க்கத்தை மேற்கொண்டு பௌத்தத்தை ஏற்று அதை உலகெங்கும் பரப்பினான்.
அதனால்தான், இலங்கை, சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளிலெல்லாம் பௌத்தம் இன்று பரவி விரவி இருக்கிறது.
அப்படிப்பட்ட பௌத்தம் இன்று இந்தியாவில் இல்லை என்றே கூறலாம்; அதேவேளை, பாடலிபுத்தரத்தை(இன்றைய பாட்னா) மையம் கொண்டிருந்த பௌத்தம் தமிழ் நாட்டிற்கு எட்டவில்லை. பௌத்தத்தைவிட வலிமையான நன்னெறியும் உயிரணைய கட்டொழுங்கும் சமணத்தின் மூல ஆதாரமாக இருந்தன.
திருக்குறளின் கடவுள் அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினவன், வேண்டுதல் வேண்டாமை இலாதவன், இருள்சேர் இருவினையும் சேராதவன், ஐந்தவித்தவன், தனக்குவமை இல்லாதவன், அறவாழி அந்தனன், எண்குணத்தான் என்னும் கடவுளர் பெயரனைத்தும் சமணக் கடவுளைக் குறிக்கும் சொற்களாகும். திருக்குறளில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்துகூட திருவள்ளுவரால் இயற்றப்படாமல், பின்னர் இடைச்செருகலாக இணைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனாலும், திருக்குறள் சமண இலக்கியத்தை சார்ந்ததுதான்.
சமண வழிபாட்டு நாயகனுக்கு உருவம் இல்லை; அவர் அருவ நிலையை எய்தவர்.
தவவாழ்வையும் கடுந்துறவறத்தையும் வலிந்து ஏற்றுக் கொண்ட சமண வாழ்க்கை முறையில் சிற்றின்பத்திற்கோ களியாட்டத்திற்கோ சிறிதும் இடம் இல்லை. தமிழிலக்கியத்தின் பெருமையை பறைசாற்றும் ஐம்பெரும் காப்பியங்-களில் மக்கள் காப்பியம் என புகழப்படும் சிலப்பதிகாரமும் ஆன்மிக எல்லையை வரையறுத்துக் கொண்ட மணிமேகலையும்கூட சமண சமய கருத்துகளைக் கொண்ட இலக்கியப் பெட்டகங்கள்தான். நாலடியார் என்னும் நன்னெறி இலக்கியமும் சமண நெறிக்குரியதுதான்.
அப்படிப்பட்ட சமண மதத்தினர் 10 ஆயிரம் பேரை ஒரே சமயத்தில் கழுவில் ஏற்றிக் கொன்றுவிட்டு, அந்த அதிரடியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதுதான் சைவம். ஆக, குருதி சகதியிலும் மனித மாமிசத்திலும் தவழ்ந்து தவழ்ந்து அசைவமான முறையில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டதுதான் சைவம்.
இவை யாவும் ஒருபுறமிருக்க, பௌத்தம், சமணம், சைவம் ஆகிய மூன்று சமய நெறிகளில் பௌத்தமும் சமணமும் வழக்கழிந்து ஒழிந்துவிட்டன. சைவமும் ஏறக்குறைய அந்த நிலையை எட்டி வருகிறது. 20-ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை ‘தமிழும் சைவமும்’ தமிழர்க்கு இரு விழிகளைப் போன்றவை என்று சொல்லப்பட்ட நிலைமாறி, இன்று ‘தமிழும் சமயமும்’ தமிழர்க்கு இருவிழியென சொல்லும் நிலையை ஆரியம் ஏற்படுத்திவிட்டது; தமிழரின் சைவ சமயத்தை இந்து சமயம் விழுங்கி விட்டது.
2021 ஏப்ரல் 14-ஆம் நாளில், கோலாலம்பூர் கலா மண்டபத்தில் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதாக தமிழ்மொழி-தமிழ் இன சிந்தனைக்கு மாறுபட்டவர்களாலும் ஆர்.எஸ்.எஸ். பற்றாளர்களாலும் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் டத்தோஸ்ரீ மு.சரவணன்கூட, ‘தமிழும் சமயமும்’ தமிழர்க்கு இரு விழியென சொன்னது சைவம் மெல்ல தமிழரிடம் இருந்து அகன்றுவிட்டது என்பதற்கான முத்தாய்ப்பான சான்றாகும்.
ஆரியம் என்னும் பார்ப்பனியம் சைவம், சமணம், பௌத்தம் போன்ற சமயங்களை அழிப்பதற்குக் காரணம், இந்த மூன்று சமயங்களிலும் சாதி ஏற்றத் தாழ்வில்லை; உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் கட்டமைப்பு இல்லை. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்த முச்சமயங்களும் எடுத்தியம்பின;
அத்துடன், இந்த சமயங்களில் பார்ப்பனர்கள் தங்களின் உயர்சாதி அந்தஸ்தை நிலைநிருத்திக் கொள்ள வாய்ப்பில்லை. சொர்க்கம்-நகரத்தைக் காட்டியும், முற்பிறவி-அடுத்தப்பிறவி எனச் சொல்லி பிறவிப்பயனை முன்னிறுத்தியும் கர்ம வினையைக் காட்டியும் பூசையையும் பரிகார வேள்வியையும் நடத்தி தாங்கள் பிழைப்பதற்கும் இந்த மூன்று சமயங்களிலும் வழியில்லை.
அதனால், பௌத்த சமயம் அது தோன்றிய மண்ணில் இருந்தே பிராமணர்களால் விரட்டப்பட்டது. சமண சமயத்தை ஏமாளியான பாண்டிய மன்னனின் துணை கொண்டு அழித்ததும் இதே ஆரியர்கள்தான். அடுத்து, இந்து சமயம் என்னும் கெட்டியான போர்வையைக் கொண்டு சைவ சமயத்தையும் மறைத்து விட்டனர்.
இன்றைய தலைமுறைக்கு சைவம் என்றால் என்னவென்றே தெரியாது. தெரிந்ததெல்லாம் இந்து சமயம் ஒன்றுதான்.
இந்த இந்து சமயம் எப்போது உருவானது?
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பிராமணர்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும் இந்து சமயம் கட்டியமைக்கப்பட்டது. அதுவரை, தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடியதில்லை; விநாயகர் சதுர்த்தி என்றால் என்னவென்றேத் தெரியாது.
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இந்து என்ற சொல்லேக் கிடையாது. ஆரியர்களால் உருவாக்கப்பட்ட நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஸுர், சாம, அதர்வனம் என்னும் நான்கு வேதங்களிலும் இந்து என்னும் சொல் இல்லை.
ஆரியர்கள்(பார்ப்பனர்கள்) தங்களின் பிழைப்பிற்காகவும் அவர்கள் தாங்கள்-தான் மிக உயர்ந்த சாதியினர் என்னும் பிம்பத்தைக் கட்டி அமைக்கவும் தேவதாசி முறை உருவாகவும் அடித்தளமாக இருந்தவை ஆலயங்கள்தான்; அவ்வாறு ஆலயங்கள் உருவாகக் காரணமான அர்த்தசாத்திரத்தை எழுதிய சாணக்கியன்கூட இந்து என்னும் சொல்லை அறியாதவன்.
பொதுவாக இந்து என்னும் சொல், வரலாறு நெடுகிலும் எந்த இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை; பக்தி இலக்கியங்களிலும்கூட இந்து என்னும் சொல் தென்படவில்லை.
இந்திய துணைக் கண்டத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன், இந்து என்று ஒருவரும் தம்மை அழைத்துக் கொண்டதில்லை. பல்வேறு அடையாளங்களு-டன் வாழ்ந்த பலதரப்பட்ட மக்களாகத்தான் விளங்கினர்.
தாங்கள் வாழ்ந்த இடம், பேசிய மொழி, சார்ந்திருந்த சாதி, புரிந்த தொழில், கொண்ட சமய நெறி ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தனி குழுவினராகத்தான் வாழ்ந்தனர்; அவ்வண்ணமே அடையாளப்படுத்திக் கொண்டனர்.
காஞ்சி காமகோடி பிடாதிபதி சொல்லியிருக்கும் கருத்தே இதற்கு சரியான சான்று:
“அவன்(ஆங்கிலேயர்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வோர் ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருகபக்தர், சூரியனைக் கும்பிடுவோர், எல்லை அம்மனை வணங்குவோர் என்றெல்லாம் நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதத்தினராக வாழ்ந்து கொண்டிருப்போம்; சைவர்களும் வைணவர்களும் ஒரே சாமியையா கும்பிடுகின்றனர்?. வைணவர்களுக்கு சிவன் சாமியேக் கிடையாது; தீவிர சிவ பக்தர் விஷ்ணுவை ஒருகாலும் இறைவனாக ஏற்கமாட்டார். இப்படிப்பட்டவர்களை யெல்லாம் எப்படி ஒரேக் குடையின்கீழ் கொண்டுவர முடியும்? வெள்ளைக்காரன் அவன் வசதிக்காக என்றைக்கு இந்து என்று பெயர் வைத்தானோ அன்றே (பிராமணர்களாகிய) நாமெல்லாம் பிழைத்தோம்” என்று காஞ்சி காமகோடி சுவாமி சொன்னதை நடுநிலை மனம் படைத்தோர் மனசாட்சியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பிரிட்டிஷ் இந்தியாவின் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு மக்கள் தொகை கணக்கு எடுப்பதில் பல்வேறு சவால்களும் இடர்களும் தொடர்ந்தன. மொகலாய சாம்ராஜிய காலத்தில் உருவான மற்றும் மதம் மாற்றப்பட்ட இஸ்லாமியர்களை கணக்கெடுக்க அவர்களால் எளிதில் முடிந்தது; அதைப்போல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவான மற்றும் மதம் மாற்றப்பட்ட கிறித்துவர்களையும் எண்ணிக்கையில் அடக்க முடிந்தது.
ஆனால் சைவர்கள், வைணவர்கள், சமண(ஜைன) சமயத்தினர், பௌத்தர்கள், சீக்கியர்கள், அம்மன் வழிபாட்டினர், மலைவாழ் மக்கள், சிறுதெய்வ வணக்க முறையினர் உள்ளிட்ட இன்னும் ஏராளமான தரப்பினரை எப்படி ஒருமுகப்படுத்துவது? எவ்வாறு கணக்கெடுப்பது என்னும் வகை தெரியாமல் ஆங்கில நிர்வாகத்தினர் திணறிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து பிரிட்டிஷ் மகாராணியாரும் இரண்டொரு முறை சளித்துக் கொண்டாராம். இந்தியர்களை அடக்கி ஆளத்தெரிகிய உங்களுக்கெல்லாம் அவர்களுக்கான எண்ணிக்கையை வகைப்படுத்த முடியவில்லையா என்று ஒருசில வைஸ்ராய்களிடம் கடிந்து கொண்டதும் உண்டாம். ஆனாலும், இந்தச் சிக்கல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
இதற்கிடையில், ஆங்கிலேய நிருவாகத்தில் உயர்பதவிகளில் அமர்ந்து தமக்கான இருப்பை வலுப்படுத்திக் கொள்ள பிராமணர்கள் பெரிதும் முற்பட்டனர். அந்த நாட்களில் அவர்கள்தான் படித்தவர்களாக இருந்ததால் அவர்கள் தங்களுடன் ஒருசில உயர்சாதி வகுப்பினரையும் துணைசேர்த்துக் கொண்டு கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும்விட தங்களுக்கே பிரிட்டிஷ் இந்திய அரசாங்க வேலைவாய்ப்புகளில் அதிக முன்னுரிமைதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கட்டத்தில்தான் இந்து என்னும் கூட்டு மத சிந்தனை உருவாகிறது. இவ்வாறு 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்து மதம் என்னும் கட்டமைப்பு உருவானபோது, யார் யார் இந்துக்கள் என்னும் வரையைரையை ஆங்கிலேய அதிகாரிகளிடம் இவர்களால் வைக்க முடியவில்லை.
அதனால், ஓர் எளிய ஏற்பாடாக, யார் யாரெல்லாம் இசுலாமியர் இல்லையோ, யார் யாரெல்லாம் கிறிஸ்துவர் இல்லையோ, மற்றவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று கூறினர். இது ஆங்கிலேயர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இதன் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது பிரிட்டிஷ் மகாராணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்துக்களுக்காக பொது சிவில் சட்டம் வரைவதற்காக பார்ப்பனர்கள் தங்கள்வசம் இருந்த மனுதரும சாத்திரத்தை தந்திரமாக ஆங்கிலேயர்களிடம் கொடுத்தனர். அதன் அடிப்படையில்தான் இந்துக்களுக்கான பொது சிவில் சட்டத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முதன் முதலில் இயற்றினர்.
இத்தகைய பொது சிவில் சட்டத்தைதான், பிரிட்டிஷ் இந்தியாவில் தலைமை நீதிமன்றமாக செயல்பட்ட பிரைவி கௌன்சிலும்(Privy Council) அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இந்து சமயக் கட்டமைப்பு இந்திய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்தே உருவானது. இந்தியா, விடுதலை அடையப் போகிறது என்பது உறுதியானவுடன், ‘எதிர்கால இந்தியா ஓர் இந்து தேசமாகத்தான் அமைய வேண்டும்’ என்பதை பாலகங்காதர திலகர் என்னும் மராத்திய சித்பவன பார்ப்பனரைப் போன்றவர்கள் முன்னெடுத்தனர்.
பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்த முன்னெடுப்பும் ஒரு காரணமாக அமைந்தது என்றால் அதை மறுப்பார் எவரும் இருக்கமுடியாது.
உண்மையில் இந்து என்னும் சொல், வரலாறு நெடுகிலும் எந்த இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை. அந்தச் சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் அராபியர்கள்தான். அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் தங்களின் பயணத்தை நேர்த்தியாக திட்டமிட்டு மேற்கொண்டனர்.
இந்தியாவை நெருங்கியதும், பொழுது சாய்வதற்குள் சிந்து நதியைக் கடந்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இரவில் ஆற்றைக் கடப்பது ஆபத்தாக முடியும் என்பதாலும் சில வேளைகளில் படகு கிடைக்காமல் விடியும்வரை இக்கரையிலேயே குளிரில் காத்திருக்க நேரிடும் என்னும் காரணத்தாலும் மாலைப் பொழுதுக்குள் சிந்து நதியைக் கடந்து விடும்படி தங்களின் பயணத்தைத் அமைத்துக் கொண்டனர்.
அந்த நேரத்திலெல்லாம், ஆஃப்கானிஸ்தானைக் கடந்தபின், சிந்து நதியின் அக்கரைப் பகுதியை ‘அல் ஹிந்த்’ என்றுதான் அவர்கள் அழைத்தனர். இந்தச் சொல், குறிப்பிட்ட எந்த மக்களையோ அல்லது பிரிவினரையோ குறிப்பதாக இல்லை; அல்லது ஏதோவொரு மதக் குழுவினரை குறிப்பிடுவதாகவும் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, சிந்து நதிக் கரையை ஒட்டியிருந்த நிலப் பகுதியை அடையாளப்படுத்தத்தான் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர்.
ஆனாலும், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையதும் நாகரிக மேன்மைமிக்கதுமான கிரேக்க நாகரிக மண்டலத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் ‘ஹிந்துஷ்’ என்னும் சொல் காணப்படுகிறது. இதைத் தவிர, உலகின் வேறு எந்தப் பகுதியிலோ அல்லது இலக்கியப் படைப்புகளிலோ இந்து என்னும் சொல் இல்லை. இந்த ஹிந்துஷ் என்னும் சொல், சிந்து நதியை ஒட்டியிருந்த இடத்தைதான் குறிப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.
எப்படியோ இந்து மதம் உருவானபின், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தங்களின் மேலாண்மை இருப்பதைப் போல, சுதந்திர இந்தியாவிலும் தங்களை உயர்ந்த இடத்திலேயே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முயன்ற பார்ப்பனர்கள், அதற்கு இந்து சமயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.
இந்து திவிரவாதத்தையும் கையில் எடுத்தனர். அப்பொழுது உருவாக்கப்பட்டு பேரளவில் முன்னெடுக்கப்பட்டதுதான் விநாயகர் சதுர்த்தி தீபாவளி போன்ற பண்டிகைகள். சைவ நெறியைக் கொண்டிருந்த தமிழர்கள் அதுவரை தீபாவளியைக் கொண்டாடியதில்லை; அறிந்ததும் இல்லை.
மலேசியாவில் கொண்டாடப்படும் ஹரி ராயா என்னும் பண்டிகை இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ரம்ஜான் பண்டிகை என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இதில், இந்துக்களும் இணைந்து ஒற்றுமையுடன் கொண்டாடி வந்ததை யெல்லாம் மாற்றி அமைத்ததுடன், இந்துக்கள் இனி தீபாவளியைத்தான் கொண்டாட வேண்டும் என்று மடைமாற்றியதில் திலகருக்கு தனி இடம் உண்டு.
திடுதிப்பென அறிமுகம் கண்ட தீபாவளிக்கு பல கதைகள் உள்ளன. அவை யாவும் அண்மைக் காலத்தில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனையப்பட்ட புராணக் கதைகள்.
தமிழர் வாழ்ந்த நிலப்பகுதிகளிலும் தமிழைப் பேசியோரிடமும் சொல்லப்பட்ட – பரப்பப்பட்ட கதை இராவணன் அல்லது அரக்கன் தொடர்புடைய கதை.
திராவிட-ஆரிய பண்பாட்டுப் போர் பன்னெடுங்காலமாகவே உள்ளும் புறமுமாக நடந்து வருகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இது நடைபெற்று வருகிறது. ஆரியர்கள் தங்களை மேலோராகவும் தமிழர்களை அரக்கர்களாகவும் உருவகப் படுத்தி அதன் அடிப்படையில் திருமால் என்னும் வைணவ சமயக் கடவுள் தமிழன் என்னும் அரக்கனைக் கொள்வதும் அவன் இறந்த நாளில் இந்து சமய முறைப்படி திவசம் அனுசரிப்பதும்தான் தீபாவளி பண்டிகையின் அடிப்படை.
எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலகாரம், புத்தொளி, புது வாழ்க்கை என்பதெல்லாம் இடைச் செறுகல். அரக்கனை வீழ்த்துவதற்காக திருமால் தந்திரமாக பன்றி அவதாரம் எடுப்பது, கடலை பாயாக சுருட்டுவது என்னும் புனைகதைகளை யெல்லாம் இன்றைய நாட்களில் ஒளித்துவிட்டு- மறைத்துவிட்டு தீமையை நன்மை வென்ற நாள் எனவும், இருளை ஒளி வென்ற தினம் என்பதாகவும் தலுக்காக பேசி வருகின்றனர்.
தீபம்’ என்றால் ஒளிவிளக்கு; ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாக விளக்கேற்றி வழிபடும்போது இருள் நீங்கி மனிதர்கள் ஒளிபெறும் பண்டிகையே தீபாவளி என சுறுக்கமாக சொல்லிச் செல்கின்றனர்.
உண்மையை உரக்க சொல்ல வேண்டுமென்றால், தமிழர் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை இந்து என்னும் சொல்லைப் போலவே தீபாவளி பண்டிகை குறித்தும் எந்தக் குறிப்பும் எங்கேயும் இல்லை. தமிழில் முதலில் உருவான அகராதி, வீரமாமுனிவர் என்பார் இயற்றிய சதுரகராதி ஆகும். 1732-இல் வெளியிடப்பட்ட அந்த நூலில் தீபாவளி குறித்த எந்த தகவலும் இல்லை.
பிராமணரான உ.வே.சாமிநாத அய்யரின் வாழ்க்கை வரலாற்றில்கூட தீபாவளி பண்டிகை குறித்து எந்தத் தகவலும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமெனில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட தமிழர்கள் தீபாவளியயைக் கொண்டாடியதில்லை.
பொதுவாக, தமிழர் வாழ்வியல் மரபுப்படி, விழாக்கள் அனைத்துமே அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில் (ஜனவரி மாதத்திற்குப் பின்) கொண்டாடப்படுவது தான் வழக்கம்.
தவிர, வெளி தேசங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்து பயணக் குறிப்புகளையும் மக்களின் சமூக பழக்கவழக்கங்களையும் எழுதிய வெளிநாட்டவரின் பயணக் குறிப்புகளில்கூட தீபாவளிப் பண்டிகைக் குறித்து எந்தப் பதிவும் கிடையாது என்று தொல்லறிஞர் பொ. வேல்சாமியார் பதிவுசெய்துள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது
ஆனால், கார்த்திகை மாதத்தில் தீபம் அல்லது சுடலையை ஏற்றி சடங்குகளைச் செய்யும் நிகழ்வுகள் இருந்திருக்கின்றன என்றும் அவற்றுக்கும் தற்போது கொண்டாடப்படும் தீபாவளிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
பண்பாட்டு ஆய்வாளரான தொ. பரமசிவனும் பழந்தமிழ்நாட்டில் தீபாவளி என்ற பண்டிக்கை இல்லை என்கிறார். ‘சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்’ என்ற கட்டுரையில் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டுத் திருவிழாக்களின் பொதுவான கால எல்லை தை மாதம் முதல் ஆடி மாதம் வரையே ஆகும். தமிழகம் வெப்ப மண்டலத்தில் உள்ள நிலப்பகுதியாகும். எனவே வேளாண் தொழில்சார்ந்த பணிகள் இல்லாத காலப்பகுதிதான்(ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை) தமிழர்களின் திருவிழாக் காலமாக அமைந்துள்ளது.
இதேத் தீபாவளி திருநாள், இராம காதையின்படி, 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்தபின் இராமபிரான் தன் இல்லாள் சீதை மற்றும் தம்பி பரதனுடன் அயோத்தி நகரைநோக்கி ஊர்வலமாக வந்த சமயத்தில் பொது மக்கள் வழிநெடுகிலும் தீபம் ஏற்றி அவர்களை வாழ்த்தி வரவேற்றனர் என்றும் அந்த வழக்கமே பின்னாளில் வட இந்தியாவில் தீபாவளியாக மாறியதாகவும் கதையுண்டு.
உண்மையில், இந்தத் தீபாவளி பண்டிகையை சமண மதத்தில் இருந்து பார்ப்பனர்கள் இறக்குமதி செய்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
எது எவ்வாறாயினும் மலேசியத் திருநாட்டைப் பொருத்தவரை, பல்லின மக்கள வாழும் சூழலில் தீபாவளி பண்டிகை என்பது, இந்தியர்களின்-இந்துக்களின் பெரும் அடையாளமாக பரிணமித்துள்ளது என்பது உண்மைதான்.
தீபாவளி பண்டிகையை ஊரோடு ஒட்ட ஒழுகல் என்னும் சமூக நல்லிணக்கக் கருத்தின் அடிப்படையில் அவரவரின் விருப்பிற்கேற்ப கொண்டாடி குதூகலிப்பதில் பிழை இல்லை.
அதற்காக, தீபாவளிக்காக இடைக்காலத்தில் சொல்லப்பட்ட புரான இதிகாச புனைகதைகளை தமிழ் இலக்கியம் என்று வலியுறுத்திச் சொல்வது மாபெரும் தமிழ்த் துரோகம்.
இதை அப்பட்டமாக புரிந்துள்ள மீனா குமாரியும் அதற்கு வழியமைத்துக் கொடுத்த மின்னல் வானொலி நிருவாகி கிருஷ்ணமூர்த்தியும் தமிழ்ச் சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நாளை எதிர்கொண்டாக வேண்டும்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24