(மன்னார் நிருபர்)
(26-11-2021)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 32 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்ட அதிநவீன முப்பரிமாண லபரோஸ்கோபி (3D laparoscopy)சத்திர சிகிச்சை தொகுதி அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பொது சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மௌ.மதுரகீதன் தலைமையில் குறித்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில் நந்தனன், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் க.செந்தூர் பதி ராஜா ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக பொது சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மௌ.மதுரகீதன், மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் எ.புஸ்பகாந்தன் மற்றும் சத்திர சிகிச்சை கூட பொறுப்பு தாதியர் க.யாழினி ஆகியோரிடம் நோயாளர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அதிநவீன முப்பரிமாண லபரோஸ்கோபி சத்திர சிகிச்சை முறையானது வயிற்றை வெட்டி திறக்காமல் சிறு துளைகளினூடாக கேமரா மற்றும் கருவிகளையும் உட்செலுத்தி சத்திர சிகிச்சை செய்யும் ஒரு வசதியாகும்.
இந்த முறைமையில் சத்திர சிகிச்சை செய்யும் போது ஏற்படும் காயம் மற்றும் வலி என்பன மிக குறைவாகவே காணப்படும்.
மிகவும் பெறுமதி வாய்ந்த அதிநவீன முப்பரிமாண லபரோஸ்கோபி வசதியானது இலங்கையின் ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரமே காணப்படுகின்றது.
-குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இந்த நவீன முப்பரிமாண சத்திர சிகிச்சை தொகுதியானது முதன் முதலாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த சத்திர சிகிச்சை வசதியானது பொது சத்திர சிகிச்சை,புற்றுநோய்,பெண் நோயியல் மற்றும் குழந்தை பேறின்மை தொடர்பான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
-மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஏனைய பெரும்பாலான வைத்தியசாலைகளில் இல்லாத அதி நவீன மொடியூலர் சத்திர சிகிச்சை கூடம் மற்றும் நவீன நகர்த்திப் பாவிக்கும் எக்ரே( X Ray) இயந்திரம் என்பனவும் வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாத்திரமே முதன் முதலாக கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.