கனடிய பழங்குடி மக்களின் முன்னைய பரம்பரை பற்றி அறிந்து கொள்ளுமாறு ஆளுனர் நாயகம் மேரி சைமன் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்
கனடிய பழங்குடி மக்களின் முன்னைய பரம்பரை பற்றி அறிந்து கொள்ளுமாறு ஆளுனர் நாயகம் மேரி சைமன் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஓட்டாவா மாநகரில் புதிய அரசாங்கத்தின் தொடக்க நிகழ்வாக இடம்பெற்ற தனது ‘சிம்மாசன உரையில்’ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனடிய அரசியல் வரலாற்றில் இவ்வாறன ஒரு சிம்மாசன உரை இது வரை இடம்பெறவில்லை எனவும். இதற்கு முதலாவது காரணமாக விளங்குவது தற்போதைய ஆளுனர் நாயகம் மேரி சைமன் அவர்கள் கனடாவின் பழங்குடிகளில் ஒரு பிரிவான ‘இனுட்’ சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாகும்.
அதற்கு மேலாக. கடந்த காலங்களைப் போன்று அல்லாமல் இந்த வருடத்திலேயே கனடாவின் பழங்குடி மக்கள் சார்ந்த மாணவ மாணவிகள் கல்வி கற்பதற்காக தேவாலயங்களினால் நிர்வகிக்கப்பெற்ற ‘வதிவிடப் பாடசாலைகளுக்கு’ அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல்வேறு வழிகளில் உயிரிழக்க. தொடர்ந்து அந்த மாணவ மாணவிகளின் உடலங்கள் அதே வதிவிடப் பாடசாலைகள் அமைந்த நிலப்பகுதிகளிலேயே புதைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே கனடாவிற்கான புதிய ஆளுனர் நாயகத்தை சிபார்சு செய்ய வேண்டிய நேரத்தில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் கனடாவின் பழங்குடிகளின் சமூகத்தைச் சார்ந்த மேரி சைமன் அவர்களை சிபார்சு செய்திருந்தார். இவ்வாறான பல காரணங்களின் அடிப்படையில் ஆளுனர் நாயகம் மேரி சைமன் அவர்களின் சிம்மாசன உரையில் அவர் பழங்குடியினர் பற்றிய தனது கரிசனையை காட்டியது தவிர்க்க முடியாதது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்
அன்றைய தினம் ஆளுனர் நாயகம் மேரி சைமன் அவர்களது சிம்மாசன உரை கனடாவின் மூதவை (செனட்சபை)மண்டபத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரை ஆரம்பமாவதற்கு முன்னர் பல பாராளுமன்றச் சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆளுனர் நாயகம் மேரி சைமன் அவர்கள் தனது சிம்மாசன உரையை ஆற்றும் போது அவரது கணவர் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். இரண்டாவது அடுக்கில் பிரதமரும் சபாநாயகரும் அமர்ந்திருந்தனர்.
அங்கு தனது ‘சிம்மாசன உரையில்’ தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் முன்னர் வாழ்ந்து மடிந்த பழங்குடி மக்களின் வரலாறு தாம் அங்கத்துவம் வகிக்கும் தற்போதைய தொகுதிகளில் எப்படி இருந்தது என்பதை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அறிந்து கொள்ள முயலவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
‘நாம் தற்போது. முழு உலகையே அச்சுறுத்தும் ‘பருவ நிலை மாற்றம்’ தொடர்பாகவும் அக்கறை கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட கனடாவின் ஆளுனர் நாயகம். ‘அதற்காக நேரம் நெருங்கி விட்டது என்றும் கூறினார்.
தொடர்ந்து ” கனடாவின் பழங்குடி மக்கள் கடந்த கால வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை அறிந்து அவர்களுக்கு இழைக்கப்பெற்ற கொடுமைகளின் வலியை குணப்படுத்தும் முயற்சிகளையும் இந்த பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு ‘நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைய வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.
கனடாவின் ஆளுனர் நாயகமாக பதவி வகிப்பவர்கள் தமது சிம்மாசனப் பிரசங்க உரைகளை ஆங்கிலத்திலும். பிரன்சு மொழியிலுமே ஆற்ற வேண்டும். ஆனால் மேரி சைமன் அவர்கள் தனது புதவியேற்பு வைபவத்தில் உரையாற்றிய போது தனக்கு உள்ள பிரன்சு மொழி அறிவு போதாது என்பதை நன்கு உணர்வதாகவும். தொடர்ந்து பிரன்சு மொழியை ஆர்வத்துடன் கற்பதற்கு முயன்று வருகின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் செவ்வாய்கிழமை ஆற்றிய சிம்மாசன உரையில் தனது பிரன்சு மொழியிலான உரையை எழுதியே வாசித்தார் என்பதும் அதிலும் பல தவறுகள் காணப்பட்டதாக கனடாவின் பிரன்சு மொழி சார்ந்த தேசிய தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
(GANESH)