சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
உலகின் மிகவும் அறிவார்ந்த சமூகங்களில் ஒன்றென மானுடவியலாளர்களால் கூறப்படும் தமிழ்ச் சமூகத்தை இன்று ஆக்கிரமித்து அவர்களை முற்றாக மூளைச் சலவைச் செய்து திறந்த வாய் மூடாமல் பார்க்க வைக்கும் தொலைக்காட்சி தொடர்களும், சினிமாவும் ( அபூர்வமாக சிலவற்றைத் தவிர) அவர்களை வன்முறை கலாச்சாரம், முறையற்ற செயல்கள், கூடா நட்பு, பொருந்தாத கூட்டணி, ரத்தக்களறி ஆகியவற்றை யதார்த்தம் மற்றும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது.
அதுமட்டுமின்றி தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை அரசியல், ஆன்மீகம், மழை, வெயில், புயல் காற்று, பங்குச் சந்தை, விளையாட்டு, பெண்கள் பிரச்சனை, குழந்தைகள் விஷயம் எதுவென்றாலும் பழங்காலத்தில் ஆலமரத்தடியில் நான்கு பேர் அமர்ந்து- உலகம் முதல் உள்ளூர் விஷயங்கள் வரை- அனைத்தையும் அலசி ஆராய்ந்து தீர்வு கூறும் நான்கு பெரிசுகள் போல இந்த `நான் ஸ்டாப் நான்சென்ஸ்` எனும் விவாதங்களில் நான்கு பேரை அமர வைத்து பஞ்சாயத்து செய்வதை ஏற்றுக் கொண்டுள்ள தமிழர்கள் `இதுவும் கடந்து போகும்` என்ற நிலையில் உள்ளனர்.
அதேபோன்று திரையிலும், தெருக்களிலும் வாள் வெட்டுக்கள், துப்பாக்கிச் சூடுகளுக்குப் பழகிப்போன இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும் புலம் பெயர்ந்த தேசத்தில் உள்ளோர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நடக்கும் குத்து வெட்டுக்கள் புதிதாகவோ அல்லது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகவோ இருக்க முடியாது.
கொள்கைகளின் அடிப்படையில் இன்றி, `காலத்தின் தேவை` என்று கூறப்பட்டு உருவாக்கப்பட்ட அந்த கூட்டமைப்பின், கடந்தகால செயல்பாடுகள், நிகழ்கால நடவடிக்கைகள் ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த `கிச்சடிக் கூட்டணி` அதன் தேவையைக் கடந்துவிட்டதா என்றும் எண்ண வைக்கிறது. கூட்டமைப்பின் ஏற்றமும் இறக்கமும் சடுதியாக இருந்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவில் கூட்டமைப்பு கண்ட எழுச்சியும் ஏற்றமும் போருக்குப் பின்னரான காலத்தில் மெல்ல மெல்ல பலவீனமடைந்தது.
இதில் முக்கியமான ஒரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும்; அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் த தே கூ எப்படி உருவானது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. நான் அறிந்தவரை தமிழர்கள் வாக்கு சிதறக் கூடாது என்பதற்காக தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்று கூறுவதைக் காட்டிலும், உருவான ஒரு கூட்டணியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் என்பதே சரியாக இருக்கும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்-2000ஆம் ஆண்டில்- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெற்ற பின்னடைவே கூட்டமைப்பு உருவாக பிரதான காரணியாக இருந்தது.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அரசியல் கட்சியாக உருமாறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைக் கழகம், இரட்டைக் குதிரை சவாரி செய்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் வழிமுறையே என்று இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (அதில் பிரதான பங்கு வகித்த இலங்கை தமிழரசுக் கட்சி) ஆகிய கட்சிகளிடையே இருந்த முரண்பாடே அடிப்படையில் இணக்கப்பாடு இல்லாததற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. விடுதலைப் புலிகள் என்ற அச்ச உணர்வால் கட்டப்பட்டிருந்த நான்கு கட்சிகளின் கூட்டணி போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த பிறகு இந்த நால்வரைச் சேர்த்து கட்டப்பட்டிருந்த கயிற்றின் பிடி தளர ஆரம்பித்தது. முதலாவதாக சைக்கிள் கட்சி கழன்று கொண்டது. கூட்டமைப்பின் முக்கிய பங்காளியான வீட்டுக் கட்சியும், சைக்கிள் வெளியேறியது நல்லதே என்று கருதியது. ஆரம்பம் முதலே சம்பந்தருக்கும் சுரேஷுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. கூட்டமைப்பில் முக்கியப் பொறுப்பை எதிர்பார்த்த சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற அலங்காரப் பதவியே அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவருக்கோ அல்லது அவரது கட்சிக்கோ முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதில் சம்பந்தர் உறுதியாக இருந்தார். டெலோ அமைப்புக்கு தலைமையேற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் அமைதியின் திருவுருவமாக தலைவர் பேச்சுக்கு மறுபேச்சில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து இன்றுவரை கூட்டணியில் `கௌரவமாக` தொடருகிறார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி எப்படிச் செயல்படுமோ அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயல்படுகிறது என்ற விமர்சனங்களும் உள்ளன. அதாவது கொடுப்பதை வாங்கிக் கொண்டு சும்மா இருந்தால் கூட்டணியில் இடம் இல்லையென்றால் தாராளமாக வெளியே செல்லலாம் என்கிற நிலைப்பாடு. இதில் சில சமயம் டெலோவும் புளாட்டும் இணைந்து வீடு கட்சிக்கு எதிராக சில சமயம் கம்பு சுற்றுவதும் உண்டு. பின்னர் அது சும்மா பயிற்சிக்காக என்று கூறுவதும் உண்டு. எனினும் இந்த நீறு பூத்த நெருப்பாக இருக்கும் உட்கட்சி பூசல் விரைவில் வெடித்துச் சிதறும் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அப்படி நடைபெற்றால் அது `வெட்டு ஒன்று துண்டு இரண்டு கதை தான்`. `வெற்றிகரமாக` இருபது ஆண்டுகளைக் கடந்து சென்ற கூட்டமைப்பு அதே வகையில் 21 ஆம் ஆண்டையும் கடந்து செல்லுமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே. அதுவும் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசு கூறிய நிலையில், அது நடந்தால் இந்த உறவு பிரிவை நோக்கி வேகமாகச் செல்லத் தொடங்கும். பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியே இந்த ஒற்றுமைக்குப் பொறுப்பு. அவர்கள் தமது போக்கை மாற்றிக் கொண்டால் கூட்டணி தொடரும் என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள்.
`காலத்தின் கட்டாயம்` என்று யாருக்கும் புரியாத ஒன்றைக் கூறியே கூட்டமைப்பு தமது தவறுகளை நியாயப்படுத்தி வருகிறது. அதில் சில வரலாற்றுப் பிழைகளும் உள்ளன. பேய்க்குப் பயந்து பிசாசிடம் தஞ்சம் புகுந்த கதையை கூட்டணி தொடர்ந்து முன்னெடுத்தது.
இதில் இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. முதலாவது போர் முடிந்த பிறகு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்சவை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே இராணுவத்தின் முன்னாள் தளபதியான சரத் பொன்சேகாவை ஆதரித்தது. போர் முடிந்தவுடன் எழுந்து இன்னும் ஓயாத போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விஷயத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச மீது எந்தளவுக்கு அந்த குற்றச்சாட்டு உள்ளதோ அதே அளவுக்கான குற்றச்சாட்டு இறுதிப் போருக்குத் தலைமையேற்று `விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேன்` என்று சூளுரைத்து அதை நிறைவேற்றிய சரத் பொன்சேகா மீதும் அந்த குற்றச்சாட்டு உண்டு. அவரைக் கூட்டமைப்பு ஆதரிக்கப் போவதாகப் பேச்சுக்கள் எழுந்த போதே நான் கூட்டமைப்பில் இருந்த பலருடன் தொடர்பு கொண்ட போது யாரும் அந்த நிலைப்பாட்டிற்கான காரணத்தை நியாயப்படுத்தும் வகையில் கூறவில்லை. பொதுவாக அப்போது பேச்சாளராக இருந்து ஊடகங்களிடம் குறிப்பாக பிபிசி தமிழோசையிடம் பேசும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட இப்படி-அப்படி ஒரு பதிலையே கூறினார். “எம்மால் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடியாது- அதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்“ என்று சம்பந்தர் எனக்களித்த பேட்டியில் கூறினார். ஆனால் மஹிந்தவை ஆதரிக்க முடியாது அதனால் பொன்சேகாவை ஆதரிக்கிறோம் என்கிற நிலைப்பாடு ஏன் என்பதற்கான பதில் வழக்கம் போல “ நன்றி…….வணக்கம்“ என்பதே. அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வென்றார், கூட்டமைப்பு அரசியல் ரீதியாகத் தோல்வியடைந்தது.
சரி, அந்த தேர்தலில் `காலத்தின் கட்டாயம்` காரணமாக சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்த கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் அதே பிழையை மீண்டும் செய்தது. 2015 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே மஹிந்த எதிர்ப்பு நிலைப்பாடு என்று கூறி அவருடன் முதல்நாள் வரை இருந்த மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்தது. அதுவும் போரின் இறுதி நாட்களில் மஹிந்த ராஜபக்ச ஜோர்டான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனாவே இராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அதாவது குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16/17 ஆகிய நாட்களில் சிறிசேனாவே இராணுவ அமைச்சிற்கு தலைமையேற்றிருந்தார். நாட்டில் நல்லாட்சிக்கான ஒரு வாய்ப்பு, நாங்கள் மைத்ரி-ரணில் கூட்டணியை நம்புகிறோம், அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை அளிப்பார்கள், போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் என்றெல்லாம் கூறி அந்த கூட்டணியை ஆதரித்ததை நியாயப்படுத்தினார்கள். இத்தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வென்றார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற கூட்டணியில் இருந்தும் தோல்வியடைந்தது.
“சொல்லியுள்ளோம், செய்வார்கள், பேசினோம், பேசுவோம், நம்பிக்கையுள்ளது“ போன்ற பல்லவிகளையே தொடர்ந்து கூறினார்கள். ஆனால் மஹிந்த மற்றும் மைத்ரி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பால் கூட்டமைப்பால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதே யதார்த்தம். மைத்திரி-ரணில் மோதல் கூட்டமைப்பிற்குள் இருந்த மோதலுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. அவர்கள் தமக்குள் இருந்த பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் திணறிய நிலையில், தமிழ் மக்களின் பிரச்சனைகளை கவனிக்க எங்கே நேரமிருந்தது?
ஒரு முறை இருமுறை ஆயிற்று மூன்றாவது முறையாவது கூட்டமைப்பு சரியான முடிவை எடுத்ததா?……………தொடரும்………………..