இது தொடர்பாக குயின்ஸ் பார்க் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை வாக்களிப்பு இடம்பெறும்
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான. குயின்ஸ் பார்க் – டக் ஃபோர்டின் குறைந்த ஊதியக் கொள்கையை மாற்றி அமைக்கவும், ஒன்ராறியோ குடும்பங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கும் உயர்ந்த வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவும் தன்னுடன் இணையுமாறு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான என். டி.பி யின் தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத், சட்டமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
”பல ஆண்டுகளாக, நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்காகப் பிராயத்தனப்பட்டு உழைத்தாலும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படியானதாக ஆக்குவது கடினமாக உள்ளது. ஒரு வீட்டை வாங்குவது, கட்டணங்களை அவற்றின் கெடுவிற்கு முன்னரே செலுத்துவது, எதிர்காலத்திற்காகச் சேமிப்பது, போன்ற இந்த வாய்ப்புகள் எமது குழந்தைகளுக்கு இல்லை. இந்த வாய்ப்புகள் எமது குழந்தைகளின் பெற்றோராகிய எமக்கும், அவர்களது பாட்டன் பாட்டிகளுக்கும் இருந்தன” என்றார் ஹார்வத். “மக்களுக்கு இந்தத் தேவைகள் மிக முக்கியம்.”
கடந்த லிபரல் அரசாங்கம் 2014 முதல் 2017 வரை குறைந்தபட்ச ஊதியத்தை தேக்க நிலையில் வைத்திருந்தது. ”ஹைட்ரோ வன்” ஐ விற்று கட்டணங்களை உயர்த்தியது. குழந்தை பராமரிப்புச் செலவுகளை உயர்த்தி அதை நாட்டின் அதியுயர்ந்த செலவாக ஆக்கியது. பெட்ரோல் பம்ப் விலையை கட்டுப்படுத்த மறுத்தது. மேலும் வீடுகளின் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்துக் கொண்டேயிருந்தபோது அதை அனுமதித்தது.
ஒட்டாவாவில் இருந்து நாளொன்றுக்கு $10 குழந்தை பராமரிப்பு திட்டத்தை டக் ஃபோர்ட் நிறுத்தியுள்ளார். இப்போது பெற்றோர்கள் மாதந்தோறும் வானமளவு உயர்ந்த கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. எரிவாயு விலைகளை ஒழுங்குபடுத்தவோ அல்லது வீட்டுவசதி அல்லது ஹைட்ரோ விலை சார்பாக நடவடிக்கை எடுக்கவோ அவர் மறுக்கிறார்.
ஃபோர்டின் ஊதிய குறைந்த பட்ச வரம்புச் சட்டக் கொள்கையானது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறை ஊழியர்களின் ஊதியத்தை வாழ்க்கைச் செலவை விடக் குறைவான அளவில் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக குறைந்த பட்ச ஊதிய அதிகரிப்பு மூன்று ஆண்டுகளுக்குத் தடுத்து நிறுத்தப்பட்டது. எல்லா விலைகளும் அதிகரித்த
நிலையில், குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கப்படாத போது, இச்செயல் நடுத்தர வர்க்கத்தினரிடையே ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது எனலாம்.
“இது இப்படி இருக்க வேண்டியதில்லை” என்று ஹார்வத் கூறினார். “ஃபோர்டின் நண்பர்களின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வேலை செய்பவர்களைப் பற்றியும், இங்கு மிகச் சிறந்த வாழ்க்கையை உருவாக்க அவர்களுக்கு உதவுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவோம்.”
ஃபோர்ட் தனது குறைந்தபட்ச ஊதிய முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இழந்த வருவாயை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும்; இது குறைந்தது $5,300 ஆகும்; கட்டுப்படியாகாத வாடகை, மற்றும் அதிகரித்துக் கொண்டிருக்கும் வீட்டு விலைகள் மீது யதார்த்தமான நடவடிக்கைகளைச் செயல்படுத்துங்கள்; ஒரு நாளைக்கு $10 குழந்தைப் பராமரிப்பைச் செயல்படுத்துவதற்காக, கூட்டாட்சி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுங்கள்; தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறு வணிகங்களுக்கு நிதி உதவி வழங்குங்கள்; மேலும் ஹைட்ரோ, வாகனக் காப்பீடு மற்றும் பெட்ரோல் விலையைக் குறைக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றும் ஹொர்வர்த் கோரியுள்ளார்.