(30-11-2021)
வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கல்முனை பிராந்திய உறுப்பினர் வைத்தியர் ஏ.எம் சுஹைல் தெரிவித்தார்.
அரச வைத்திய சங்கத்தின் அக்கரைப்பற்று கிளை ஏற்பாட்டில் திங்கட்கிழமை(29) மாலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது
நாங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்தும் நோக்கம் கடந்த நான்கு மாதங்களாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கின்ற நிர்வாக சீர்கேட்டு தளம்பல் நிலை ஆகும்.எனவே இந்த நிர்வாக சீர்கேட்டு தளம்பல் நிலைமைக்கு முன்னாள் வைத்திய அத்தியட்சகரே பொறுப்பாளியாவார்.இந்த விடயத்தை கருதிக்கொண்டு ஒரு தீர்வு எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒரு தொழிற்சங்க போராட்டத்தை நடாத்த முடிவு செய்தோம் .ஆனால் கடந்த காலத்தில் சுகாதார அமைச்சும் பொலிசாரும் தந்த எமக்கு உறுதிமொழியை அடுத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தோம்.
ஆனால் இன்று இவ் வைத்தியசாலையில் பல நிர்வாக ரீதியான முறைகேடுகளும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை முகம் கொடுத்துள்ளன. இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் எங்களது சங்க அங்கத்தவர்கள் பல சந்தர்ப்பங்களில் எங்களுக்கு முறைப்பாடுகளை செய்திருந்தனர்.அதன் பிற்பாடு நாங்கள் இவ்வருடம் கடந்த மே மாதம் ஜூன் மாதமளவில் அந்த காலத்தில் தற்காலிக வைத்திய அத்தியட்சகர் கடமை புரிந்த ஐ.எம். ஜவாஹிர் என்பவரிடம் பேசுவதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தோம்.எனினும் அவர் எம்மை புறக்கணித்ததுடன் எமது பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் இவர் விடாப்பிடியாக இருந்ததன் காரணமாக வைத்தியர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு செல்வதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தோம்.
எமது இந்த வேலைநிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை அடுத்து சுகாதார அமைச்சு உடனடியாக அவரை உடனடியாக அவரை கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியராக கடமையை ஏற்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.இருப்பினும் அவர் அங்கு தனது கடமையை பொறுப்பேற்காமல் நான்கு வாரகாலம் சுகயீன விடுமுறையின் பின்னரே கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமை பொறுப்பேற்றிருந்தார். இருப்பினும் அவர் அங்கு சென்ற பிற்பாடு தான் முன்பு கடமையாற்றிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சில ஊழியர்களையும் அங்கு கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் சிலரையும் தன் வசப்படுத்தி வைத்தியசாலையில் நிர்வாகத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்.
எனவே தான் வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள் ஒன்றிணைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவரின் தூண்டுதலினால் இடம்பெறுகின்ற நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்யுமாறு சுகாதார அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்துவதற்கும் இந்த ஊடக சந்திப்பில் தீர்மானித்துள்ளோம்.
எனினும் தற்போது சுகாதார அமைச்சும் பொலிசாரும் குறித்த வைத்தியரின் விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் ஒரு சில ஊழியர்கள் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை இடமாற்றம் செய்வதற்கும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் வாரமளவில் சுகாதார அமைச்சு அதிகாரிகளை அனுப்பி குறித்த வைத்தியசாலையில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை விசாரணை செய்ய உள்ளதாகவும் சுகாதார அமைச்சு எமக்கு அறிவித்துள்ளனர்.இதற்கமைய எமது போராட்டத்தை பிற்போடுவதுடன் அவ்வாறு இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் குறித்த வைத்தியரின் செயற்பாட்டை கண்டித்து தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்படும் என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.அத்துடன் இங்கு கடமை புரியும் வைத்தியர்களை அடக்கு முறைகளை கையாளும் முகமாக கடந்த காலங்களில் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் செயல்பட்டிருக்கிறார் அதற்கான ஆதாரங்களும் உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அரசாங்க வைத்திய சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் லியனகே நிரோஷன்உள்ளிட்ட அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த யூலை மாதம் அளவில் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுஇ சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடிதத் தலைப்பில் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிரான மேற்படி கடிதங்கள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.