(மன்னார் நிருபர்)
(7-11-2021)
சுபிட்சத்தை நோக்கி தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்ட மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜோதி நகர் உள்ளக வீதி நேற்று சனிக்கிழமை (6) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.தர்சின் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட காபட் வீதி சுமார் 23.33 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு தேசிய ரீதியில் குறித்த வீதி மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வைபவ ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், பொறியியலாளர்; றொயிஸ் டெல்பின் குரூஸ்,மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் அன்ரன் டபரேரா மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் பொது மக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.