நக்கீரன்–கோலாலம்பூர், டிச.02:
புலம் பெயர்ந்த தமிழர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வரும் பன்னாட்டு ஊடகமான கனடிய ‘உதயன்’ வார இதழ். , கடந்த சில வருட காலமாக மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சியை மாதந்தோறும் நிறைவு ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதத்திற்குரிய நாவன்மை நிகழ்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, இதில் தமிழகமும் இணைந்து கொண்டது மிகச் சிறப்பாக அமைந்தது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த சென்னைவாசியும் தமிழாசிரியர்-கவிஞர்- எழுத்தாளர் என்னும் பரிமாணங்களைக் கொண்டவருமான அ. தமிழரசியும் இணையவழியான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரையும் இதற்கெல்லாம் அடிநாதமான உதயன் இதழின் தலைமை ஆசிரியர் நாகமணி லோகேந்திர லிங்கம் அவர்களையும் பாராட்டினார்.
மலேசியாவில் மாலைப் பொழுதில் 7:00 மணி அளவில் இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது, தமிழகத்தில் மாலை 4:30 மணியாகவும் கனடாவில் காலை 6:00 மணியாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உதயன் இதழின் தலைமை ஆசிரியர் வழக்கமாக நள்ளிரவைக் கடந்து, உறக்கத்தையும் சமாளித்தபடி எந்தப் பணியையும் அடுத்த நாளுக்கு ஒத்திவைக்காமல் அன்றையன்றைக்கே நிறைவேற்றிவிட்டு உறங்கச் செல்லும் வழக்கமுடையவர் என்றாலும் மலேசிய மாணவர்களின் பிஞ்சு முகத்தையும் அவர்களின் கொஞ்சு தமிழையும் கேட்க காலை 6:00 மணிக்கெல்லாம் தயாராகிவிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் கோல சிலாங்கூர் சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவி கேஷ்வினி ராஜா, ஜோகூர் மாநிலம் தெலுக் செங்காட் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர் பிரியநேசன் முருகேஷ், பினாங்கு மாநிலம் தென் செபராங் பிராய் நிபோங் திபால் சங்காட் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர் சர்மிந்திரன் சிவநாதன், கோலாலம்பூர் அப்பர் தமிழ்ப் பள்ளி மாணவர் சக்தீஸ்வரன் நாகேந்திரன், மலாக்கா மஸ்ஜித் தானா சுங்கை பாரு தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவி லேனுஷா இளங்கோவன் ஆகியோர் இயற்கையைப் பாதுகாப்போம் என்னும் தலைப்பில் வெவ்வேறு கோணத்தில் எழுச்சிமிகப் பேசினர்.
வழக்கம்போல, நிகழ்ச்சியின் தொடக்க உரையாகவும் தலைமை உரையாகவும் இடம்பெற்றது மூத்த இதழாளர் திரு. லோகேந்திர லிங்கனின் உரை.
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களை அரும்பாடுபட்டு ஒன்றிணைத்து நாவன்மை நிகழ்ச்சியை சளைக்காமல் ஏற்பாடு செய்துவரும் பாடாகர் ரவாங் ராஜாவும் இதற்கு அமைதியாக இருந்து பாடாற்றிவரும் அவரின் மனைவி ஸ்ரீயும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள் என்று குறிப்பிட்டார். அத்துடன் காலத்திற்கு ஏற்ப ஒரு தலைப்பை ஏற்று சிறுவயதுச் சொற்பொழிவாளர்கள்’ சிரத்தையும் சிறப்பும் கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வந்துள்ளமை உலகத் தமிழர்களைப் பெருமை கொள்ளச் செய்கின்றது என்றார்
மாணவர்களின் உரைக்குப் பின் பாராட்டுரை வழங்கிய திருமதி தமிழரசி, “இயற்கையை மிஞ்சிய ஆற்றல் உலகில் இல்லை; மனித ஆற்றல் அறிவியல் துணை கொண்டு எத்தனை உயரத்தை எட்டினாலும், இயற்கையின் பேராற்றலுக்கு ஈடுகொடுக்கவோ அதை வெல்லவோ இயலாது” என்றார்.
ஆனாலும், இயற்கையை யொட்டிய வாழ்க்கைப் பயணத்தை மனிதன் அமைத்துக் கொண்டால் அதனால் மனித குலம், இயற்கை என இருதரப்புக்கும் நன்மை உண்டு. மாணவர்கள் இன்று தேர்ந்தெடுத்து பேசிய தலைப்பு காலத்தால் பொருத்தமானதும் சாலச்சிறந்ததும் ஆகும் என்றார்.
புவி வெப்பமயத்தாலும் அதனால் விளைந்த பருவகால மாற்றத்தாலும் உலக நாடுகள் வகைதொகையின்றி பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, உலக மக்களும் பலவித இன்னல்களை அண்மை ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றன. இதில் பங்குபற்றிய-வர்கள் கனடா, மலேசியா, தமிழகம் என மூன்று நிலப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இம்மூன்று நிலங்களும் அண்மைய நாட்களாக தொடர் மழைய எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை யெல்லாம் கருத்தில் கொண்டுதானோ என்னவோ ‘இயற்கையை நேசிப்போம்’ என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்து பேசிய மாணவர்கள் அழகு தமிழ் நடையில், செறிவான கருத்தை வெளிப்படுத்தினர்.
இவர்களைத் தயார்ப்படுத்திய மாணவர்களின் ஆசிரியர்களும் அந்தந்தப் பள்ளியின் தலைமைஆசிரியர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள். இந்த நிகழ்ச்சியை மலேசியாவில் ஏற்பாடு செய்த இசைக் கலைஞரும் சமூக ஆர்வலருமான தம்பி ராஜாவையும் பாராட்டுகிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியக்கு அடியும் முதலுமாக இருக்கும் உதயன் இதழின் ஆசிரியர் சமூகத்தின் மிகுந்த பாராட்டுக்கு உரியவர் என்று மகுடம் சூட்டி தன் உரையை நிறைவு செய்தார் தமிழரசி.
ஆசிரியை திருமதி சரளா சுப்பிரமணியம் நிகழ்ச்சி நெறியாளராக இருந்து வழிநடத்திய இந்நாவன்மை நிகழ்ச்சி, பேராக் சொகமானாத் தோட்ட தமிழ்ப் பள்ளியின் மேநாள் தலைமை ஆசிரியர் திரு. ஏழுமலை ஆறுமுகத்தின் நன்றி உரையுடன் நிறைவுபெற்றது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்குகொண்ட மாணவர்கள் சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் தங்களின் கருத்தை பதிவு செய்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.