குரு அரவிந்தன்
அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே சுமார் 3.9 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வருகின்றது. சூரியனைச் சுற்றி வரும் இந்த விண்கல், 2060 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதைவிட இன்னும் அருகே, 1.2 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வரவிருக்கின்றது. சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவரும், இந்த விண்கல்லால் உடனடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், பூமிக்கு ஆபத்தான விண்கற்களின் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது. இதனுடைய திசை காலப்போக்கில் மாற்றமடையவும் வாய்ப்புண்டு. 1982 டிபி என்பது இதன் முன்னைய பெயராகும். 1082 அடி நீளமானது, அதாவது பாரிஸ் கோபுரத்தைவிட சற்று உயரமானது. 2 கிலோ மீட்டர் குறுக்களவைக் கொண்டது. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி எலியநோர் கெலின் என்ற அமெரிக்க பெண் வானியலாளரால் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் பூமிக்கு மிகஅருகே வரும் விண்கற்களை இனங்காணும் நாசாவின் திட்டத்தில் பணியாற்றியதால், இவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. இந்த விண்கல் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சுமார் 1.82 வருடம் எடுக்கின்றது.
‘ஓநாய் வருகிறது’ என்ற வேடிக்கைக் கதைபோல, இது போன்ற அஸ்ரோயிட் என்று சொல்லப்படுகின்ற விண்கற்கலால் பூமிக்கு ஒரு நாள் ஆபத்து ஏற்படலாம். யப்பான் நாட்டின் MUSES-C probe விண்கலம், இதைக் கண்காணிக்க அனுப்பப்பட இருந்தாலும், அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதை அருகே சென்று கண்காணிக்க முடியவில்லை. தினமும் ஏராளமான சிறிய விண்கற்கள் பூமியில் விழுந்த வண்ணம்தான் இருக்கின்றன. அவை பூமியை நோக்கி வரும்போது, அவற்றின் வேகம் காரணமாக வளிமண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு அதன் காரணமாக அனேகமான கற்கள் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அதையும் மீறிச் சில கற்கள் பூமியைத் தாக்குகின்றன. மனிதர்கள் இதனால் இதுவரை அதிகம் பாதிக்கப்படவில்லை. 1954 ஆம் ஆண்டு அலபாமாவில் வீட்டுக் கூரையை உடைத்து விண்கல் விழுந்ததில் ஒரு பெண் காயடைந்திருந்தார். இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய விண்கல் நமீபியா நாட்டில் விழுந்த கோபா, 60 தொன் எடை உள்ளதாகும். பொதுமக்கள் பார்வைக்காக அந்த விண்கல்லை இப்பொழுதும் அந்த இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். 1908 ஆம் ஆண்டு ரஸ்யாவில் விழுந்த விண் கல்லைத் துங்குஷ்கா நிகழ்வு என்று சொல்கிறார்கள், காரணம் துங்குஷ்கா ஆற்றில் இது விழுந்தது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுக்குண்டைவிட 185 மடங்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. பல்லாயிரக் கணக்கான காடுகள் இதனால் அழிக்கப்பட்டன. 1922 ஆம் ஆண்டு வோல்கோகிராட் பகுதியில் விண்கற்கள் மழை கொட்டுவது போல விழுந்தன. அதில் ஒரு பெரியகல் 284 கிலோ எடையுள்ளதாக இருந்தது. 2002 ஆம் ஆண்டும் இது போல இர்குட்ஸ் பகுதியிலும் விண்கற்கள் விழுந்தன. 2003 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் விழுந்த விண்கலின் எடை 17 கிலோவாக இருந்தது.
சில விண்கற்களில் இரும்பு 90 சதவீதமும், சுமார் 8 சதவீதம் நிக்கலும் கலந்து இருக்கும். சாதாரண விண் கல்லைவிட இது எடை கூடியதாக இருக்கும். செவ்வாய், புதன் கிரகங்களில் மோதலால் வெடித்துப் பறந்த கற்களும் பூமியில் வந்து விழுந்திருக்கின்றன. ஏனைய கற்களோடு சேர்ந்திருந்தால் இவற்றை இனங்காணுவது கடினம். அரிசோனாவில் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பெரிய பள்ளம் ASTROBLEME ஒன்று உள்ளது. சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் இப்படியான மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதால்தான் டையனோசர்கள் அழிந்தன என்று ஆய்வாளர் குறிப்பிடுவர். பூமியின் 70 சதவீதம் கடல் பரப்பாக இருப்பதால், விண்கற்கள் நிலத்தில் வந்து விழுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. இதனால்தான் நாசா நிறுவனம் பூமிக்கு அருகே வரும் விண்கற்களை அவதானித்தபடி இருக்கின்றது. அவற்றால் உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்பதை நாசா உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆனாலும் வருங்காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பூமிக்கு அருகே உள்ள சில விண்கற்களைக் கவனமாக அவதானிக்கின்றது. தேவை ஏற்படின் அவற்றைச் சிறு துண்டுகளாக உடைப்பதற்கும் நாசா ஏற்பாடுகளைச் செய்கின்றது. இயற்கை அழிவு தவிர்க்க முடியாதது. அது எப்படியும், எப்போதும், ஏற்படலாம், யார் அறிவார்?