குரு அரவிந்தன்
‘எரிமலைத் தீவான ஹவாயில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியின் போது அரச குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது, அந்த அரசகுடும்பத்தவர்கள் எல்லாம் எங்கே?’ என்ற கேள்வியை வாசக நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். முக்கியமாக பிரெஞ்சுப் புரட்சியின் போது அந்த அரசகுடும்பங்களுக்கு நடைபெற்றது போல கழுத்து வெட்டப்பட்டோ, அல்லது தூக்கில் இடப்பட்டோ கொடூரமரணம் சம்பவித்ததா? அல்லது வேறுவிதமாகத் தண்டிக்கப்பட்டார்களா என்பதை அறிவதிலேதான் அவரது வரலாற்றுச் சிந்தனை இருந்தது. பாரிஸ் நகருக்குச் சென்றபோது அங்குள்ள அருங்காட்சியகத்தில் பிரெஞ்சுப் புரட்சியின் போது, அங்கிருந்த அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றிய ஓவியக் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். 1793 ஆம் ஆண்டு 16 ஆம் லூயி மன்னனுக்கு என்ன நடந்தது என்பதை ஓவியமாகத் தீட்டியிருந்தார்கள். கட்டுரைகளில் சிறிது வரலாறும் இடம் பெற்றால் அந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்புப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடியும் என்பதையும் அவர் தெரிவித்ததால்தான், இந்தத் தேடல் ஏற்பட்டது.
ஹவாயில் கொனலுலுவில் உள்ள புகழ்பெற்ற வைகீக்கீ கடற்கரையில் உள்ள கமே ஹமேகா என்ற புகழ்பெற்ற மன்னரின் சிலைக்கு மலர்மாலை சூட்டி மன்னரின் காலடியில் தினமும் மலர்கள் தூவியிருந்தார்கள். சிலைகளை உடைத்தெறியும் இந்தக் காலத்தில், அவரைத் தனிப்பட்ட முறையில் மதித்தவர்கள் இதைச் செய்திருக்கலாம். பொதுவாக ஜனநாயக அரசியலுக்கு, அல்லது இடதுசாரி அரசியலுக்கு வந்தவர்கள் மன்னராட்சியை மறக்கவே விரும்புவார்கள். எனவேதான் நான் சந்தித்த உள்ளுர் மக்களிடம் அவர்களின் முதலாவது மன்னரைப் பற்றி விசாரித்தேன்.
1810 ஆம் ஆண்டு ஹவாய் இராச்சியத்தை நிறுவிய மன்னனான கமே ஹமேகாவின் சிலை ஒன்று கொனலூலூ டவுன்ரவுணில் உள்ள அலையோலானி மண்டபத்திற்கு முன்னாலும், இது போன்ற இன்னுமொரு சிலை பிக் ஐலண்ட் என்று சொல்லப் படுகின்ற ஹவாயின் இன்னுமொரு பெரியதீவில் இருப்பதையும் அங்கு சென்ற போது நான் அவதானித்தேன். ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் எப்படி வந்தன என்று விசாரித்த போது அதைப் பற்றி ஒரு கதையே சொன்னார்கள்.
1878 ஆம் ஆண்டு கப்டன் குக் ஹவாய்தீவை அடைந்த 100 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக மன்னருக்கு ஒரு சிலைவைக்க முற்பட்டாலும், அந்தச் சிலையின் வேலைகள் முற்றுப் பெறவில்லை. இச்சமயத்தில் மன்னர் இறந்துவிடவே அவருடைய இடத்திற்கு வந்த டேவிட் ஹலகாவுவா மன்னன் அந்தச் சிலையை அலையோலானி மண்டபத்திற்கு முன்னால் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார். 1883 ஆம் ஆண்டுதான் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டு ஹவாய் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, சிலையைக் கொண்டு வந்த கப்பல் போக்லாண்ட் தீவுகளுக்கு அருகே மூழ்கிப் போகவே, காப்புறுதி இருந்ததால், அதுபோன்ற வேறு ஒரு சிலையைச் செய்யும்படி கேட்டிருந்தார்கள்.
புதிய சிலை செய்து அனுப்பப்பட்ட அதே சமயம், போக்லாண்ட் கடற்தொழிலாளர் சிலர் பழைய சிலையைக் கடலில் இருந்து மீட்டெடுத்திருந்தனர். 875 டொலரைக் கொடுத்து அந்தச்சிலையையும் இவர்கள் வாங்கினார்களாம். முதலில் செய்யப்பட்ட மன்னரின் இந்தச் சிலை மன்னர் பிறந்த இடமான ஹோகாலா என்ற இடத்தில் நிறுவப்பட்டது. இதனால்தான் ஒரே மாதிரியான கமே ஹமேகா மன்னரின் இரண்டு சிலைகள் ஹவாய் மக்களுக்குக் கிடைத்தது. ஹவாய் தீவுகளை அமெரிக்காவின் 50வது மாகாணமாக்கிய போது இன்னுமொரு சிலை 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைநகரில் நிறுவப்பட்டது. இந்த சிலை முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா அவர்கள் பதவி ஏற்ற போது பொதுமக்கள் பார்வைக்காக பொது இடத்தில் வைக்கப்பட்டது. காரணம் பராக் ஒபாமா ஹவாயில் உள்ள கொனலூலூவில் கப்பியோலானி மருத்துவ மனையில்தான் 1961 ஆம் ஆண்டு பிறந்திருந்தார்.
கமே ஹமேகா ஹவாயில் பிக்ஐலன்ட் என்று சொல்லப்படுகின்ற பெரிய தீவில் பிறந்து வளர்ந்த முதலாவது மன்னராவார். ஹவாய் வானத்திலே வால் நட்சத்திரம் (Halley’s Comet) தோன்றிய வருடமான 1758 ஆம் ஆண்டுதான் இவர் பிறந்ததாகச் சொல்கிறார்கள். அங்கே இருந்த ‘நாகக்கல்’ என்று சொல்லப்படுகின்ற பெரிய கல்லைத் தனது பலத்தைப் பாவித்துத் தூக்கியதால் அவரை மன்னராக ஏற்றுக் கொண்டதாகவும் கதைகள் உண்டு. தமிழர் பிரதேசத்தில் இன்றும் நாகவழிபாட்டு வழக்கமும், சில கிராமங்களில் கல்லைத் தூக்கி வலிமையைப் புலப்படுத்தும் வழக்கமும் நடைமுறையில் இருபதும் நினைவில் வந்தது. 1810 ஆம் ஆண்டு தனது படைகளுடன் வைகீக்கி கடற்கரையில்; போரிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹவாய் தீவுகள் எல்லாம் கமே ஹமேகா மன்னனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. 1795 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த இவர் 1819 ஆம் ஆண்டு மரணமானதைத் தொடர்ந்து இவரது மகன் பதவிக்கு வந்தார். அவர் கடைசிக்காலத்தில் வழிபட்ட வழிபாட்டுத் தலத்தையும் பெரிய தீவிற்குச் சென்றபோது பார்க்க முடிந்தது.
மொத்தமாக எட்டு பேர் தொடர்ச்சியாக ஹவாய் அரசபீடத்தில் இருந்தார்கள். இவர்களில் ஏழு பேர் ஆண்களாகவும் கடைசியாகப் பதவி ஏற்றவர் மட்டும் பெண்ணாக இருந்தார். லில்லிஜோ கலானி என்பது இவரது குடும்பப்பெயர். 1891 ஆண்டு கடைசியாகப் பதவிக்கு வந்த அரசியான இவர் 1893 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பதவியில் இருந்தார். அழகுணர்வு கொண்ட இவர் ஆடம்பர வாழ்க்கையில் அதிக பணத்தைச் செலவிட்டதால் மக்கள் வெறுப்படைந்தனர். அரசியின் ஆடம்பரமான மாளிகையான ‘லோலானி பலஸ்’ என்ற மாளிகை அரச பரம்பரையினர் வாழ்ந்த மாளிகையாகையால் அதையும் பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். அங்கு சென்று பார்த்த போது, தரைவிரிப்பான கம்பளத்தில் இருந்து 14 கரெட் வைரம் வரை எல்லாமே மிக விலை உயர்ந்த பொருட்களாக இருப்பதை அவதானிக்க முடிந்தது.
சுமார் 128 வருடங்களுக்கு முன் ஹவாய் மண்ணில் நடந்த எதிர்பாராத சம்பவம் ஒன்று ஹவாயின் சரித்திரத்தையே மாற்றி அமைக்கக் காரணமாக இருந்தது. 1893 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பிரபல வர்த்தகர்களும், கரும்புத்தோட்ட முதலாளிகளுமாக மொத்தம் ஆறு பேர் சேர்ந்து ஹவாயில் அரச ஆட்சியைக் கவிழ்த்தார்கள். நிலச்சொந்தக்காரர்கள் தங்களுக்கென்று பாதுகாப்புப் படையை வைத்திருந்ததால் அவர்களுக்கு இது இலகுவாக இருந்தது. இதில் நான்கு அமெரிக்கர்கள், ஒரு பிரித்தானியர், ஒரு ஜேர்மனியர் ஆகியோர் முக்கியமாக இடம் பெற்றிருந்தனர். அதுவே பின்னாளில் அமெரிக்காவின் 50வது மாகாணமாகக் ஹவாய் மாறுவதற்கு வழிவகுத்தது. இங்கேயும் அரசபதவிக்காக நடந்த குளறுபடிகள் அமெரிக்காவுக்குச் சாதகமாக அமைந்தன. காரணம், அமெரிக்காவின் பசுபிக்கடற்பிராந்தியப் பாதுகாப்புக்கு ஹவாய் தீவுகள் முக்கியமாக அவர்களுக்குத் தேவைப்பட்டன. இதுவே ஒரு கட்டத்தில் ஆயுதப்புரட்சி இன்றி, ஹவாயில் அரசியல் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது.
ஹவாய் மன்னராட்சியின் வீழ்ச்சியின் போது அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் பொஸ்டன் என்ற 284 மாலுமிகளைக் கொண்ட கடற்படைக் கப்பல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி 1892 ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி 1893 ஆம் ஆண்டுவரை அங்குள்ள துறைமுகத்தில் தரித்து நின்றதாகப் பதிவுகள் இருக்கின்றன. ஹவாயில் உள்ள அமெரிக்கர்களின் சொத்துகளுக்கும் உயிர்களுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக ஜனவரி 16 ஆம் திகதி 1893 ஆம் ஆண்டு பிற்பகல் அமெரிக்கக் கப்பல் படையினர் அப்பகுதிகளில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். ஏன் அவர்கள் அங்கு நிற்கிறார்கள் என்பதோ, ஹவாயில் மன்னராட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதோ மக்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. கத்தியின்றி, ரத்தமின்றி முடியாட்சி, ஜனநாயக ஆட்சியாக மாற்றப்பட்டு, அமெரிக்காவின் மாகாணமானது.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹவாய் அரசி லில்லிஜோ கலானி 1917 ஆம் ஆண்டு மரணமானார். அமெரிக்காவின் ஒரே ஒரு இளவரசியாகத் 95 வயதான, ஹவாயின் அரசபரம்பரைக் கடைசி வாரிசான Kekaulike kawananakoa ஹவானனகோவா இப்போதும் இருக்கின்றார். கோடீஸ்வரியான இவருக்குக் ஹவாய், கலிபோனியா, வாஷிங்டன் ஆகிய இடங்களில் குதிரைப்பண்ணைகள் இருக்கின்றன.