தொழிற்சங்கம் அமைப்பதில் ஈடுபட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு, நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து, கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
டிசம்பர் 1, 2021 புதன்கிழமை மாலை வத்துபிட்டிவல முதலீட்டு ஊக்குவிப்பு வலய நுழைவாயிலுக்கு முன்னால், தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்புடன் இணைந்த ஒரு தொழிற்சங்கமான வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கடும் மழையையும் பொருட்படுத்தாது பல முன்னணி தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
ஆடைத் தொழில், தோட்டத் துறை, சுற்றுலா மற்றும் உள்நாட்டு சேவை உள்ளிட்ட துறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சமகால அடிமைத்தனம் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபகாட்டோ தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம் ஓகஸ்ட் 20, 2021 அன்று ஏ.டி.ஜி கையுறை தயாரிப்பு தனியாார் நிறுவனத்தில் புதிய கிளையை நிறுவியது.
வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், கிளை ஒன்றை அமைப்பதாக அறிவித்து நான்கு நாட்களுக்குள் நிறுவனம் 16 உறுப்பினர்களை பணி நீக்கியது.
ஏ.டி.ஜி கையுறை தயாரிப்பு தனியாார் நிறுவனமானது, சர்வதேச சந்தைக்கு கையுறைகளை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாகும்.
தொழிற்சங்கங்களை நாசப்படுத்துதல் மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை குறித்த நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதகாவும், ஆனால் எந்தவொரு சட்டரீதியான விளைவுகளையும் அது எதிர்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.டி.ஜியால் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த மூன்று மாதங்களாக வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேரிட்டுள்ளதாக தொழிற்சங்கம் கூறுகிறது.
தொழிற்சங்கங்களை அழிப்பதில் ஏ.டி.ஜி ஒரு மோசமான நிறுவனம் என வர்ணித்த தொழிற்சங்கத் தலைவர்கள், 2018 இல், குறித்த நிறுவனம் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மற்றொரு தொழிற்சாலையில் சுமார் 300 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததாக வலியுறுத்தியுள்ளது.
நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 16 ஊழியர்களை மீண்டும் பணியில் இணைக்க தலையிடுமாறு கோரி இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.டபிள்யூ.சுபசிங்கவின் கையொப்பத்துடன், 22 தொழிற்சங்கங்கள் இணைந்து 2021 செப்டெம்பர் 21 ஆம் திகதி தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. எனினும் அதற்கு வழங்கப்பட்ட பதில் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை மீண்டும் பணியில் இணைக்கும் வரை அப்பகுதியில் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏடிஜி நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அண்மித்த கிராம மக்களும் ஆதரவு அளித்து வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிட்டம்புவ, வத்துபிட்டிவல, ரன்பொகுணகம, தித்தவெல்மங்க, மீவித்திகம்மன, மதுவெகெதர மற்றும் ஹொரகொல்ல பிரதேச மக்களும் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தியவாறு, ஏ.டி.ஜிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழிற்சங்க உரிமை மீறலுக்கு எதிரான முதலீட்டு ஊக்குவிப்பு வலைய அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தொழில் அமைச்சர் உடனடியாக தலையீடு செய்யாவிடின், சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) முறைப்பாடு செய்யப்படும் என, போராட்டத்திற்கு ஆதரவளித்த தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளதாக தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்பின் (UNF) தலைவர் லீனஸ் ஜயதிலக கூறியுள்ளார்.
பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு நிலையத்துடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வத்துபிட்டிவலவில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலைய நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் துறை ஊழியர் நிலையம், ஏ.டி.ஜி கட்டுநாயக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்க செயற்பாட்டாளர்கள், மகளிர் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
புகைப்படம் அமில உடகெதர