எஸ்.கே. குமரகுரு
மாணவர்களின் கல்வி மேம்பாட்டையே தன்வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொண்டு,தனது பதவிக்காலம் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர். தான் கல்விகற்ற பாடசாலையில் அதிபராகப் பணியாற்றிச்சாதனைபடைத்தவர். தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைவராலும் பேசப்படும் அதிபராக திகழ்பவர். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் முன்னாள் அதிபர் அமரர் திருமதி பரஞ்சோதி பாக்கியராசா அவர்கள். ஆசிரியத் தொழிலைத் தொண்டாகவும், தொழுகையாகவும் ஏற்று மட்டக்களப்புமாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய இவர் அண்மையில் இறைபதம் அடைந்தார்.அவரது கல்விச் சேவையைஅசைபோடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பாதித்த சூறாவளி, ஈழ விடுதலைப்போராட்டம், தமிழ் முஸ்லிம் கலவரம் போன்ற காரணிகளின் தாக்கங்களை எதிர்கொண்டு பாடசாலையைக் கட்டியெழுப்பியவர். சிறந்த திட்டமிடலும், அதனை நடைமுறைப்படுத்தும் ஆளுமையும் மிக்கவர். அமைதியாகப் பேசும் சுபாவமுடையவர், அதேவேளை கண்டிப்பும் கடமையுணர்வும், மாணவர்களின் ஒழுக்கத்தில் மிகுந்த அக்கறையும், அவதானமும் மிக்கவராகத்திகழ்ந்தவர். அவரது நிழலுக்கே மாணவர்கள் அஞ்சுவார்கள், அப்படி இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இன்றும் முன்மாதிரியாகத்(Role model) திகழும் இவர்,இரும்புச் சீமாட்டி என்று அழைக்கப்பட்டவர்.
கல்வியானது,செல்வங்களில் எல்லாம் தலையானது, இதை எவராலும் எக்காலத்திலும் அழிக்க முடியாதது. இதனையே வள்ளுவர் ‘’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்குமாடல்ல மற்றை யவை” என்று அழகாகக் கூறியுள்ளார். கல்வி மனிதவள மேம்பாட்டிற்கும், சமுதாய வளர்ச்சிக்கும், அறிவைப்பெற்று பொருளாதாரத்தில் உயர்வுபெற்று சிறந்த குடிமகனாக வாழ்வதற்கும் வழிவகுக்கின்றது. இதனை ஒவ்வொரு மாணவர்களும் அடையவேண்டும் என்பதில் அக்கறையுடையவர்.
திருமதி பரஞ்சோதி பாக்கியராசா அவர்கள் ஆசிரியர், அதிபர், கல்விப் பணிப்பாளர் என ஐம்பத்தெட்டு ஆண்டுகள்(58)கல்வியியலாளராகப் பணியாற்றியவர். எப்படிக் கற்பிக்க வேண்டும், அதற்காக எவற்றையெல்லாம் கற்க வேண்டும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை எவ்வாறு வளர்க்கவேண்டும், அதனூடாக மாணவர்களின் தரத்தை உயர்த்தி சிறந்த பெறுபேறுகளை பெறச்செய்வது போன்ற பலதரப்பட்ட விடையங்களை கைக்கொள்பவரே கல்வியியலாளராவார். இவற்றையெல்லாம் சிறப்பாக கையாண்டு வெற்றிகண்டவர். தனது பதவிக்காலத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண, உயர்தர பரிட்சைகளில் சிறந்த பெறுபேற்றுகளைப் பெற்று, நகரத்திலுள்ள ஐந்து முன்னணிக்கல்லூரிகளிலும் முதன்மையானதாக வின்சன்ட் மகளிர் உயரதர பாடசாலையை உயர்த்திய பெருமைக்குரியவர்.
‘’தோன்றின் புகழொடு தோன்றுக”என்பதற்கமைய ஆரையம்பதியில் புகழ்பூத்த குடும்பத்தில் 1931ம் ஆண்டு பிறந்தவர். ஓய்வுபெற்ற ஆசிரியராகவும், கந்தசாமி கோவில் வண்ணக்கராகவும், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனுடன் மிகுந்த ஈடுபாடும் உடைய அமரர் சி. ஏரம்பமூர்த்திக்கும், தாயார் நேசம்மா அவர்களுக்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். சிவநேசநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சுந்தரமூர்த்தி (ஓய்வு பெற்ற உணவுக்கட்டுப் பாட்டு அதிகாரி), தட்சணாமூர்த்தி(ஓய்வு பெற்ற முன்நாள் இராஜதந்திரி) அகியோரை சகோதரர்களாகக் கொண்டவர்.
கல்வியும் ஆசிரியப் பணியும்.
ஆரம்பக் கல்வியை ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் தொடங்கி,வின்சன்ட் மகளிர் உயரதர பாடசாலை, யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றவர். உயர் கல்விகற்க தமிழ்நாடு சென்று, மதுரை ‘’LADY DOAK COLLEGE” ல் கற்று, பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில்பயின்று 1956ம் ஆண்டு விஞ்ஞானமானி (BSc) பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர்.
அதே ஆண்டு இலங்கை வந்து மட்/ ஆனைப்பந்தி இராமகிருஷ்ண மிஷன்பெண்கள் பாடசாலையில்ஆசிரிய பணியைத் தொடங்கியவர். பத்து ஆண்டுகளின் பின்பு கல்லடி சிவானந்த வித்தியாலயம், ஆரையம்பதி மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் பணியாற்றினார். ஓய்வுபெற்ற கல்வி ஆலோசகர் அமரர் சு. பாக்கியராசா அவர்களை திருமணம் செய்து கலைவாணி, செவ்வேள், சசிதரன் ஆகிய மூன்று பிள்ளைகளின் தாயானார்.
அதிபர் பதவியும் பாடசாலை நிர்வாகமும்.
சிறந்த ஆசிரியராகவும், குடும்பத்தலைவியாகவும்பணியாற்றும் போது பதவி உயர்வுகளும் அவரைத் தேடிவந்தன. இலங்கை கல்வி நிருவாக சேவை பரிட்சையில் சித்தியடைந்து அதிபராகப பதவியுயர்வு பெற்று 1971ம ஆண்டு மீண்டும் மட்/ ஆனைப்பந்தி இராமகிருஷ்ண மிஷன்பெண்கள் பாடசாலையில் பணியாற்றத் தொடங்கினார்.
மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர். தனது பிள்ளைகளை நகரத்தில் இருந்த முன்னணி பாடசாலைகளில் கல்விகற்க அனுமதிக்காதுதான் பணியாற்றியபாடசாலைகளுக்கே அழைத்துச் சென்றவர்.
1977ம் ஆண்டு தான் கல்வி கற்ற 200 வருட வரலாற்றைக் கொண்ட வின்சன் மகளிர் உயரதர பாடசாலையில் அதிபராக பொறுப்பேற்று, 1990ம் ஆண்டு வரை, பதின்மூன்று வருடங்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். இக்காலம் மிகுந்த சவால் நிதைந்ததாக அமைந்தது. 1978ம் ஆண்டு வீசிய சூறாவளிமட்டக்களப்பு மாவட்டத்தையே புரட்டிப்போட்டது, பாடசாலைக்கட்டிடங்கள் தரைமட்டமாகின, பல மாதங்கள் பாடசாலைகள் இயங்கவில்லை, தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ஈழ விடுதலைப் போராட்டம், திடீர்த் திடிரென நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், ஹர்த்தால்,கடையடைப்பு, மாணவர் போராட்டங்கள், தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்கள், இடப்பெயர்வுகள் என நாளும் ஒரு நிகழ்வு இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் கிராமங்களின் அமைவிடமானது ‘’புட்டும் தேங்காய் பூ”வும் போன்றது. அருகருகே அந்நியோன்நியமாக வாழ்ந்த மக்கள் 1985ம் ஆண்டு ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் கலவரத்தால் எதிரிகளாயினர். இந்த காலகட்டத்தில் ஆரையம்பதியில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்வதானால் அருகே உள்ள காத்தான்குடி முஸ்லிம் கிராமத்தினூடாகவே பயணிக்க வேண்டும். இந்த ஆபத்தை உணர்ந்து மீன்பிடிக்கும் சிறிய தோணியை வாடகைக்கு அமர்த்தி,மட்டக்களப்பு வாவியினூடாகப் பயணித்து பாடசாலைக்குச் சென்றதைரியசாலி திருமதி பாக்கியராசா என்றால் மிகையாகாது.
மாணவர் கல்வியே அவரது முழுச்சிந்தனையாகும். தனது ‘’நுண்மாண் நுழைபுலம்” மூலம் ஆசிரியர்களிடம் வேலைவாங்கியவர். இதனால் எப்போதும் ஆசிரியர்களுக்கு சிம்ம சொற்பனமாகத் திகழ்ந்தார். கடமையை சரியாகச் செய்யாத ஆசிரியர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியாது. அதே வேளை திறமைமிகு ஆசிரியர்களைப் பாராட்டத்தவறமாட்டார். தனது பன்முக ஆளுமையால்வின்சன்ட் மகளிர் உயரதர பாடசாலையைதேசிய மட்டத்தில் தூக்கிநிறுத்தியவர். இவரது காலத்தில் கல்வி கற்ற எண்ணற்ற மாணவர்கள் டாக்டர், பொறியலாளர், இலங்கை நிருவாக சேவை, கல்விச் சேவை, ஆசிரியர், கணக்காளர், தாதியர் எனப் பலதரப்பட்ட துறைகளில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை கல்வியில் மட்டுமன்றி, அவர்களை பாடவிதானத்துக்குப் புறம்பான செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தவர். அவர்கள் மாவட்டம், மாகாணம், தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கங்களை வெல்வதற்கும்ஊக்கப்படுத்தியவர்.குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள், தமிழ்த் தினப் போட்டி, நாடகம், நாட்டுக் கூத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதற்கு உதாரணமாமக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
1979 ஆண்டு வடகிழக்கு மாகாண மட்டத்தில் இடம் பெற்ற நாட்டுக் கூத்துப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் பங்கேற்க ஒரு வார காலம் இருந்த வேளையில்,மாணவி ஒருவருக்கு ஏற்பட்டதிடீர் சுகயீனம் காரணத்தால் அவர்பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் நாட்டுக் கூத்து என்னவென்று தெரியாத மாணவியான மாலதி தியாகராஜாவை தெரிவு செய்து,எவ்வாறு ஆடவேண்டும் என்பதை தாளத்துக்கு ஏற்ப தானே ஆடிக்காட்டினார். மேலும் அனைவருக்கும்தொடர்ச்சியான பயிற்சி வழங்கிஅவர்கள் தங்கப்பதக்கம் வெல்வதற்கு வழிகாட்டினார். இது அவரது பன்முக ஆளுமையை எடுத்துக் காட்டுகின்றது. இந்த நாட்டுக்கூத்துக்கு அண்ணாவியாராக இருந்தவர் ஆரையம்பதி நாட்டுக் கூத்துக் கலைஞர்,ஆசிரியர், அமரர் நல்லலிங்கம் அவர்கள் ஆவார்.
வின்சன்ட் மகளிர் உயரதர பாடசாலையில், மாணவர்கள்கல்வி கற்பதற்கு அனுமதி பெறுவது மிக மிகக் கடினமான செயலாகும். பரிட்சை வைத்தே தரத்தின் அடிப்படையிலே அனுமதி வழங்குவார். பணிநிமிர்த்தம் மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்று வரும் அரச அதிகாரிகளின் பிள்ளைகளாக இருந்தாலும் ஒரே நடைமுறையையே பின்பற்றுவார். எந்தச் சந்தர்ப்பத்திலும்அரசியல்வாதிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளின்அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டார்.
சிறந்த திட்டமிடலும், செயற்படுத்தும் ஆற்றலும், அபார ஞாபக சக்தியும் உடையவர். ஆயிரக்கணக்கான மாணவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். திறமையான மாணவர்களை இனம்கண்டு பொறுப்புக்களை ஒப்படைத்து ஊக்கப்படுத்துவார். திங்கட்கிழமைகளில் நடைபெறும் மாணவர், ஆசிரியர் காலைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றி மாணவர்களைப் புத்தூக்கம் அடையச்செய்வார்.
இருநூறு (200) வருடவரலாற்றைக் கொண்ட வின்சன் மகளிர் உயரதர பாடசாலையில் பதின் மூன்று வருடங்கள் அதிபராகப் பணியாற்றி பல சாதனைகள் படைத்த இரும்புச் சீமாட்டி இவர் என்றால் மிகையாகாது. அவரது பதவிக்காலம் பாடசாலையின் பொற்காலம் எனலாம்.
மாவட்டக் கல்விப் பணிப்பாளர்.
1990ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவையில், சேவை மூப்பின் அடிப்படையில்உயர் தரம்பெற்று, மாவட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி உய.ர்வுபெற்று மட்டக்களப்பு காரியாலயத்தில் பணியாற்றினார். தனது சிறந்த நிருவாகத்திறமையால் சகல பாடசாலைகளிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தினார்.
1992ம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து கொழும்பு மாநகரத்தில் இயங்கிய தனியார் சர்வதேச பாடசாலையானCOLOMBO KINGSTON COLLEGE ல் அதிபராகப பணிபுரிந்து 2014ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
திரு,திருமதி பாக்கியராசா அவர்களும், பிரபல எழுத்தாளர் நவம் ஆசிரியர் அவர்களும் ஆரையம்பதிக் கிராமத்தின் மண்ணின் மைந்தர்கள், நவம் ஆசிரியரின் மூத்த மகன் முகுந்தன் அவர்களுக்கும், பாக்கியராசா அவர்களின் மூத்த மகள் கலைவாணிக்குமான திருமண பந்தத்தின் மூலம் குடும்ப உறவினரானவர்கள். புளோரிடாவில் வசித்துவரும் மகள், மருமகன், பேரக்குழந்தைகளான விஷ்ணு, கிருஷ்ணா அகியோருடன் இறுதிக்காலத்தைக் கழித்தவர்.
2018ம் ஆண்டு கனடாவின்சன்ட் மகளிர் உயரதர பாடசாலை பழைய மாணவர் சங்கம் நடத்திய வருடாந்த ஒன்று கூடலில் பிரதம அதிதியாக பங்குபற்றிச் சிறப்பித்தார். இதுவே அவர் இறுதியாக பங்குபற்றிய பொது நிகழ்வாகும். வாழும்வபோதே அவரைக் கெளரவித்தகனடாவின்சன்ட் மகளிர் உயரதர பாடசாலை பழைய மாணவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டையே தன் வாழ்வின் இலட்சியமாக ஏற்று வாழ்ந்து காட்டியவர் புகழ் பூத்த அதிபர் திருமதி அமரர் பாக்கியராசா அவர்கள். சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர். இன்றும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர். திருமதி சி.பாக்கியராசா என்ற பெயருக்கு இருக்கும் வசீகரம் வரலாறாகி விட்டது. பன்முக ஆளுமை மிக்க சிறந்ததொரு அதிபரை மட்டக்களப்பு கல்விச் சமூகம் இழந்து தவிக்கின்றது. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும், அன்னார் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றேன். வையம் உள்ளவரை வாழ்க அவர் பெயர்.