சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
“இயலாது அல்லது நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறப்படுவதை செய்து காட்டி வெற்றி பெறுவதே அரசியல்; அதை சாதித்துக் காட்டுவதே கட்சிகளின் வெற்றி; அதுவே தலைமைத்துவத்தின் வெளிப்பாடு”-
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்ஜான் எஃப் கென்னடி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய இந்த வார்த்தைகள் இன்றளவுக்கும் மிகவும் யதார்த்தமானதாகும். அப்படிச் செய்ய முனைபவர்கள் மீது ஏளனத்துடன் கூடிய விமர்சனம் எழுவதும், அவர்கள் வெற்றி பெற்றதும் பாராட்டுவதும் அரசியல் கூத்தின் இணைபிரியாத அங்கமாகும்.
இலங்கையில் முன்னணி தமிழ் அரசியல் அமைப்பாக இன்றளவும் செயல்பட்டு, தாங்களே தமிழர்களின் `பெரும்பான்மையான ஆதரவை` பெற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட கட்சிகளின் கூட்டுக் கலவையாகவே செயல்படுகிறது. ஆரம்பத்தில் நான்கு கட்சிகள் ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் போர்க்காலச் சூழலில் இணைந்து உருவாக்கிய கூட்டணியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அவர்கள் இதுவரை தேர்தல் ஆணையத்தில் தம்மை தனிக்கட்சியாகப் பதிவு செய்துகொள்ளவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலேயே தேர்தலைச் சந்தித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினர், ஆனால் அந்த இருகட்சிகளிடையே இருந்த முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. இன்று ஏட்டளவில் ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையும் உதயசூரியன் சின்னம் மட்டுமே அந்த கூட்டணியில் எஞ்சியுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் `புதிய ஜனநாயக வெளிச்சத்தைப் பாய்ச்ச` மூன்று கட்சிகளின் கூட்டணியாகச் செயல்பட்டு வந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தனியொரு அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது. அதற்கு டார்ச் லைட் (மின்சூள்) சின்னமாக அளிக்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளி தமிழர்கள், கொழும்பு மற்றும் அதன் சுற்றாடலில் வாழும் தமிழர்களை மையப்படுத்தியே அந்த கட்சி உதயமாகியுள்ளது.மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையேற்கும் தொழிலாளர்தேசிய முன்னணி மற்றும் ராதாகிருஷ்ணன் தலைமையில் செயல்படும் மலையக மக்கள் முன்னணி ஆகியவை அந்த மும்மூர்த்திகளின் தலைமையில் ஒன்றிணைந்துள்ளன.
இதுகுறித்த அறிவிப்பு வெளியான உடனேயே `டார்ச் லைட் கட்சிக்கு` சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் வெளிவர ஆரம்பித்தன.
“இது நமது மக்களின் வெற்றி” என்கிறார் தமுகூ தலைவர் மனோ கணேசன்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், தலைநகர் கொழும்பில்- இந்த மூன்று கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆரம்பித்தனர். அது தொடங்கப்பட்ட ஜூன் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை, நான் மனோ கணேசனை பேட்டி கண்டேன்.
“இலங்கையில் கூட்டணிகளின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும், இந்நிலையில் நீங்கள் அமைத்துள்ள இந்த கூட்டணி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்”?
”இந்தக் கூட்டணி நிலைத்து நிற்கும் என்கிற நம்பிக்கை எமக்கு உள்ளது; இந்த கூட்டணியிலுள்ள மூன்று கட்சிகளும் தொடர்ந்து மக்களுக்கான சேவைகளை செய்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். கொள்கையளவில் அடிப்படையில் எமக்குள் ஒற்றுமை இருக்கிறது. நீடித்து நிற்க வேண்டும், நிற்கும் என்கிற நம்பிக்கையில்தான் இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கை எமக்கு முழுமையாக உள்ளது”
ஆறு வருடங்கள் கடந்த நிலையில், அந்த மூன்று கட்சிகளும் அதன் தலைவர்களும் இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்துள்ளனர். அதில் கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளதுனர். அதற்கு மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்தும் பாராட்டும்.
எனினும் இந்த `டார்ச் லைட் கட்சியின்` அடித்தளம் அல்லது வாக்கு வங்கியான மலையகம். கொழும்பு மற்றும் அதன் புறநகர்பகுதிகளுள்ள ஆதரவை மட்டுமே வைத்துக் கொண்டு தேசியளவில் அரசியல் செய்ய முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும் நமக்கும் தெரியும்.
“தேசியளவில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேரவா இன்று தமிழ் முஸ்லிம் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை நானறிவேன்” என்று இந்த புதிய கட்சியின் தலைவர் மனோ கணேசன் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேசியளவில் அரசியல் செய்வதற்கும், தமிழ் பேசும் மக்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கவும் அவர்கள் மிகவும் செறிந்து வாழும் வடக்கு-கிழக்கில் இந்த டார்ச் லைட்டின் வெளிச்சம் பாய வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் மலைகளில் ஏறியிறங்கியிருக்கலாம், காலிமுகத் திடலில் கால் பதித்திருக்கலாம், ஆனால் நாட்டில் பரந்துபட்ட அளவில் மக்களின் மனங்களை அவர்கள் வெல்ல வேண்டும். வடக்கு கிழக்கில், இன்றும் மறுக்க முடியாத வகையில், மக்கள் மதரீதியாக, ஜாதி ரீதியாக பிரதேச ரீதியாக பிரிந்துள்ளனர். இன்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜா அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த வரலாறும் உண்டு. அதேபோல் கொழும்பைத் தவிர்த்து கண்டியில் போட்டியிட்டு மனோ கணேசன் தோல்வியடைந்த கசப்பான உண்மைகளும் இலங்கை அரசியலில் உள்ளன.
முஸ்லிம் கட்சிகளுக்குள் இருக்கின்ற பிளவுகள் மிகவும் அதிகம். காலஞ்சென்ற அஷ்ரஃப் தலைமையில் ஆலமரமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தொடர்ச்சியாக விழுதுகளை இழந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஆலமரம் முறிந்து விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த ஆலமரத்திலிருந்து பலர் விலகி தனிக்கட்சி ஆரம்பித்ததால், ஏராளமான முஸ்லிம் கட்சிகள் உருவாகியுள்ளன. அவை நேரத்திற்கு நேரம் தேர்தலுக்குத் தேர்தல் `அற்ப ஆசன அரசியல்` செய்து மதிப்பிழந்து நிற்கின்றனர். முஸ்லிம் கட்சிகளுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் வரலாற்று ரீதியாகவே ஏழாம் பொருத்தம்தான்.
வடக்கு கிழக்கில் செயற்படும் தமிழ் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவை ”பஞ்சரான சைக்கிள், இடிந்து விழுந்த வீடு, உதிர்ந்த பூ, பயன்பாட்டில் இல்லாத கலங்கரை விளக்கம், துருப்பிடித்த நங்கூரம், சுருதி சேராத யாழ். ஓட்டையான படகு” என்று அன்றாடம் சமூக ஊடகங்களில் ஏளனத்திற்கு உள்ளாகின்றன. இந்த கட்சிகளின் செயற்பாடுகள் அன்றாட மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
இந்நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவைக் கொண்டுள்ள மனோ கணேசன் தான் எண்ணியுள்ளபடிதமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேரவாவை எப்படி முன்னெடுக்கப் போகிறார் என்பதை காண பலரைப் போல நானும் ஆவலாக இருக்கிறேன்.
மனோ கணேசனுக்கு சில சாதகமான அம்சங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது கொழும்பில் இருந்துகொண்டுஅவரால் மும்மொழியில் சரளமாக பேசி அரசியல் செய்ய முடியும். இது அவருக்கான மிகப்பெரிய பலம். அதேபோன்று இந்தியா உட்பட பன்னாட்டு அரசுகள், அதன் தூதர்கள், மனித உரிமை அமைப்புகள், ஐ நா போன்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளது. நானறிந்த வரையில் அவருக்கு இயற்கையாகவே ஒரு விஷயத்தை உடனடியாகப் புரிந்து கொள்ளவும் அதன் தீவிரத்தன்மையை அறிந்துகொள்ளவும் இயலும். அது ஒரு பிளஸ் பாயிண்ட்.
இன்றளவும் கொழும்பு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கள முஸ்லிம் மக்களிடமும் அவருக்கு நல்ல ஆதரவுள்ளது. அதேவேளை அவரும் மிகவும் போராடியே கொழும்பில் வெற்றிபெற முடிகிறது.
கொழும்பிலுள்ள தமிழர்கள் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்த போது அவரும், அமரர் ரவிராஜும் வீதியிலிறங்கி போராடியதை யாவரும் அறிவர். அதேபோல் மலையகத்தில் திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. அதேபோல் இந்திய வம்சாவளி தமிழர்களிடையே மனோவுக்கென்று ஒரு தனி இடமும் இருக்கிறது. எனினும் மயில்வாகனம் திலகராஜ் போன்ற துடிப்பான இளைஞர்களை தமிழ் முற்போக்கு கூட்டணி இழந்தது வருந்தத்தக்கது. அவர் போன்றோர் மீதும் டார்ச் லைட் வெளிச்சம் பாய்ச்சுவது பயனுள்ளதாக இருக்கும்.
வடக்கே வன்னியில், மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் மீது ஒரு பற்று மற்றும் அபிமானம் இருக்கக் கூடும். வடக்கில் இந்த கூட்டணி கால்பதிக்க விழைகிறது அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஆனால் இந்த அறிகுறிகளும் மனோ கணேசனின் யாழ்ப்பாண விஜயமும் வாக்குகளாக மாறுமா என்பதில் பல கேள்விகள் உள்ளன.
மலையகத்தில் வாக்கு வங்கி சரிந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு பலமான கட்சியாகவே உள்ளது. மலையகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் வாக்கு வங்கியாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனை ஒன்றுதான். அவர்களின் மொத்த வாக்கையும் அள்ளுவதில் இந்த மும்மூர்த்திகள் வெற்றிபெற்றால் அது இவர்கள் கூறும் அல்லது எதிர்பார்க்கும் தேசியளவில் தமிழ் பேசும் சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு முதல் படியாக இருக்கும்.
அதேவேளை, மலையகத்திற்கு வெளியே பம்பரமாகச் சுழன்று அரசியல் செய்ய வேண்டுமென்றால் அது மனோ கணேசனின் தோள்களிலேயே தங்கியுள்ளது. சாரத்தை வரிந்துகட்டிக்கொண்டு வீதியில் இறங்கி அவரால் அரசியல் செய்ய முடியும். சிங்கள அரசியல்வாதிகளை அவர்கள் பாணியில் நேருக்கு நேர் எதிர்க்க முடியும்.
பார்ப்பதற்கு அமைதியாக இருப்பவர்கள் என்று தோன்றினாலும் திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அரசியல் ஆழமாக காலூன்றியவர்களே. அவர்களது அனுபவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. கணிசமான அளவில் தேட்ட தொழிலாளர்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது.
தேசிய அளவில் தமிழ் பேசும் மக்களை ஒரு அரசியல் சக்தியாக ஒருங்கிணைப்பது மிக மிக சவாலான விஷயம். அது பேசப்படும் அளவுக்கு எளிமையானது அல்ல. ஆனால் ஜான் கென்னடி கூறியதை போல் முடிந்தால் இயலாதது இல்லை.
புதிய கட்சியை வரவேற்போம், வாழ்த்துவோம், ஆனால் அதே நேரம் விமர்சனம் செய்யவும் தயங்க மாட்டோம்.