(சிவா பரமேஸ்வரன்-மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்)
இலங்கையில் போர்க்காலம் தொடங்கி இன்று வரை தீராமல் அல்லது தீர்க்க விருப்பமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை விசாரணையின்றி ஆட்களை தடுத்து வைப்பது. இது உடல் ரீதியான சித்திரவதை என்பதைவிட மன ரீதியான சித்திரவதை என்பதே உண்மை. மேலும் இப்படி ஆட்களை வழக்கு பதிவு மற்றும் விசாரணையின்றி தடுத்து வைப்பது அடுத்தவர்களுகான ஒரு பாடம் எனும் எண்ணப் போக்கும் அரசிடம் உள்ளது.
ஜனநாயக விழுமியங்களை கடைப்பிடிப்பதாகவும், நாகரீமான ஒரு சமூகம் நிலவுவதாகவும் கூறும் நாடுகளில் இப்படி நீண்ட ஆண்டுகளாக `சட்டவிரோதமாக` வழக்குப் பதிவு மற்றும் விசாரணையின்றி தடுப்பு வைப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும்.
ஆனால் இந்த இலக்கணங்களுள் இலங்கை வருமா என்று கேட்டால் அதற்கு விடை கிடையாது. ஏனெனில் அங்கு 40 ஆண்டுகளாக போர் என்ற போர்வையில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டதே நடைபெற்றுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இந்த விஷயம் தொடர்பில் தொடர்ச்சியாக பன்னாட்டு அழுத்தம் இலங்கை மீது அதிகரித்து வருகிறது. சர்வதேச நிதி நிறுவனங்களின் நெருக்கடி, கடன் கொடுக்க யாரும் முன்வராத நிலையில், ஏற்றுமதி வரிச்சலுகையான ஜி எஸ் பி + இலங்கைக்கு தொடர்ந்து கிடைக்குமா என்பதிலுள்ள கேள்விக்குறிகள் என்று பல அம்சங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் நாடு உள்ளது.
அவ்வகையில் பன்னாட்டுச் சமூகத்தையும், மனித உரிமை அமைப்புகளையும் சமாதானப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள இலங்கை வழக்கு விசாரணையின்றி நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சில முன்னெடுப்புகளைச் செய்ய விழைகிறது. அதன் மூலம் தம்மீதான நம்பிக்கை சிறிதேனும் அதிகரிக்கக் கூடும் என்று அரசு நம்புகிறது.
அவ்வகையில், பயங்கரவாத சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு, சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்குவதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூவர், சித்திரவதை செய்ததாகக் காவலில் உள்ள சேவ் தி பேர்ல்ஸ் அமைப்பின் மொஹமட் சுல்தான் கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர், தன்னை சித்திரவதை செய்த மூன்று பேரின் பெயர்களை கோட்டை நீதவான் பிரியந்த பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளார்.
பதினெட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு மதரஸாவில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமைக்காக மொஹமட் சுல்தான் கைது செய்யப்பட்டார்.
சித்திரவதை காரணமாக தனக்கு இன்னும் முதுகுத்தண்டு குறைபாடு இருப்பதாக அவர் கூறியதையடுத்து, அவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்பத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சட்டத்தரணி ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்கும் நோக்கில், சித்திரவதை செய்யப்பட்டதாக, அல் சுஹாரியா அரபுக் கல்லூரியின் இரண்டு ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
மொஹமட் சுல்தானை பிணையில் விடுவிப்பதற்கு, பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் மறுப்பு வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 10ஆம் திகதி வரை மொஹமட் சுல்தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினத்தில், வைத்திய மற்றும் பொலிஸ் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ஏப்ரல் 2020 இல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவர் மத்ரஸா பாடாலையில் விரிவுரை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னாஃப் ஜசீம்ஆகியோர் குறித்து இஸ்லாமிய நாடுகள் கடும் விசனம் தெரிவித்துள்ளன. அவர்கள் மீது தவறுள்ளது என்று அரசு கருதினால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் அல்லது அவர்கள் விடுதலைச் செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் இலங்கை மீது அதிகரித்து வருகின்றன.
அதே போன்று மிக நீண்டகாலமாக வழக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விஷயத்திலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் அழுத்தங்களை அளித்து வருகின்றன.
அடுத்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இலங்கை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை சர்வதேசம் அவதானித்து வருகிறது.