அண்மையில் ஏற்பட்ட சூறாவளி, இயற்கை அனர்த்தம் மற்றும் இந்திய மீனவர்களால் அண்மைக்காலமாக எமது மீனவர்களின் பாதிப்பு,மீன் பிடி உபகரணங்கள் சோதமாக்கப்பட்டடுள்ளமை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுக்கு இது வரை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒரு சதம் ரூபாய் கூட இழப்பீடாக வழங்கப்படவில்லை எனவும் வரவு செலவு திட்டத்தில் மீனவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் இன்று திங்கட்கிழமை (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் தொடர்பாக பல தடவைகள் வெளிக்கொண்டு வந்திருந்தோம்.
-ஆனால் யாரும் குறித்த விடயங்களை கண்டு கொள்ளவில்லை.தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் தொழில் இழப்புகளுக்கு எந்த வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளியாக இருக்கட்டும், இயற்கை அனர்த்தமாக இருக்கட்டும் ,இந்திய மீனவர்களால் அண்மைக்காலமாக எமது மீனவர்களின் பாதிப்பு, பல இலட்சம் ரூபாய் பெறமதியான மீன் பிடி உபகரணங்கள் சோதமாக்கப்பட்டடுள்ளமை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுக்கு இது வரை ஒரு சதம் ரூபாய் கூட இழப்பீடாக மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இவர்கள் மாற்றான் கை மனப்பான்மையுடன் அரசாங்கத்தினாலும்,ஏனைய தரப்பினராலும் நடாத்தப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தொடர்ந்து கடல் தொழிலை மேற்கொண்டு தமது குடும்பத்தை கொண்டு செல்வதற்கு கூட யாரும் உதவிகளை மேற்கொள்ள முன் வரவில்லை.
-தற்போது பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. ஆனால் பிடிக்கப்படுகின்ற மீன்களின் விலை அதே விலையில் தான் இருக்கிறது.
-எனவே மீனவர்களின் உற்பத்திக்கான உரிய விலை கிடைக்க வேண்டும்.வாழ்வாதாரத்துடன் சமனாக போட்டி போட்டு வாழக்கூடிய வகையில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவித்திட்டங்கள் எதனையும் அரசு செய்ய வேண்டும் அல்லது தொண்டு அமைப்புக்களாவது முன் வந்து பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்களுக்காக செயல்பட வேண்டும்.
இந்த நிதியாண்டில் நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் மீனவர்களுக்கு ஏதாவது ஒரு இழப்பீட்டுத் தொகையோ அல்லது உதவித் தொகையோ ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள்,அதனுடன் இணைந்து கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அரசு சலுகைகள் செய்ய முன் வந்திருந்தாலும் கூட மீனவர்களை கை தூக்கி விடுவதற்கு எந்த ஒரு முன்னேற்ற திட்டமும் குறித்த வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்படாமை வேதனையை ஏற்படுத்துகிறது.
எனவே அரசு ஏதோ ஒரு வகையில் நிதி மூலங்களைப் பெற்று மீனவர்களுக்கான தனியான ஒரு செயல்பாட்டை முன்னெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.