பார்த்தீபன்
எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க கூறியதைப் போல புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியைப் பெற்றால் பொருளாதார நெருக்கடியில் இருந்து ஸ்ரீலங்கா மீளலாம். புலம்பெயர் தமிழர்களே உலகின் பலமான அமைப்பு என்றும் நிதி மற்றும் திறமை அவர்களிடமே உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் தேசத்தை அவர்களிடம் கொடுத்து, அவர்களின் ஆளும் உரிமையை அவர்கள் வசமே விடுவதன் வாயிலாக இதனை ஸ்ரீலங்கா அரசு பெற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம்.
பூகோளமயமாதல் சூழலில் பன்னாட்டுக் கரங்களின் கைகோர்ப்பின் மத்தியில் சர்வதேச நாடுகளின் மைதானமாக இலங்கை மாறிவிட்ட நிலையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பது தவறான அரசியல் தீர்மானங்களின் விளைவு ஆகும். ஒரு பக்கம் யுத்த ஆயுதங்களின் போர், இன்னொரு பக்கம் பொருளாதாரத் தடை என்றும் மற்றொரு போர் இதற்கு மத்தியிலும் அன்றைக்கு தமிழீழம் தன்னிறைவாக இருந்தது எனப்தை இப்போதும் ஒரு பாடமாக ஒரு வரலாற்றுச் சாதனையாக நாம் மீட்டிப்பார்க்க வேண்டியுள்ளது. புலிகள் இல்லாத இலங்கை அரசியலில் மாத்திரமின்றி பொருளாதாரத்திலும் வெறுமையை நிரப்பியுள்ளது.
இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடத் துவங்கிய போது எஞ்சிய உரிமைகளும்கூட பறிக்கப்பட்டன. தமிழர்கள் கல்வி உரிமை வேண்டும் என்று போராடினார்கள். பள்ளிக்கூடங்களின்மீது குண்டுகள் வீசப்பட்டன. தமிழர்கள் நிர்வாக உரிமை வேண்டும் என்று போராடினார்கள். எஞ்சிய நிர்வாகங்களும் அழிக்கபட்டும் பறிக்கப்பட்டும் அநீதிகள் நிகழ்த்தப்பட்டன. தமிழர்கள் தங்களைத் தாங்கள் ஆள வேண்டும் என்று கோரி போராடினார்கள். ஒட்டுமொத்தமாக ஊரோடும் மண்ணோடும் மக்கள் அழித்து ஒழிக்கப்பட்டார்கள்.
இதன் இன்னொரு ஆயுதமாக பொருளாதாரத் தடையை இலங்கை அரசு தமிழர்கள்மீது திணித்தது. பசி என்பது இந்த உலகின் பொல்லாத வலி. தமிழர்கள் விடுதலைப் பசியில் போராடிய போது ஸ்ரீலங்கா அரசு அவர்களின் வயிற்றில் அடித்தது. இன்றைக்கு இலங்கையில் பொருளாதார நெருக்கடி தோற்றுவிக்கப்பட்ட தருணத்தில் கொழும்பில் அருசிக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்களையும் மண்ணெண்ணைக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்களையும் பார்க்கின்ற போது அன்றைக்கு வடக்கு கிழக்கில் ஒவ்வொரு பல நோக்குச் சங்கங்களிலும் நீண்ட வரிகைகளில் நிற்கின்ற மக்கள்தான் நினைவுக்கு வருகின்றனர்.
அரிசி, கோதுமை மா, சீனி, தேயிலை என்ற அடிப்படை உணவுப் பொருட்களை இலங்கை அரசு தடுத்தது. வடக்கு கிழக்கு மக்களுக்கு அவற்றை கிடைக்கவிடாமல் இன்னொரு தேச மக்களாக கருதி அவர்கள்மீது பொருளாதாரப் போர் தொடுத்தது. சவற்காரம், பற்றி, மண்ணெண்ணை என அன்றாடம் மக்களுக்குத் தேவையான பொருட்களை தடுத்த போது வடக்கு கிழக்கு மக்கள் அடைந்த நெருக்கடி சொல்லி மாளாதவை. 90களின் ஆரம்பம் முதல் 2001 வரையான அந்தக் காலம் நினைத்துப் பார்க்க முடீயாத கொடுங்காலம். பசியினால் தாகத்தினால் தமிழினம் துடித்தபோது சீர்மையான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது விடுதலைப் புலிகள் இயக்கம்.
வடக்கு கிழக்கு மண்ணுக்கு உகந்த வகையில் உற்பத்திகள் திட்டமிடப்பட்டன. வீட்டுத் தோட்டம், விலங்கு வளர்ப்பு, பொருள் உற்பத்திகள், தொழிற்சாலைகள் என விடுதலைப் புலிகளின் அரசினாலும் வடக்கு கிழக்கின் தனியார் நிறுவனங்களினாலும் பாரிய பொருளாதார முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைக்கு தமிழீழத்தின் நிதிநெருக்கடியை தீர்த்து சிறப்பான நிதிநிர்வாகத்தை தமிழீழ நிதித்துறை மேற்கொண்டது. அத்துடன் தமிழீழ வைப்பகம் வழியாக சேமிப்பு மற்றும் எளிய வட்டியில் தொழில் முனைவுகளுக்கான கடன்கள் வழங்கப்பட்டன.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் விவசாயம் மற்றும் விலங்கு வளர்ப்பு திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டின. போரால் இடம்பெயர்ந்து அகதிகளாக அலைந்த நிலத்திலும் காடு வெட்டி மண்ணை உழுது பயிர் நட்டு அறுவடை செய்து மக்கள் தமது பசியைப் போக்கி பிறர் பசியையும் போக்கிய அந்தக் காலம் உன்னதமான நினைவுக்காலமாகும். ஸ்ரீலங்கா அரசின் பாரபட்சமே தமிழீழத்திற்கு வலிகோலியது என்பதைப் போலவே ஸ்ரீலங்கா அரசின் பொருளாதாரத் தடையே தமிழீழப் பொருளாதாரத்துறையை உருவாக்க வழிகோலியது.
ஸ்ரீலங்கா அரச படைகளின் சுற்றி வளைப்பு மத்தியிலும் தமிழீழத்திற்குத் தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதுவும் விடுதலைப் புலிகளின் சாதனையாக கருதப்படுகிறது. ஸ்ரீலங்கா அரசின் ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நிர்வாக அலகையையும் உருவாக்கி தமிழீழ அரசை விரிவுபடுத்தத் துவங்கினார்கள். இதனால் ஏராளமான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களும் போதிளவிலான ஊதியமும் வழங்கப்பட்டன. அன்றைய காலத்தில் ஸ்ரீலங்கா அரசு அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பளத்தை விஞ்சுகின்ற வகையில் தமிழீழ அரசின் கொடுப்பனவு அமைந்தது.
ஒரு நாட்டின் பொருளாதார நிலமையை சொல்லாமல் சொல்பவர்கள் அந்நாட்டின் குடிமக்கள்தான். அவர்களின் வாழ்வியல் செழுமையும் உயர்வும்தான் ஒரு நாட்டை அளக்கும் பொருளாதார அளவுக் கருவியாகும். குறிப்பாக நாட்டின் நெருக்கடியும் தீர்க்க தரிசனமற்ற பொருளாதாரக் கொள்கைகளும் குடிமக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறது. தமிழீழம் பிச்சைக்காரர்கள் அற்ற நாடாக அன்றைக்கு இருந்தமைதான் தமிழீழத்தின் தன்னிறைவான வளர்ச்சிக்கு சிறந்த அடையாளமாக இருந்தது. இன்றைக்கு பெரும் செல்வந்தர்கள்கூட பிச்சைக்காரர்கள் ஆகின்ற நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
தற்போது வெளிநாட்டுத் தூதரகங்களின் முன்னால் சிங்கள இளைஞர்கள் விசாவுக்காக வரிசையில் நிற்பதாகவும் நாளுக்கு நாள் இந்தத் தொகை அதிகரிக்கிறது என்றும் ஸ்ரீலங்கா எதிர்கட்சியினர் சொல்லுகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீலங்கா அரச தரப்பினர் வெளிநாடு செல்வது நல்லதுதான் என்று சொல்கின்றனர். தமிழர்கள் தமது மண்ணில் தம்மை தாமே ஆளக்கூடாது என்று இனவழிப்புப் போரை செய்தது சிங்கள அரசு. இன்று சிங்கள மக்களே தென்னிலங்கையை விட்டு புலம்பெயர்கின்ற ஒரு நிலை உருவாகி இருக்கிறது. நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களின் கழுத்தை நெறிக்கிறது.
எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க கூறியதைப் போல புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியைப் பெற்றால் பொருளாதார நெருக்கடியில் இருந்து ஸ்ரீலங்கா மீளலாம். புலம்பெயர் தமிழர்களே உலகின் பலமான அமைப்பு என்றும் நிதி மற்றும் திறமை அவர்களிடமே உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் தேசத்தை அவர்களிடம் கொடுத்து, அவர்களின் ஆளும் உரிமையை அவர்கள் வசமே விடுவதன் வாயிலாக இதனை ஸ்ரீலங்கா அரசு பெற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம்.
அத்துடன் கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி நீடித்தால் சோமாலியா போலவும் எதியோப்பியா போலவும் ஸ்ரீலங்காவில் பசியால் மக்கள் செத்து விழுவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் நிலத்தில் இரசாயனக் குண்டுககைள வீசி இனப்படுகொலை செய்தும் அந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மக்கச் செய்ய சீனாவின் இராசயனப் பதார்த்தங்களை மண்ணில் ஊற்றியும் நிலத்தை இனப்படுகொலை செய்த கோத்தபாய ராஜபக்ச இப்போது நிலத்தை காக்கவே உர இறக்குமதியை நிறுத்தியதாக புனிதர் வேடம் போடுகிறார். இன்றைக்கு இனப்படுகொலை குற்றத்தை மறைத்து அதிலிருந்து தப்ப, பொருளாதார நெருக்கடி யுத்தத்தை கோத்தபாய முடுக்கி உள்ளார் என்பதை பற்றியே நாம் இங்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.