விப்ரசிரேஷ்டர்களான மஹாராஜஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் அவர்களுக்கும் இணுவில் காயத்ரி பீடம், தர்மசாஸ்தா குருகுல அதிபர் “வேதசிவாகம பாஸ்கர “சிவஸ்ரீ தானுநாத மஹாதேவ குருக்கள் அவர்களுக்கும் இந்தியா தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், எமது இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் எமது விண்ணப்பத்தினை ஏற்று “சிவாகம கலாநிதி” எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவம் செய்வது சைவமக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.
இந்தியாவின் தொன்மையான சைவத் திருமடங்களுள் ஒன்றாகவும், சைவமும் தமிழும் இனிதே தழைத்தோங்குக என்ற கோட்பாட்டுடன் சமய வளர்ச்சியிலும், தமிழ் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வரும் ஆதீனமாகவும் விளங்குகிறது தருமபுரம் ஆதீனம்.
இந்த ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் டிசம்பர் 3-ஆம் தேதி முக்தியடைந்ததையடுத்து, ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக வெள்ளிக்கிழமை ஞானபீடம் ஏற்றார்.
தருமபுர ஆதீன பரம்பரையைத் ‘திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்’ எனப் போற்றுகின்றனர். … இதன் பரம்பரையில் வரும் முதல் நால்வரைப் அகச் சந்தான குரவர் என்றும் கயிலாயவாசிகள் என்றும் கூறுவர். இப்பரம்பரை அகச் சந்தான குரவர் புறச் சந்தானக் குரவர் மற்றும் சந்தானக் குரவர் என வரிசைப்படுத்தப்படுகிறது.
வேதாகம ஞான பாஸ்கரன் சிவஸ்ரீ. தானுநாத மஹாதேவ குருக்கள்.
மிகவும் ஆச்சர்யமான முறையில், வேத சிவாகம பணி செயபவர் ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ. தா.மஹாதேவக்குருக்கள் அவர்கள்.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப்போர், இடப்பெயர்வு என்பவற்றுக்கு இடையிலும் குருகுலமரபு வழியில் வேதாகமக்கல்வி இன்றைக்கும் ஓரளவேனும் செழிப்புற்று உள்ளது என்றால், இன்றைக்கு இலங்கையின் பல பாகத்திலும் சிவாச்சார்யர்கள், அந்தணோத்தமர்கள் சிறப்பாக கிரியைகளை ஆற்றி வருகிறார்கள் என்றால், வேத, சிவாகம ஆராய்ச்சிகளும், இத்துறையில் புதிது புதிதாக நூல்களும் உருவாகின்றது என்றால், இந்த எழுச்சியில், இணுவில் தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ. தா.மஹாதேவக்குருக்களின் பங்கும் பணியும் மிக முக்கியமானது.
தமிழகத்தில் இன்றைக்கும் காஞ்சி, திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, தருமபுரம் ஆதீனம், சீர்காழி போன்ற பல்வேறு இடங்களில் சிவாச்சார்ய வேதாகம பாடசாலைகள் உள்ளன. இதே போல, இலங்கைத்திருநாட்டிலும் மஹாதேவக்குருக்கள் அவர்கள் ஒரு பாடசாலையை நிறுவனரீதியாக அன்றி, தனது தனிப்பட்ட ஆளுமைத்திறத்தாலும் தம் குடும்பத்தவரின் ஒற்றுமையான பணிகளாலும், முழுமையான இலவசக்கல்வி முறையாக நடாத்தி வந்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான ஒரு விடயம் ஆகும்.
1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது. வாத்தியார் அவர்கள் சுமார் 45 வருடங்களுக்கு மேலாக குருகுலத்தினை நடாத்திவருவது தனிச்சிறப்பு. வாத்தியார் அவர்கள் “வேதசிவாகம பாஸ்கர” எனும் சிறப்பு பட்டத்தினை முதலாவதாக பெற்று, பல அமைப்புகள் ஆலயங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற, ஆயிரம் பிறைச்சந்திரனை தரிசனம் செய்த பெருந்தகை.
மஹாராஜஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள்.
பஞ்ச ஈஸ்வரங்களில் யாழ்ப்பாணத்திலுள்ள நகுலேஸ்வரமும் ஒன்று.
சுசங்கீதன், நளன், அருச்சுனன் போன்றவர்களும் நகுலமுனிவரும் பூசித்த இத்தலம் ஒருகாலத்தில் மலை வடிவில் இருந்ததாம்.
இன்று மலை கடற்கோளில் அழிந்து விட்டாலும் கீரிமலை என்றே அழைக்கப்படும் இத்தல தீர்த்தம் சாகர சங்கமம் ஆக, கண்டகி தீர்த்தமாக விளங்குகிறது.
இத்தலத்தின் அறங்காவலர்களாயும் அர்ச்சகர்களாயும் திகழும் சிவ வேதியர் மரபில் வந்தவர் கு.நகுலேஸ்வரக்குருக்கள்.
1947ல் தமது தந்தையார் குமாரசாமிக்குருக்கள் காலமானதை தொடர்ந்து (அப்பொழுது 22வயது) கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக நகுலேஸ்வரப்பேராலய ஆதீன கர்த்தராக விளங்கி வருபவர் இவர்.தமது மேற்பார்வையில் 1953, 1973, 2012 ஆகிய மகாகும்பாபிஷேகங்களை நகுல நாதருக்குச் செய்தவர்.
1990ல் ஏற்பட்ட போர் அவலத்தால் ஊரை விட்டு, கோயிலை விட்டு ஊர்மக்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து ஏழாண்டுகளாக கோயில் சூழலை நெருங்க இயலாத சூழல் ஏற்பட்ட போதும், அத்தனை அழிவுகளையும், இழப்புகளையும் தாண்டி கோயிலை மீள கட்டியெழுப்பிய சிவப்பணியாளர் இவர்.
தம் மரபிலிருந்து விலகாத சீர்மையாலும், சிவபக்தியாலும், சிவாச்சார்ய லக்ஷணத்தாலும் ஒரு பெரும் சிவாச்சார்ய திலகமாக குருக்கள் திகழ்கிறார்.
இவை போல் பல்வேறு சிறப்புக்களை தங்களகத்தே கொண்டிருக்கும் எமது சிவாசாரியார்களுக்கு கௌரவம் செய்யும் இந்தியா தருமபுரம் ஆதீனம், 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களுக்கும் சைவத்தமிழ் மக்கள் சார்பில் எமது நன்றிகளுடன் பணிகின்றோம்.
தொகுப்பு.
கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.