திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416- 332-0269
“ நல்லதைச் சொல்லென்றும் நல்லதைச் செய்யென்றும்
நயம்படச் சொல்லும் தாயே
நஞ்சு எண்ணங் கொண்டு இச்சையாய் அலைவாரை
நசுக்கிடும் அன்னை நீயே
பொல்லாத செயலினைப் பொடிப் பொடியாக்கிடும்
பொன்சுடர் தீபம் நீயே
புகழுடைய வாழ்விற்கு பொன்முடி சூட்டியே
பூத்தூவி வாழ்த்துவாயே.”
இச்சம்பவத்தின் பின்னர், இத்தகைய உக்கிரமூர்த்தியால் மக்களுக்கு இன்னல் ஏற்படும் என்பதை உணர்ந்து, மந்திர, தந்திர கிரியைகளால் வைரவரை இடம்பெயர்த்துத் தூரத்திலுள்ள ஒரு மலையில் கொண்டுபோய் நிறுவினர். இவ்வாறான கர்ண பரம்பரைக் கதைகளும், வாய்மொழியாக நிலவுகின்ற கதைகளும், மக்களிடையே பயங்கலந்த ஒருவித பக்தியை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளிடம் ஏற்படுத்தியுள்ளது.
இந்து மதத்தில் காணப்படும் வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் பரம்பரை பரம்பரையாக மக்களிடையே நிலை கொண்டு காணப்படுகின்றது. அறிவு வளர்ச்சி மேலோங்கிக் காணப்பட்டபோதிலும், இவ்வாறான வழக்கிலுள்ள கதைகளால் மக்கள் ரூடவ்ர்க்கப்பட்டு, தொடர்ந்தும் தமது நம்பிக்கைகளை வளர்த்து வருவது கண்கூடு;. சிலவேளைகளில் சிலருடைய வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் இந்த நம்பிக்கைகளுக்கு மேலும் உரமூட்டுவதாகக் காணப்படுகின்றது.
இவ்வாலயத்திலே பூசை செய்து வந்த அந்தணர் ஒருவருக்கு ஏற்பட்ட சம்பவமொன்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். ஓருநாள் இவ்வாலயத்துள் சுருண்டு படுத்திருந்த ஒரு சர்ப்பத்தின்மீது தவறுதலாகப் பாரமான கிடாரமொன்றை அந்தணர் ஒருவர் தூக்கி வைத்துவிட்டார். கிடாரத்தினடியிலிருந்த சர்பம் நசுங்கி இறந்துவிட்டது. அந்தச் சர்ப்பத்தின் சாபத்தால் இவ்வாலயத்திலே பூசை செய்து வந்த அந்தணர் பரம்பரையில், ஏழு சந்ததிக்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை. ஏழு சந்ததிக்குப் பின்னரே ஆண் குழந்தை பிறந்தது. இக்கதையோடு தொடர்புடைய அந்தணர் பரம்பரை இக்கோயிலில் பூசை செய்து வருவது இக்கதை வெறும் கட்டுக்கதையல்ல என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டி, தெய்வநம்பிக்கை மேலும் வலுவடைய ஊன்றுகோலாகக் காணப்படுகின்றது.
ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் மீது மக்கள் கொண்ட ஆராத பக்தியால், இவ்வாலயத்தின் புனருத்தாரணவேலைகள் காலத்திற்குக் காலம் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, பிரம்மஸ்ரீ சு.கு. சோமாஸ்கந்தக்குருக்கள் காலத்தில் பல திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் தமது பதினாறாவது வயதில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பூசைப் பொறுப்பை ஏற்று நடத்த ஆரம்பித்தார். இவர் பொறுப்பேற்ற காலத்திலே ஆலய கர்ப்பக்கிரகமும், ஏனைய மண்டபங்களும் பழுதடைந்த நிலையிலே காணப்பட்டது. 1933 ஆம் ஆண்டு சில திருத்தவேலைகளைச் செய்து கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்தும் பல திருத்த வேலைகள் இடம்பெற்றன.
ஆலயத்தின் மகா மண்டபம், கோபுரமண்டபம் ஆகியவற்றைத் திருத்தியமைத்து 1947 ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வசந்தமண்டபத் திருத்த வேலைகளும், வேறு சில திருத்தவேலைகளும் நடைபெற்று மீண்டும் 1962 ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாகக் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. 1979 ஆம் ஆண்டு கற்பக்கிரகத்தைபூரணமாகத் திருத்தியமைத்து, அதிலே சுதைச் சித்திரங்களாகச் சப்தகன்னியர்கள் அமைக்கப்பட்டன. அர்த்த மண்டபத்தின் தென்புறத்திலே முச்சக்திகளும், வடபுறத்தில் அம்பாள், விநாயகர், முருகனும் அமைக்கப்பட்டனர். மகாமண்டபத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் திருவுருவமும், விமானத்தில் கௌரி அம்பாளும் நிறுவப்பட்டனர். ஸ்நபனமண்டபம் சிற்ப சித்திர வேலைப்பாடுகளோடு அழகுற அமைக்கப்பட்டது.
இவ்வாலயத்தின் மேற்தளத்தில் அட்டநாகபந்தனம், ராசிச்சக்கரம் என்பன சுதையினால் அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தெற்குப்பக்கம் மகாலெட்சுமியும், வடக்குப்பக்கம் சரஸ்வதியும் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர். சிம்மம், பலிபீடம், கொடித்தம்பம், மூலாதாரகணபதி என்பனவும், நாகதம்பிரான், பைரவர் ஆலயங்களும் அழகாகக் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. வெளிமண்டபத்தில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் திருவுருவம் சுதையினால் சித்தரிக்கப்பட்டுள்ளது. மண்டப வாசலுக்கருகே மணிக்கூட்டுக்கோபுரத்தை நாற்பதடி உயரத்திற்கு உயர்த்திக்கட்டி, அறுநூறு இறாத்தல் எடையுள்ள கண்டாமணி ஏற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான திருப்பணிகள் யாவும் காலக்கிரமத்தில் நடைபெற்று 1980 ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்வாறாகப் பல கும்பாபிஷேகங்கள் இவ்வாலயத்திலே நடைபெற்றுள்ளது.
காரணம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களும், ஆலய அமைப்பு முறைகளையும், கும்பாபிஷேக நித்திய, நைமித்திய விழா நெறிகளைத் தெளிவாக எடுத்தியம்புகின்றன. ஏன் இவ்வாறான கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன என்பதை அறிவது அவசியம். கும்பாபிஷேகம் நாலு வகைப்படும். அவை ஆவர்த்தம், அனாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரீகம் எனப்படும். கோவில் இல்லாத இடத்தில் புதிதாக ஆலயம் அமைத்து புதிதாக விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்தால், அதனை அனாவர்த்தம் என்று அழைப்பர். முன்பு ஆலயம் இருந்து இயற்கையின் சீற்றத்தினாலோ அன்றி வேறு வகையாலோ அழிவுபட்டு பின்னர் வரலாறுகளின் மூலமோ அன்றிக் கர்ணபரம்பரைக் கதைகளின் மூலமோ கண்டுபிடிக்கப்பட்டுச் சிறு ஆலயமாக வழிபாடியற்றப்பட்டு வந்து, புதிதான ஆலயத்தைப் பழைய இடத்திலே நிர்மாணித்து பிரதிஷ்டை செய்வது ஆவர்த்தம் எனப்படும்.
ஆலயத்திலுள்ள வர்ணங்கள் மற்றும் விக்கிரகங்களில் பிழை ஏற்பட்டாலும், மருந்து என்று கூறப்படும் அஷ்டபந்தனம் பழுதடைந்தாலும் செய்யப்படும் கும்பாபிஷேகம் புனராவர்த்தனம் என அழைக்கப்படும்.
கள்ளராலோ மற்றும் வேறு காரணங்களாலோ நித்திய பூசை தடைப்படால் செய்யப்படுவது அந்தரீதம் எனப்படும். ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பல தடவைகள் புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இதனைப் பெருஞ்சாந்தி விழா எனவும் அழைப்பர்.
–வளரும்…