இலங்கையிலும் இந்தியாவிலும் சைவத்தையும், தமிழையும் கண்ணெனக் காத்து அறநெறியில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய நல்லைநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142ஆவது குருபூஜை நிகழ்வு, இம்முறை நாடளாவிய ரீதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியிலே இந்நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது.
கொழும்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளோடு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142ஆவது குருபூஜை நிகழ்வு, ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார். அம்பாறை மாவட்டத்திற்கான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142ஆவது குருபூஜை தினவிழா 27ஆம் திகதி சனிக்கிழமை காலை காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் உரையாற்றுகையில் “நல்லைநகர் நாவலர் பெருமானும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரும் இலங்கைத் திருநாட்டின் இருபெரும் ஆன்மீக சொத்துகள். இருவரது பணிகளையும் இளம்சந்ததியினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எமக்குள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினவிழாவை காரைதீவில் ஏற்பாடு செய்திருந்தன.
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் திருமுன்னிலை வகிக்க, காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மங்கல விளக்கேற்றல், நந்திக்கொடியேற்றல், அறநெறி கீதம், குருபூஜை என்பன நடைபெற்றன.
இந்த நிகழ்விலே ஆன்மிக அதிதிகளாக காரைதீவு ஸ்ரீ மகாவிஷஸ்ணு ஆலயகுரு சிவஸ்ரீ சி.தியாகராஜக் குருக்கள், காரைதீவு ஸ்ரீ நந்தவனச் சித்திவிநாயகர் ஆலயகுரு சிவஸ்ரீ இ.மகேஸ்வரக் குருக்கள், காரைதீவு ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலயகுரு சிவஸ்ரீ சி.சாந்தரூபன் குருக்கள், பெரியநீலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயகுரு சிவஸ்ரீ ந.பத்மலோஜன் சர்மா, காரைதீவு ஸ்ரீ மாவடிக் கந்தசுவாமி ஆலயகுரு சிவஸ்ரீ ச.கோவர்த்தனன் சர்மா, நாவிதன்வெளி ஸ்ரீ முருகன் ஆலயகுரு சிவஸ்ரீ சுபாஸ்கர் சர்மா ஆகியோர் கலந்து கொண்டு ஆசீர்வதித்தனர்.
மணிமண்டபத்தில் அரங்க நிகழ்வின் போது நாவலர் பெருமான் மற்றும் விபுலாநந்த அடிகளாருக்கு மாலை அணிவித்து, சமயகுருமாரால் வேதபாராயணமும் தீபாராதனையும் நடத்தப்பட்டன. அறநெறி மாணவர்களின் நாவலரின் பன்முகதரிசனம் மற்றும் உரைகள் இடம்பெற்றன.
அங்கு மேலதிகஅரசஅதிபர் ஜெகதீசன் மேலும் உரையாற்றுகையில் “எப்போதும் சிவசின்னங்களை அணியும் ஜந்தாம் பெரும் குரவர் அவர். சைவத்திற்கும் தமிழுக்குமாக வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர். பைபிளை மொழிபெயர்க்கின்ற ஆங்கிலப் புலமை அவருக்கிருந்தது. ஆறுமுகநாவலர் பெருமான், விபுலாநந்த அடிகள் ஆகியோரது ஆத்மாக்கள் எங்களை வழிநடத்துகின்றன என்ற நம்பிக்கைஇருக்கிறது.
நாம் சமய குரவர்களை வணங்குகின்றோம். அவர்கள் வாழ்ந்த முறைகளை படித்திருக்கின்றோம். அதேபோன்று இவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். விபுலாநந்தரும் நாவலரும் 19ஆம் நூற்றாண்டில் அவதரித்து பலசேவைகளை சமூகத்திற்காக ஆற்றியவர்கள் . அதற்காகவே இலங்கையின் தேசியவீரர்கள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தபால்தலையும் வெளியிடப்பட்டிருக்கிறது. அன்றைய மேலைத்தேய அடக்குமுறை காலகட்டத்தில் பல சவால்களுக்கு மத்தியில் பெரும் பணிகள் செய்த பெருமகான்களை நாம் மறக்க முடியாது.
தமிழகத்தில் பெருமானது பேச்சுத் திறமை, கதாப்பிரசங்கத்தை கேட்டு வியந்து அவரை பல்லக்கில் ஏற்றி திருவாவடுதுறை ஆதீனம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியமை இலங்கைவாழ் மக்களுக்கு பெருமையானது.
இந்து கலாசார திணைக்களம் அம்பாறை மவட்டத்தில் சிறந்த ஆன்மீக கலைகலாசார விழுமியங்களின் பயிற்சி நிலையமாக இந்த விபுலாநந்த மணிமண்டபத்தை அங்கீகரித்திருக்கிறது. இங்கு இவ்வாறு தொடர்ச்சியாக சமய ஆன்மீக நிகழ்வுகள் நடந்தேறி வருவது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்குமுரியது. அதற்காக பணிப்பாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி பிரதாப் போன்றோரைப் பாராட்டலாம்.
சைவத் தமிழர்களுக்கென்று ஒரு மதிப்புமிகு அடையாளம் தந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான். பல்துறை ஆளுமை மிக்க தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட பெருமகனார் நமக்காகச் செய்த அரும்பணிக்கு சைவத் தமிழுலகம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது” என்றார்.
ஆன்மிக அதிதிகள், விஷேட அதிதிகள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்விலே மாணவர்களின் ஆளுமைத்திறனை வெளிக்கொணர்வு நிகழ்வுகளும் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றன.