சமையல் எரிவாயு கொள்கலன் அதாவது காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல. இந்தியாவில் சீதனக் கொடுமை காரணமாக பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் சிலிண்டர் வெடித்து இறந்துவிட்டார் என்று கூறி பெண்ணின் கணவரும் அவருடைய உறவினர்களும் தப்ப முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் பல செய்திகளை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்.ஒரு கொலையை சமையலறை விபத்தாக உருமறைப்பு செய்வது என்பது குடும்ப வன்முறைகளில் மிகக் குரூரமான ஒன்று. சீதனக் கொடுமை தமிழகத்தோடு ஒப்பிடுகையில் ஈழத்தில் குறைவு. குறிப்பாக சீதனப்படுகொலை என்று வர்ணிக்கத்தக்க காஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நமது நாட்டில் அனேகமாக இல்லை. எனினும் தமிழ் வாசகர்கள் படித்த சிலிண்டர் வெடிப்பு செய்திகளில் கணிசமானவை சீதனப் படுகொலையோடு தொடர்புடையவை.இது முதலாவது.
இரண்டாவதாக சிலிண்டர் வெடிப்பு பற்றிய செய்திகள் போர் காலகட்டத்தில் வெளிவந்தன. விடுதலைப் புலிகள் இயக்கம் எரிவாயு கொள்கலன்களில் வெடி மருந்தை அடைத்து படையினரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்களை நடத்தினார்கள். சிலிண்டர் குண்டு தாக்குதல் என்பது ஈழப்போரில் படைத்தரப்பு க்கு அதிகம் சேதத்தை விளைவித்து ஒன்றாகக் காணப்பட்டது. ஈழத்தமிழர்கள் சிலிண்டர் வெடிப்பை பற்றி கேள்விப்பட்ட இரண்டாவது வகைச் செய்தி இது.
மூன்றாவது வகைch செய்திகள் இப்பொழுது நாட்டில் நடப்பவைகள் பற்றியவை. இது ஈழத்தமிழர்களை விடவும் சிங்கள மக்களைத்தான் அதிகம் பாதித்த ஒன்றாக காணப்படுகிறது.அண்மைகாலமாக சமையலறை சிலிண்டர்கள் அல்லது எரிவாயு அடுப்புக்கள் வெடிப்பது பற்றிய செய்திகள் அதிகரித்த அளவில் வரத் தொடங்கியிருக்கின்றன. சிலிண்டர்கள் அரிதாகக் கிடைக்கும் ஒரு காலகட்டத்தில் கஷ்டப்பட்டு வாங்கிய அந்த சிலிண்டர் ஒரு குசினிக் குண்டாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக பீதியை உருவாக்கியுள்ளது.
இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் ஒரே ஒரு பெண்தான் கொல்லப்பட்டிருக்கிறார். சிலர் காயப்பட்டிருக்கிறார்கள். தமிழ் பகுதிகளில் மொத்தம் மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.ஆனால் இச்சம்பவங்களில் மீதான கற்பனைகளும் வதந்திகளும் அதிகரித்த அளவில் மக்களை பீதிக்கு உள்ளாக்கியுள்ளன. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு, விலை உயர்வு என்பவற்றின் பின்னணியில் அரசாங்கத்தின் மீது அதிகரித்துவரும் அதிருப்திகளின் விளைவாக சிலிண்டர் வெடிப்புச் செய்திகள் அதிகரித்த கவனத்தைப் பெறுகின்றன அல்லது பீதியூட்டுபவைகளாக மாறிவிட்டன.
இதில் பணக்காரர்கள் உடனடியாக இலத்திரனியல் அடுப்பு அல்லது மின் அடுப்புக்கு மாறிவிட்டார்கள். நவீன வீடுகளில் புகை போக்கிகள் கிடையாது. அது ஒரு பிரச்சினை. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மண்ணெண்ணை குக்கருக்கு மாறிவிட்டார்கள். சிலர் சிலிண்டரை சமையலறைக்கு வெளியே வைத்து, சுவரில் துவாரமிட்டு விநியோகக் குழாயை உள்ளே கொண்டு வருகிறார்கள். கிராமப்புறங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு தட்டியை இறக்கி சமைக்கலாம். தாராளமாக விறகில் சமைக்கலாம். எனினும் காஸ் குக்கருக்கு பழகிய ஒரு வாழ்க்கை சோதனைக்கு உள்ளாகும் பொழுது அரசாங்கத்துக்கு எதிராக பொது மக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகரித்து வருகின்றன. சமையலறை ஒரு ஆபத்தான இடமாக மாறிவிட்டது.
இது தொடர்பாக ஆராய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு சஜித் பிரேமதாச கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக 18லீட்டர் கலப்பின எரிவாயு உருளையை அறிமுகப்படுத்திய பின்னர் இந்த நிகழ்வுகள் தொடங்கின என்றும், இது மக்களை ஏமாற்றி பாரிய இலாபத்தை ஈட்டும் அரசின் தந்திரம் என்றும் அவர் கூறினார்.
“சமையல் எரிவாயுவின் விலை உயர்வே தற்போது வெடிப்பு சம்பவம் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம்” என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 233 சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தனியார் நிறுவனத்தை மேற்கோளிட்டு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு நாட்டில் சட்டப்பூர்வமான இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை. 1960 களில் இருந்து இந்நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே சமயம், நாட்டில் தற்போது விநியோகிக்கப்படுகின்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் கூட எரிவாயு கசிவு ஏற்படுவதாகவும் , இதுவே வெடிப்பு சம்பவங்களுக்குக் காரணம் என்றும் பொது மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டரை மூடிய பின்னர் அதன் குழாயை தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரத்தில் இடும் போது அதில் வாயுக் குமிழிகள் உண்டாவதை காண்பித்துள்ளதுடன்,சிலிண்டர் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் வாயு வெளியேறுகின்றமையே இதற்கான காரணம் என்றும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிலிண்டரில் வாயு அழுத்தம் அதிகரித்துள்ளமையால் , பாவனையில் இல்லாத போதிலும் கூட வாயு கசிவதோடு , தொடர்ச்சியாக இடம்பெறும் வாயு கசிவினால் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களே அனைத்து வெடிப்புச் சம்பவங்களுக்கும் காரணம்” என்று தான் உறுதியாக நம்புவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின்முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தன டெய்லி மிரருக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…” ஜூன் 18 ஆம் திகதி லிட்ரோ எரிவாயு ஒழுங்குபடுத்துனருக்கு அப்பாற்பட்டதா? எனவும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி இலங்கையின் சமையல் எரிவாயு சந்தையில் குமுறல்கள் என்ற தலைப்பிலும் டெய்லி மிரர் பிரத்தியேக செய்திகளை வெளியிட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திலிருந்தே தெரியவராத காரணங்களிற்காக சிலிண்டரின் எரிவாயுக் கலவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனமும் லாஃப் நிறுவனமும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதியின்றி இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. கடந்த ஏப்ரலில் இருந்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சிலிண்டரின் வாயுக் கலவையை பியூட்டன் 80 : புரொபேன் 20 என்ற நிலையிலிருந்து முறையே பியூட்டன் புரொபேன் 50க்கு 50 என மாற்றியுள்ளன.வால்வுகளில் கசிவுகள் ஏற்படுகின்றன என வெளியான முறைப்பாடுகளுக்கு இதுவே காரணம்…… இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திக சேனரட்ண ஆகியோருடன் நானும் ஏனைய அதிகாரிகளும் இலங்கை நுகர்வோர் அதிகார சபையில் இந்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்திய சந்திப்பின் பின்னர் நான் இந்த ஆபத்துக்கள் குறித்து எதிர்வு கூறினேன்….. இலங்கை ஒரு வெப்பமண்டல நாடு என்பதால் எல்பி வாயுவில் குறைந்தளவு புரொபேனும் அதிகளவு பியூட்டனும் காணப்பட வேண்டும்” என்றும் துசான் குணவர்த்தன கூறியுள்ளார் வாயு கலவையை 50% புரொப்பேன் (Propane) மற்றும் 50% பியூட்டேன் (Butane) என மாற்றினால் வாயுக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மொறட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.அண்மைய எரிவாயு தொடர்பான வெடிப்புகளுக்கு இதுவே வெளிப்படையாகக் காரணம் என்றுமவர் கடந்த புதன்கிழமை கூறியுள்ளார்.
மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் “பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஆறு மில்லியன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன….. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் அறிக்கைகள் பொய்யானவை மற்றும் அடிப்படையற்றவை” என்றும் தெரிவித்தது. நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையூறு விளைவிப்பதற்காக சில பிரிவினர் எரிவாயுவின் தரம் தொடர்பில் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம் எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் சில மாற்றங்களைச் செய்து கடந்த ஜூலை மாதம் பல மாதிரிகளை அறிமுகப்படுத்தியதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை முகாமையாளர் திரு.ஐ.விஜேயரத்ன தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.எனினும்,சோதனை வெற்றியளிக்காததால் சிலிண்டர்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.மேலும்,சந்தையில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் கலவையானது நிலையான தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள அண்மைய சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புகளுக்கு தரம் குறைந்த குழாய்கள், அடுப்புகள் மற்றும் பாவனையாளர்களின் அலட்சியப் பாவனையினால் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் லங்கா கடந்த புதன்கிழமை வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
யார் எதைக்கூறினும் இது தொடர்பில் மக்களுடைய அச்சத்தை அகற்றும் செய்திகள் எதையும் அரசாங்கத்தால் கொடுக்க முடியாதிருக்கிறது என்பதே உண்மை. இந்த விடயத்தில் மட்டுமல்ல பல விடயங்களிலும் நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தால் நம்பிக்கையூட்ட முடியவில்லை என்பதே உண்மை. அரசாங்கத்துக்கு சோதனை மேல் சோதனை. கோத்தாபய ஆட்சிக்கு வந்தபொழுது பெருந்தொற்று நோயும் கூடவேவந்தது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம் மேலும் நொந்து நூலாகியது. போதாக்குறைக்கு தலை நகரை அண்டிய பகுதியில் கடலில் ரசாயன பொருட்களோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. அதனால் நாட்டுக்குள் வந்த கொஞ்சநஞ்ச உல்லாசப் பயணிகளும் கடல்லுணவை தவிர்க்க தொடங்கினார்கள். பெருந் தொற்று நோய் காரணமாக நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகள் யாவும் படுத்துவிட்டன. இதனால் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு மேலும் குறைய தொடங்கியது. அரசாங்கம் ஒரு தொகுதி பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியது. நிதியமைச்சராக பசில் ராஜபக்சவை நியமித்தது. வெளியுறவு அமைச்சராக ஜி எல் பீரிசை நியமித்தது. அமெரிக்காவுக்கு புதிய தூதுவராக மகிந்த சமரசிங்கவை அனுப்பியது. மேற்கு நாடுகளுக்கு விருப்பமானவர்களை இவ்வாறு பதவிகளுக்கு நியமித்ததன் மூலம் அரசாங்கம் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவர முயற்சித்தது.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை படையினரிடம் கொடுத்து அந்த ஒரு விடயத்தில் மட்டும் அரசாங்கம் வேகமாக வெற்றிபெற்றது.ஆனால் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகளை குறிப்பிடத்தக்க அளவுக்கு பூர்த்தி செய்தபின் நாட்டை திறந்தபோது ஏற்கனவே போராடத் தொடங்கியிருந்த தொழிற்சங்கங்கள் முழுவேகத்தோடு போராடத் தொடங்கின. அரசாங்கத்தால் தொழிற்சங்கங்களை ராணுவத்தை வைத்து அடக்க முடியவில்லை. போதாக்குறைக்கு பங்காளி கட்சிகளும் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பத் தொடங்கின. ஆட்சிக்கு உள்ளேயும் நெருக்கடி; ஆட்சிக்கு வெளியேயும் நெருக்கடி. முடிவில் அண்மை வாரங்களில் அரசாங்கம் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பணிந்தது. அதற்குப் பின்னரும் ஏனைய தொழிற்சங்கங்கள் போராடப் போவதாக அச்சுறுத்துகின்றன. இரண்டு தொழிற்சங்கங்கள் பெற்ற வெற்றி ஏனைய போராடும் தரப்புக்களுக்கு உற்சாகமளிப்பதாக அமைந்துவிட்டது. இப்படிப்பட்டதொரு பின்னணியில்தான் காஸ் சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கின. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை வணக்கத்திற்குரியதாக மாற்றி நினைவுத் தூபிகளைக் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தின் தோல்விகள் அடுப்படிவரை வந்துவிட்டன.