ஐ நா உயரதிகாரி ஒருவர் இலங்கையில் நிலவும் பணிச்சூழல்கள் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில், வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
சமகால அடிமைத்துவம், அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஐ நா சிறப்பு பிரதிநிதி டொமோயா ஒபோகாடா இலங்கைக்கு வந்துள்ளார். பல்துறையிலுள்ள தொழிலாளர்களின் நிலையை அவர் ஆராய்கிறார்.
இந்நிலைலியிலேயே ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று விவரிக்கப்படும் ஊடகத்துறை மற்றும் செய்தியாளர்களின் மீதான அரசின் கடும்போக்கு நிலைப்பாடு, சகிப்புத்தன்மையற்ற நிலை மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் இடம்பெறுகின்றன.
நீத்தார் நினைவு நாளைப் போற்றுதல் தமிழ் மரபு மற்றும் கலாச்சாரத்தில் நீங்கா இடம்பெற்றுள்ள நிலையில், உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய விளக்கேற்றும் நிகழ்வைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டு அரசு வலிந்து நடவடிக்கைகளை எடுத்து தமிழர்களின் மனங்களைப் புண்படுத்துகிறது.
அவ்வகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் அவர்கள் இன்று 27.11.21 காலை முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ‘முள்ளிவாய்க்கால்’ எனும் அடையாளப் பெயர்பலகையினை செய்தி அறிக்கையிடலுக்காக ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் ஊடக பணிக்கு இடையூறு விளைவித்ததுடன் ஊடகவியலாளர் மீது முட்கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையால் மிக மூர்க்கதனமாக தாக்குல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்துள்ளனர்.
இதனால் வயிற்று புகுதி மற்றும் கை,கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த நிலையில் ; முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் ஊடகவியலாளரின் உடமைகளான ஒளிப்படக்கருவி, தொலைபேசி ஆகியவை படையினரால் பறிக்கப்பட்டு அவரது வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
பல சவால்களுக்கும்,அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மிக துணிச்சலுடன் ஊடகபணியினை ஆற்றிவந்த வி.விஸ்வச்சந்திரன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமையானது மிக மோசமான மனிதஉரிமை மீறல் என்பதுடன் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும் என்று முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் அமையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக நாடெங்கும், குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் பக்கசார்பற்ற வகையில் செய்தியகை சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இது குறித்த முறைப்பாடுகள் பொலிஸ் மற்றும் ஜனாதிபதி வரையிலான உயர்மட்த்திற்கு அளிக்கப்பட்ட போதும், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அரசின் இந்த நிலைப்பாடே, எந்த குற்றத்தையும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிவிடலாம் என்கிற எண்ணபோக்கை ஏற்படுத்தியுள்ளது. முறைப்பாடு அளிக்கப்படும் போது அது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றிருக்காது.
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு திட்டமிட்டுச் செய்கிறது என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது ஊடக செயற்பாட்டிற்கு அடிக்கட்ட சாவு மணி என்று அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் 44 தமிழ் ஊடகவியலாளர் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் அதற்கான நீதிகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக தமிழ் இன அடையாளத்தினை கொண்ட ஊடகவியலாளர்கள் என்ற காரணத்தினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும்,சித்திரவதைகளும் தமிழ் ஊடக பரப்பினை சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவது கவலைக்குரிய விடையமாகும் என்று முல்லைத்தீவு ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஊடக சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் மற்றும் சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமையை காத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திள்ளனர்.