வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண திட்ட பணிப்பாளர் உறுதியளிப்பு
(மன்னார் நிருபர்)
(01-12-2021)
மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் , மடுக்கரை வீதியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த பாலம் மீண்டும் உரிய முறையில் மறு சீரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண திட்டப் பணிப்பாளர் ஜெகநாதன் உறுதியளித்துள்ளார்.
-குறித்த பாலத்தின் அவல நிலை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தது.
-இந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (1) வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வடக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.கிரிஸ் கந்தகுமார் தலைமையிலான குழுவினர் சென்று குறித்த பாலத்தினை பார்வையிட்டதோடு, பாலத்தின் நிலை குறித்து ஆராய்ந்துள்ளனர்.
இதன் போது குறித்த பாலம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு இருப்பதை குறித்த குழுவினர் உறுதி செய்தனர்.
இந்த பாலத்தில் மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கு இது பொருத்தமில்லாத மழைக் காலமாக இருப்பதால் தற்காலிகமாக மக்கள் போக்குவரத்திற்கு ஏதுவாக அபிவிருத்தி பணியை விரைவாக முடித்து கொடுத்து எதிர்வரும் வருடம் இந்த பாலத்தை உரிய முறையில் தரமாக சீரமைப் பதாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் நானாட்டான் பிரதேசத்தில் அவசரமாக அமைக்கப்பட வேண்டிய சில பாலங்கள் நானாட்டான் பிரதேச செயலாளரினால் திட்டப் பணிப்பாளருக்கு நேரில் அழைத்து சென்று அடையாளம் காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.