(மன்னார் நிருபர்)
(28-11-2021)
மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் அமைந்துள்ள நட்டாம் பிட்டி எனும் விவசாய நிலப்பரப்பில் விடத்தல் தீவு விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கையினை மாடுகள் சேதப்படுத்தியுள்ள போதும் உரிய அதிகாரிக்கு தகவல் வழங்கிய நிலையில் தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் அமைந்துள்ள நட்டாம் பிட்டி எனும் விவசாய நிலப்பரப்பில் விடத்தல்தீவு கிராம விவசாயிகள் கால காலமாக பெரும் போக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-ஆனால் குறித்த விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் கல்நடையான மாடுகளினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சேதங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-தற்போது இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்ச் செய்கையானது கடந்த வெள்ளிக்கிழமை (26) அன்று பெருமளவான மாடுகளினால் அழிக்கப்பட்டு தற்போது குறித்த விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளது.
-சுமார் 6 ஏக்கர் விவசாய செய்கை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வயலில் பயிர்கள் எதையும் விடாது மாடுகள் அழித்து விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கிய போதும் தற்போது வரை அப்பகுதிக்கு குறித்த அதிகாரி சமூகமளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
-மேலும் குறித்த வயலில் உள்ள மாடுகளை கட்டி வைக்குமாறும் குறித்த அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே பிரதேசச் செயலாளர்,அரசாங்க அதிபர் மற்றும் உரிய அதிகாரிகள் தமது வாழ்வாதார பிரச்சனைக்கு உரிய தீர்வை உடன் பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.