இலங்கையில் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்த வேளை திடீரென உயிரிழந்த தென்னிலங்கை ஆசிரியை வருணி அசங்காவுக்கு வட மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பிலேயே இந்த முன்மாதிரியான அஞ்சலி ஏற்பாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இலங்கையில் முக்கிய பிரச்சனையாக வெடித்துள்ள அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கான தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக மாத்தறை தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியரான வருணி அசங்கா அகால மரணமடைந்தார்.
இந்நிலையில் அன்னாரின் தியாகத்திற்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தும் முகமாக வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காலையில் 5 நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது