கதிரோட்டம்- 26-11-2021
இலங்கையின் பாராளுமன்றத்தில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருவது போன்று. ஈழத்தமிழர்களின் அரசியல் பாதையில் அவர்களது தலைவர்கள் என்று ஓரு சிலரே மாறி மாறியும் தொடர்ச்சியாகவும் தங்கள் முகங்களைக் காட்டி வருகின்றார்கள்.
தமிழ் நாட்டில் ஊழல் அரசியல் செய்து எவ்வாறு கருணாநிதியும் ஜெயலலிதாவும் கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட சொத்துக்களுக்கும் மதுபானத் தொழிற்சாலைகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கும் அதிபதிகளாக இருந்ததை அறிந்திருந்தாலும், எவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் மாறி மாறி அந்த இரண்டு ஊழல் பேர்வழிகளையும் ஆட்சியில் அமர்த்தினார்களோ. அவவாறே. எமது தாயகத்திலும் தமிழர்களின்; அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக தவறுகள் இழைத்தாலும். தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பதவிகளைப் பெற்ற பின்னர் ‘மௌனமாக’ இருந்தாலும், பெரும்பான்மை இனத்தின் அரசியல் தலைவர்களின் பதவிகள் கவிழ்ந்து போகாமலிருக்க ‘முண்டு’ கொடுத்து. காப்பாற்றியிருப்பினும். காணாமல் போனவர்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் எடுக்காமல் இருந்தாலும். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமல் இருந்தாலும், அவர்களில் பலரையே மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதையே நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகின்றோம்.
இது மாவீரர்களின் மகத்தான நவம்பர் மாதம் ஆகும். இந்த மாதத்தில் எமது மக்கள் கடந்த காலங்களில் மாவீரர் நாள் உரைகளை வன்னியிலிருந்து வரும் காணொளி ஊடாகக் கேட்ட வண்ண்ம் தமிழீழம் என்ற விடுதலைக் கனவை மனங்களில் நிறுத்திய வண்ணம் இருந்தார்கள். ஆனால் இப்போது காட்சிகள் மாறியே தோன்றுகின்றன. நவம்பர் மாதத்தில் பொய்மை மிகக் கொண்ட முகங்களோடு மண்ணிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களின் தலைவர்கள் என்ற பெயரோடு சிலர் தோன்றுகின்றார்கள்.
கடந்த வாரம் கனடாவிற்கு வந்து சென்ற இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்த நோக்கம் எது என்பதை வெளிப்படையாகக் கூறாவிட்டாலும். தாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நலன்களுக்காகவே பாடுபடுகின்றோம் என்று காட்டவே முயன்றுள்ளார்கள்.
இவ்வாறான தலைவர்கள் தொடர்பாக அவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களை கேட்பதற்கு முன்பதாக அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் என்ன என்பதை நாமே அறிந்து அவைகள் மூலமாக முடிவுகளை எடுக்க முயலவேண்டும்.
இவ்வாறானவர்களுக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அவர்களின் ‘ஆதரவாளர்கள்’ என்று சொல்லிக் கொள்வதற்கு ஆட்களும் அமைப்புக்களும் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து அதைப் பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறானவர்களை கொழும்புக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ‘விருந்தினர்களாக’ வரவேற்றவர்களும் இவ்வாறான தமிழ்த் தலைவர்கள் தான் என்பதை சிலரே அறிவார்கள்.
தாயகத்திலும் அவர்களுக்கு தமிழ் வாக்காளர்களின் ஆதரவு தேவை என்பதற்காக அதற்கான ஆயத்தங்களையும் பிரச்சாரங்களையும் மிகவும் தந்திரமாகச் செய்துகொள்வார்கள்.
மறுபக்கத்தில் தென்னிலங்கையில் அவர்களுக்கு சிங்கள அரசியல் கட்சிகளின் தொடர்புகளும் அவற்றின் அரவணைப்பும் தேவை. அவர்களுக்கு சிங்கள மக்களின் ஆதரவு தேவையே இல்லை. ஆனால் ஆட்சி அமைக்கக் கூடிய சிங்களக் கட்சிகளின் தலைவர்கள் யாராக இருந்தாலும். அவற்றைப் பெற்றுக் கொள்ளும் வகையில் காரியங்கள் ஆற்ற அவர்களிடம் போதிய ‘திறமையும்’ தந்திரங்களும் உள்ளன.
இந்த வகையிலான அரசியல் தந்திரத்தையே நாம் கடந்த காலங்களில் எமது தமிழ்; அரசியல்வாதிகளிடம் கண்டோம். அவர்கள் தங்கள் பதவிகளையும் உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ளும் தந்திரங்களை நன்கு பயன்படுத்தி வருகின்றார்கள். முன்னர் படுகொலை செய்யப்பெற்ற ரவிராஜ் மற்றும் குமார் பொன்னம்பலம் ஆகியோரை சாதாரண சிங்கள மக்கள் கொலை செய்யவில்லை. சிங்கள அரசியல்வாதிகளை அவர்களைக் கொன்றார்கள்.
ஆனால் நாம் சந்திக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் தென்னிலங்கையில் மாறி மாறி வரும் அரசியல் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்த வண்ணம் அவர்களது அரசியல் வாழ்க்கை இடையூறுகள் இன்றி தொடர்கின்றது.
இந்த விடயத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எமக்குரிய தலைவர்களை அடையாளம் கண்டு எஞ்சியோரை புறக்கணிக்கும் வகையில் இனிவரும் காலங்களில் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும். இதுவே தற்போது மிகவும் அவசியமானது.