(06-11-2021)
இளைஞர் ஒருவரை ஆடையின்றி சித்திரவதை செய்தமை தொடர்பில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான ரன்மல் கொடித்துவக்கு வுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரண்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட இருவர், இளைஞர் ஒருவரை தாக்கும் வகையிலான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
இந்நிலையில் அதனை மையப்படுத்தி பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. அதன்படி சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ரண்மல் கொடித்துவக்கு, இட மாற்றப்பட்டு பொலிஸ் வைத்திய மற்றும் நலன்புரி பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.
எனினும் அதன் பின்னர், அந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிஎல்ல பொலிஸ் நிலைய அறையொன்றில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரால் சித்திரவதை செய்யப்பட்டதாக தற்போது சுட்டிக் காட்டப்பட்டே விசாரணைகள் கோரப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இளைஞர் ஆடையின்றி சித்திரவதை செய்யப்பட்டமை குறித்து விசாரிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இளைஞர் சார்பில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.