கனடாப் பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய முறைப்படி அனுமதிபெற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழத் தேசியக் கொடிநாள் நிகழ்வினை நடத்துகின்றது. இல் ஒட்டாவா நகரில் (Wellington St, Ottawa,) கனடாப் பாரளுமன்ற (PARLIAMENT HILL) முன்றலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 21.11.2021 காலை பதினொரு மணிமுதல் மதியம் இரண்டு மணிவரை இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஈழத்தமிழ் இனத்தின் அடையாளக் கொடியான “தமிழீழத் தேசியக் கொடியை” ஏந்தி தங்கள் கொடிதினத்தை ஈழத் தமிழ் மக்கள் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ரொறன்ரோவில் இருந்து நெடுஞ்சாலை 401 வழியாக ஒட்டாவா நோக்கிய கொடி ஏந்திய வாகனப் பேரணி செல்வதற்கும் ழுPPயின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்த வாகனப் பேரணியானது 445 மில்னர் அவனியூ யூனிட் இலக்கம் 11 இல் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவை உறுப்பினர்கள் பணிமனை முன்றலில் இருந்து காலை 6 மணிக்கு ஆரம்பமாகும். மார்க்கம் வீதியினுடாக சென்று நெடுஞ்சாலை 401 இனுடாக பயணம் வலது தடத்தில் (றைற் லேன்) பயணம் தொடரும்.
தமிழ் ஈழ மக்களுக்கு பூர்வீகமான தனித்துவமான தேசம் உள்ளது. அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது. சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமையாகும். அந்த அடிப்படை உரிமைகளின் அடையாளமான எங்கள் தேசியக்கொடியை நாங்கள் ஏந்தும் உரிமையை, கனடா மதித்து தமிழ் மக்களுக்கும் சனநாயரீதியாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் அனுமதியை வழங்கியுள்ளது.
ஒட்டவாவில் பாராளுமன்ற முன்றலில் நடைபெறும் இந்நிகழ்ச்சி மட்டுமல்லாது ரொறன்ரோ, மொன்றியல் மற்றும் ஒட்டாவா நகரங்களிலும் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சின் பணிப்பின் பேரில் ‘கனடா நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பணிமனை’ உள்ளரங்க நிகழ்வுகளை முன்னெடுப்பதும் குறிப்பிடத்தக்கது. வாகனப் பேரணியிலும், நிகழ்வுகளிலும் தாயகத்தின் விடுதலையை நேசிக்கும் மக்கள் எழுச்சியுடன் பெருமளவாக அணி திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை கொவிட் கால விதிமுறைகளைப் கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் படி விழா ஏற்பாட்டாளர்கள் பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.