சமசமாஜ கட்சியின் தலைவர் அறிவிப்பு
‘மக்களின் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண எம்மால் முடிந்தளவு முயற்சி செய்துவருகின்றோம். இது கோட்டாபாய அரசிற்கு அழுத்தங்கள் கொடுத்த வண்ணம் உள்ளோம். அரசாங்கம் பங்காளிக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக கூட்டப்படும் கலந்துரையாடல்களுக்கும் எம்மை அழைக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் மாற்று வழி யொன்றைத் தேடுவதைத் தவிர வேறு மார்க்கம் எம்மிடத்தில் இல்லை”
இவ்வாறு தெரிவித்தார், லங்கா சமகமாஜக் கட்சியின் தலைவரும். இலங்கையின் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் தனித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதன் பின்னணி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தாலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமைத்தும் எம்மை கண்டுகொள்வதில்லை.
இதுதொடர்பில் நாங்கள் வருத்தமடைகின்றோம். லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் என்றவகையில் கடந்த ஆகஸ்ட் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கடந்த வாரம் வரையும் கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் ஒரு தடவையேனும் ஜனாதிபதியோ பிரதமராே எம்மை அழைத்து கலந்துரையாடியதில்லை. அரசாங்கம் தங்களுக்கு நினைத்த பிரகாரமே செயற்பட்டு வருகின்றது.
அதனால் அரசாங்கத்தில் இருக்கும் 11 பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம்.
இதன்போது முக்கியமாக மக்களின் பிரச்சினை, நாட்டின் பொருளாதார பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கதைக்கின்றோம்.
விசேடமாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எம்மால் முடியுமானவரை முயற்சித்து வருகின்றோம். அரசாங்கத்துக்கு நாங்கள் வழங்குகின்ற அழுத்தங்களுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டு வந்தால், தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
அதனால் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல்களுக்கு எம்மையும் அழைக்கவேண்டும் என்றார்.