(சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்)
சரித்திரப் பாடங்களில் சம்பவங்களைக் குறிப்பிடும் போது காலத்தை அறிந்து கொள்வதற்காக கி.மு அல்லது கி.பி என்று குறிப்பிடுவது வழக்கம். அதில் சில மாற்று கருத்துக்கள் இருந்தாலும், அது பொதுவாக கிறிஸ்துக்கு முன் அல்லது கிறிஸ்துக்கு பின் அன்று அறியப்படுகிறது. அதாவது 2020 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது அதற்கு பின்னர் என்று அதைப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் இராமாயணம் மற்றும் மகாபாரத காலங்களைக் குறிக்கும்போதோ அல்லது இதர காலங்களைக் குறிப்பிடும் போது கிருத யுகம், தூவபர யுகம், திரேதாயுகம் என்றும் தற்போதையக் காலத்தை கலியுகம் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது.
தற்போது கலிகாலம் நடைபெறுகிறது. எனவே சத்தியம், நீதி, நேர்மை, ஆகியவற்றுடன் ஜனநாயகம், உழைப்பு, போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதைப் பல முனிவர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பதை இந்து மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் கூறுகின்றனர்.
இதே கலியுகத்திலேயே தர்மத்தை மீறிச் செயல்படுபவர்களுக்கு என்னவாகும் என்றும் குறிப்புணர்த்தப்பட்டுள்ளது. அதில் தர்மம் என்பது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும். மேலும் அதில் போர் தர்மமும் அடங்கும். இப்படி பெரியவர்கள் மற்றும் புராணங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது இலங்கை தர்ம பூமியா அங்கு நீதி நேர்மை மற்றும் ஜனநாயகம் நிலவுகிறதா என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
இலங்கையில் `தந்தை` செல்வா தொடங்கிப் பல தமிழ்த் தலைவர்கள் ஆளுமை செலுத்தி வந்துள்ளனர். இதில் பொன்னம்பலம் இரமாநாதன், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ஆனந்தசங்கரி, ராஜதுரை, முருகேசு சிவசிதம்பரம், வல்லிபுரம் நல்லதம்பி நவரத்தினம் போன்ற பலர் வடக்கிலும் கிழக்கிலும், மலையகத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் போன்றோரும் அரசியல் மற்றும் தமிழ்ச் சமூகத்திற்காகப் பங்காற்றியுள்ளனர். இவர்களைபோன்று எண்ணற்ற தலைவர்களும் தொண்டர்களும் தமிழ் மக்களின் உரிமைகள், ஜனநாயகத்தின் ஆட்சி, தர்மத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு நியாயம் போன்ற விஷயங்களுக்குப் பாடுபட்டுள்ளனர். அவ்வகையில் இன்று இலங்கையில் ஆளுமை செலுத்தி வரும் மூத்த தமிழ்த் தலைவர் என்றால் அது சந்தேகத்திற்கு இடமின்றி ராஜவரோதயம் சம்பந்தர் ஐயா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மிக நீண்ட நாடாளுமன்ற அனுபவமும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ள சம்பந்தர் தமிழ் மற்றும் இலங்கை அரசியலைக் கரைத்துக் குடித்தவர். மும்மொழியிலும் நல்ல புலமை கொண்டவர். தெளிவாகவும், தான் சொல்ல விரும்புவதை தீர்க்கமாகச் சொல்லக் கூடியவர். இராஜதந்திர வழிமுறைகளைச் சிறப்பாகக் கையாளக் கூடியவர், 88 வயதைக் கடந்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று இப்படி அவரைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது அரசியல் அனுபவம் மற்றும் ஆளுமை காரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஒரு அரசியல் கலவை ஏற்படுத்தப்பட்ட போது அதற்குத் தலைவராக அவரே நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை மிகக் கடுமையான விமர்சனங்களைக் கடந்து அவரே இன்றளவும் கூட்டமைப்பின் தலைவராக நீடிக்கிறார்.
ஆனால் இன்னும் எவ்வளவு காலம் அவரால் கூட்டமைப்பிற்குத் தலைமையேற்று வழிநடத்த முடியும் என்கிற மிகப் பெரிய கேள்வி உள்ளது.
அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதர்க்காலத்தை ச.மு -ச.பி அதாவது சம்பந்தருக்கு முன் மற்றும்-அவர் காலம் மேலும் சம்பந்தருக்குப் பின் என்று பார்க்க வேண்டியுள்ளது. கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் அதன் பின்புலம், தேவை, 2000 ஆம் தேர்தலில் ஏற்பட்டிருந்த நெருக்கடி, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை ஆகியவை குறித்து முந்தைய மூன்று பகுதிகளில் பார்த்தோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் மற்றும் சூழல், போர் மற்றும் அதற்கு பிந்தையக் காலம் மற்றும் இன்றுவரை அந்த அமைப்புக்கு வேறு யாராவது தலைவராக இருந்திருக்க முடியுமா என்பதை நினைத்தும் பார்க்க முடியாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவரது மொழி ஆளுமை, யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளுதல், சர்வதேச சமூகம் பற்றிய புரிதல், நாட்டின் அரசியல் யாப்பிலுள்ள நுணுக்கங்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் தென்னிலங்கையில் கட்சித் தலைவர்களிடம் பேணி வந்த நட்பு, அவரது ஆளுமை காரணமாக அவர் பெற்ற மரியாதை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனினும், இவ்வளவு சிறந்த குணாம்சங்கள் இருந்தும் அவரும் சில இழுபறிகளுக்கு ஆளானார். சில தவறான முடிவுகளை எடுத்தார் அல்லது எடுக்கப்பட்ட சூழலுக்கு ஆதரவாக இருந்தார். இதில் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்ததைப் போல் மஹிந்த ராஜபக்சவை அல்லது ராஜபக்சக்களை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேதமதாஸ ஆகியோரை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தது, போர்க் குற்ற விசாரணையில் புலம்பெயர்ந்து வாழ்வோரின் அழுத்தங்களுக்கு ஆளானது என்று பல அம்சங்கள் உள்ளன.
தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்வில் சம்பந்தர் ஒரு பரிபூரணமான வாழ்வை வாழ்ந்துள்ளார்.
சம்பந்தர் ஐயாவுக்குப் பிறகு யார்? என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அவருக்குள் இந்த கவலை உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். பல முறை அவருடன் உரையாடிய போது அவர் அதை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதை வெளிப்படுத்தியுள்ளார்.கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பு நீண்டு உறுதியாக இருந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஜனநாயக ரீதியில் பெற முடியும் என்கிற நிலைப்பாட்டில் அவர் தொடர்ந்து இருக்கிறார். அரசியல் தீர்வை பெறுவதில் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான பங்குள்ளது, உள்நாட்டில் தான் தீர்வுக்கான சாத்தியம் உள்ளது, பன்னாட்டுச் சமூகங்கள் துணையாக இருக்க முடியுமே தவிர அவையே தீர்வை தராது என்பதில் அவர் உறுதியாக நம்புவது போலுள்ளது. கடந்த தேர்தலில் அவர் திருகோணமலையில் போட்டியிட விரும்பவில்லை. கனடாவிலிருந்து திரும்பி அவருடன் இணைந்து பணியாற்றிய குகதாசனே திருமலையில் நிறுத்தப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்து வருகிறது. தனது வாழ்நாளில் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வையும், தமிழ் மக்கள் சம உரிமைகளோடு சமாதானமாக, ஒன்றிணைந்த இலங்கைக்குள் நிம்மதியாக வாழ வேண்டிய சூழலைப் பெற்றுத்தர அவரது ஆழ் மனதில் இன்றளவும் ஆசையும் அதற்கான எண்ணமும் உள்ளது. ஆனால் அவரது உடல் நிலையும், வயதும் அதற்கு ஒரு தடையாக உள்ளன.
இச்சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரை அடையாளம் காண வேண்டிய தேவை மிகவும் அவசியமாகிறது. வயது, அரசியல் அனுபவம், கட்சியின் உறுப்புரிமை, போராட்டம் போன்ற பல அம்சங்களில் சம்பந்தருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் `மாவை` சோமசுந்தரம் சேனாதிராஜா. சம்பந்தரைப் போலவே அவரும் நீண்ட நாடாளுமன்ற அனுபவம் பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். சிறைவாசம் அனுபவித்தவர். இலங்கை தமிழ்ரசுக் கட்சியின் பொதுச் செயலராக இருந்து பின்னர் இப்போது அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர். அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டது கசப்பான உண்மை. அது அவரை மிகவும் பாதித்துள்ளது என்பதை வெளிப்படையாக காண முடிகிறது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி அவருக்கு மறுக்கப்பட்டதாகும். வயது, அனுபவம், அரசியல் முதிர்ச்சி, போராட்ட ஈடுபாடு என்று அனைத்து வகையிலும் அவரே அதற்கு பொருத்தமானவர் என்றாலும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர், கொழும்பிலிருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை `இறக்குமதி செய்து`அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினார். சி.வி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், அவர் கொழும்புத் தமிழர் என்பதே யதார்த்தமாக இருந்தது. இது கூட்டமைப்பிற்கும் இருந்த உட்கட்சி மோதலை வெளிப்படையாக்கி அது மேலும் பெரிதாக வழிவகுத்தது. விக்னேஸ்வரன் முதல்வர் ஆக்கப்பட்டது அவருக்கு நன்மையைவிட தீமையையே அதிகம் செய்தது. அவரால் ஒரு நிர்வாகியாக இருக்க முடியாது என்பது நிரூபணமானது. ஒரு கட்சி மற்றும் ஆட்சியைத் தலைமையேற்று வழிநடத்த அவருக்கு அனுபவமில்லை என்பதை எடுத்துக் காட்டியது. பிறகு `வளர்த்த கிடா மாரில் பாய்ந்தது` போல் அவரே சம்பந்தருக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து, கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கி தனியாவர்த்தனம் வாசிக்க ஆரம்பித்தார்.
வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்கிற வகையில் அவர் என்ன சாதித்துள்ளார் என்பதற்கான விடையை எங்கு தேடினாலும் கிடைக்காது. விமர்சகர்களையும் விமர்சனங்களையும்அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவருக்குப் பதிலாக மாவை சேனாதிராஜா முதல்வராக்கப்பட்டிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட அவரது அரசியல் அனுபவம் உதவியிருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்தது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் அடுத்த தலைவராக அவரைக் கருத முடியுமா என்றால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக அவரது வயது. 80 வயதை அவர் நெருங்கிவிட்டார். இனிவரும் காலங்களில் எந்தளவுக்கு தீவிர அரசியல் செய்வதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. அதுமட்டுமில்லை கூட்டமைப்பின் தலைவராக அவர் செயல்படுவதற்கு கொழும்பில் அரசியல் செய்ய வேண்டும். அதற்குச் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டிய தேவையுள்ளது. அவருக்கும் சிங்களம் தெரியாது மற்றும் ஆங்கிலமும் சரளமாக பேச வராது என்பதே உண்மை. இந்நிலையில் கொழும்பில் தங்கி உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் தலைவர்களுடன் உரையாடுவதோ அல்லது அரசியல் செய்வதோ சிரமமானதாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே அவருக்கு மறைமுகமான எதிர்ப்பு உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அவருக்கு முழுமையான ஆதரவை இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இன்றைக்கும் நிலையில் சரியோ பிழையோ மாவையின் அரசியல் வாழ்வு யாழ்ப்பாணத்திற்கு வெளியே இருக்காது என்கிற சூழலே நிலவுகிறது.
கூட்டமைப்பில் இருக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாவைக்கு இருக்கும் அதே போன்ற மொழிப் பிரச்சனை உள்ளத. இதில் சுமந்திரன், சாணாக்கியன் ராஜபுத்திரன் போன்றோர்மட்டுமே விதிவிலக்காக உள்ளார். இதில் சாணாக்கியன் மஹிந்த கட்சியிலிருந்து வந்தவர். சுமந்திரனைப் பரிசீலிக்கலாம் என்றால் அவரை கூட்டமைப்பின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் பல கேள்விகள் இருக்கின்றன. கூட்டமைப்பிலுள்ள பலர் அதற்கு ஆதரவாக இல்லை. அவரது பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் அவரது நாடாளுமன்ற அனுபவமும் குறைவு. அவர் இன்னும் கொழும்பு வாழ் மேட்டுக்குடி வர்க்கமாகவே பார்க்கப்படுகிறார். தமிழ் அரசியலுக்கு மிகவும் தேவையான `வீதி போராட்ட` குணம் அவரிடம் இதுவரை காணப்படவில்லை. அவரால் மஹிந்த ராஜபக்சவை போல் தடாலடி அரசியல் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்திருந்த கருத்துக்களும் அவருக்கு எதிராக உள்ளன.
இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்-முஸ்லிம் மக்களும் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களுக்கு அதில் தயக்கங்கள் உள்ளன. மேலும் அதற்கு முழு மனதிலான ஏற்பு இருதரப்பிலும் இல்லை. இதுவே தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பலமாக உள்ளது.
இப்படியான சூழலில், நெருக்கடிகளுக்கு இடையே 20 ஆண்டுகளைக் கடந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2026 ஆம் ஆண்டுவரை தாக்குப்பிடித்து தனது வெள்ளிவிழாவை காணுமா என்பது மிகப்பெரிய கேள்வி.
நாடு தழுவியளவில் அனைத்து தமிழ் மக்களையும் உள்ளடக்கிய ஒரு தமிழ் அமைப்பு அல்லது கூட்டணியே காலத்தின் தேவையாக உள்ளது. இதில் அனைத்து தரப்பினரும் இதய சுத்தியோடு இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.
“இனி ஆண்டவனே வந்தாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது“ என்று `தந்தை` செல்வநாயகம் சொன்னதே இப்போது நினைவுக்கு வருகிறது.
எச்சரிக்கை: இது பகுப்பாய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட தொடர். இதில் எழுத்தாளருக்கு தனிப்பட்ட விருப்பங்களோ அல்லது காழ்ப்புணர்ச்சியோ இல்லை.