(மன்னார் நிருபர்)
(2-12-2021)
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை(2) காலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
-இதனை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் தமது தடுப்பு நடவடிக்கை வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நடவடிக்கைகளுக்கு மக்களுடைய ஆதரவை எதிர் பார்த்துள்ளோம்.மக்கள் இவ்விடயத்தில் விழிப்புடன் இருந்து எமது சுகாதார துறைக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
-மன்னார் மாவட்டத்தில் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை 11 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு தொற்றாளர் இவ்வருடம் 2021 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளார்.என அவர் மேலும் தெரிவித்தார்.
–
-உலக எயிட்ஸ் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (2) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம் பெற்றது.
-குறித்த கருத்தரங்கில் வைத்தியர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் , ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.