இலங்கையில் போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் போர்க் காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் காணாமல் போனவர்களுக்கு என்னவாயிற்று என்று இற்றைவரை யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் அவர்களை தேடி அலையும் உறவுகளுக்கு அரசு நேரடியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேன் ஈஸ்வரி கூறுகிறார்.
அதேவேளை அரசால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர்களுக்கான அலுவலகச் செயற்பாடுகளுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் முல்லைத்தீவில் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் மரியசுரேன் ஈஸ்வரி வெளியிட்ட தகவல்கள்:
* 1718 ஆவது நாளாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.இந்த நேரத்திலே நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் சர்வதேசத்துக்கும் அவசரமும் அவசியமானதுமான ஒரு தகவலை தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அதாவது ஓ எம் பி அலுவலகத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத அலுவலகம் எங்களை பதிவு செய்ததாக கூறி அதாவது காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தகவல் அடிப்படையில் தங்களுக்கு மிகுதி தகவல்களையும் வழங்குமாறு மக்களுக்கு கடிதங்கள் அனுப்பிவருகின்றனர்
* தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது.நாங்கள் இந்த ஓ எம் பி அலுவலகத்திலே எந்த ஒரு தகவலையும் பதிவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு இது ஒரு பொய்யான தகவலாக வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து தகவலை ஏற்று எமக்கான மரணச்சான்றிதழ் இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் செய்வதற்கு முனைகின்றனர்
*நாங்கள் இந்த முறைப்பாடுகளை செய்யவில்லை என்பது உங்களுக்கு தெளிவாக தெரிகின்ற காரணத்தினால் அவர்கள் எங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்குவதற்காக எமது பதிவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்
* ஓ எம் பி அலுவலகத்திடம் நாங்கள் பலதடவைகள் கூறினோம் இந்த அலுவலகம் எங்களுக்கு தேவையில்லை நீங்கள் எந்த பதிவுகளையும் செய்ய வேண்டாம் என்று இருப்பினும் அவர்கள் காணாமல் போனவருடைய புகைப்படம் காணாமல் போனவருடைய அடையாள அட்டை காணாமல் போனவருடைய பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சகல தகவல்களையும் கோருகின்றனர்.
*எமக்கு இந்த ஓ எம் பி அலுவலகம் தேவையில்லை ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருக்கிறார் காணாமல் போனோருக்கு தான் மரணச்சான்றிதழ் வழங்க தயாராகவுள்ளதாக சர்வதேசத்திலே கூறியுள்ள இந்த நிலையில் அதை சந்தர்ப்பமாக வைத்து ஓ எம் பி அலுவலகம் பாதிக்கப்பட்ட எம்மிடமிருந்து தகவலை பெற்று எமக்கு மரணச்சான்றிதழ் தருவதற்கு முனைகின்றார்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
* காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை எங்களிடம் கையளியுங்கள், எங்கள் உயிர்களை தான் நாங்கள் கோருகின்றோம். எங்கள் உயிர்களை தர விரும்பினால் யாரும் தொடர்பு கொள்ளலாம் அவ்வாறில்லையெனில் யாரும் எங்களது உறவுகளிடம் தொடர்புகொண்டு தகவல்களை பெற வேண்டாம் இலங்கையில் எமக்கான தீர்வு கிடைக்காது ஆகவே யாரும் எமது பதிவுகளை பெற முனைய வேண்டாம்.