2018 இல் ரொறன்ரோவில் அதிகமானவர்களை கொல்ல எண்ணிய நபரின் வேன் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த நிலையில் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி ஒருவரும் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், 65 வயதான Amaresh Tesfamariam என்பவர் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பரபரப்பான யங் வீதியில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அனா மினாசியன் என்பவர் வாடகை வேன் ஒன்றை வேகமாக செலுத்தி மக்களை கொல்லும் நோக்கோடு வாகனத்தால் தாக்குதலை நடத்தினார்.
கனடாவை மொத்தமாக உலுக்கிய இந்த கண் மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயங்களுடன் தப்பினர். இந்த சம்பவத்தில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரேணுகா அமரசிங்க என்னும் 45 வயதுடைய பெண்மணி கொல்லப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில் 2018 ஏப்ரல் 23ம் திகதி நடந்த இந்த இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவத்திற்கு பிறகு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட Amaresh Tesfamariam மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த வேன் தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடைசியாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள இந்த பெண்மணியின் மரணமும் ஓர் கொலை வழக்காகவே கருதப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை. அதற்கு காரணமான கொலையாளி மீது இன்னொரு கொலை வழக்கு பதியப்பட மாட்டாது என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது