ரோறன்ரோ ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழர் உரிமைக் குழுவின் பேச்சாளர் கற்பனா நாகேந்திரா வேண்டுகோள்
“மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் ஆகியவற்றின் மொத்த மீறல்களுக்காக இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முதன்முதலில் முயற்சி செய்யத் தொடங்கி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன.
அன்றிலிருந்து, இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையானது, தடையின்றித் தொடர்கிறது. 2015 ஆம் ஆண்டு அரசு தானாக முன்வந்து இணை அனுசரணை வழங்கிய ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களில் இருந்து தற்போதைய ஆட்சி ஒருதலைப்பட்சமாக விலகியது மட்டுமன்றி, எந்தவொரு உள்நாட்டு அல்லது சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்தும் ஆயுதப்படைகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாகச் சூளுரைத்துள்ளார்.
இந்தப் பின்னணியில், தமிழர் உரிமைக் குழுவும் மற்றும் ஏனைய தரப்பினரும் உலகளாவிய அதிகார வரம்பு மற்றும் சட்டத்தின் மூலமும், குறிப்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இடைக்கால நீதியை இடைவிடாமல் தேடுவதைத் தவிர, வேறு வழி இல்லை.”
இவ்வாறு ரோறன்ரோ ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழர் உரிமைக் குழுவின் பேச்சாளர் கற்பனா நாகேந்திரா வேண்டுகோள் விடுத்தார் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட மேற்படி ‘மெய்நிகர்’ சந்திப்பில் அவர் தொர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ‘ஈழத் தமிழர்களுக்கான நீதி வேண்டியும் இலங்கையில் தண்டனையின்மைக்கு எதிராகப் போராடும் ஒரு முக்கியமான சர்வதேச நடவடிக்கையாகவும், ரோம சாசனத்திற் கையொப்பமிட்டுள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகளுக்குள், ஈழத்தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கெதிரான குற்றங்களான துன்புறுத்துதல், நாடு கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் ரோம சாசனத்தின் 15 வது பிரிவின் கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளக் கோரும் தகவல் அளிப்பு அறிக்கை ஒன்றினை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் அலுவலகத்தில், தமிழர் உரிமைக் குழு சமர்ப்பித்துள்ளது.
இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள், குறிப்பாக 2009 இல் முடிவடைந்த நீண்ட உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் அட்டூழியக் குற்றங்களுக்கு ஆளானார்கள் என்பதற்கு பெருகிவரும் சான்றுகள் உள்ளன.
இலங்கை அரசின் தற்போதைய நடவடிக்கைகள் உள்நாட்டு நீதித்துறை நிறுவனங்கள் மூலம் இத்தகைய குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர விரும்பவில்லை என்பதை நிரூபித்துள்ளமையை இனம் கண்டு வெளிநாடுகளுடைய, உள்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்வதற்கு உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலமும், ஐசிசி உட்பட சர்வதேச மட்டத்தில் நீதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் இலங்கையின் ஆயுத மோதலைச் சுற்றியுள்ள தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபடுவதற்கு முன்வர வேண்டுமென்று, உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர், 2021 ஜனவரியில், அழைப்பு விடுத்தார்.
மியான்மார் ஃபங்களாதேஸ் நாடுகளில் இடம்பெற்ற வழக்குகளின் அடிப்படையிலும் முன்மாதிரியின் அடிப்படையிலும், இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் இழைக்கப்பட்ட, நாடு கடத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்குச் சர்லதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு சர்வதேச தமிழ் அகதிகள் உதவி வலையமைப்புடன்; இணைந்து எழுதப்பட்ட, தகவற் தொடர்பாடல் மேலும் விவாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.