திருமலை நவம்
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் மூத்தமகன் மாக்ஸிய சிந்தனைகளின் ஞானி ஈழத்து இலக்கியப்போக்கை தன் எழுத்துக்களால் ஆண்ட மூத்த ஆளுமை செ.கணேசலிங்கம் மறைந்தார் என்ற செய்தி என்னைப்போல் எத்தனையோ இலக்கிய
நெஞ்சங்களுக்கு இடிவிழுந்த செய்தியாக இருக்கும்.
நீண்டபயணம், சடங்கு, செவ்வானம் என்ற அற்புதமான நாவல்களை ஈழத்து இலக்கியத்துக்கு தந்து ஈழத்து இலக்கியத்தை ஒரு உலகத்தளத்துக்கு நிலை நிறுத்திய இலக்கிய ஆளுமை கணேசலிங்கம். தனது 93 வயதில் மறைந்துபோனது துயர் நிறைந்த செய்திமட்டுமல்ல ஈழத்து இலக்கியம் விதவைக்கோலத்துக்கு போய்விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
கணேசலிங்கம் என்ற ஜம்பவானை நான் முதல் முதல் சந்திக்கும் வாய்ப்பை 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த சம்பவம் நிகழ்ந்தது. திருகோணமலை முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சர் அமைப்பென்ற பெயரில் நல்லை அமிழ்தன் தலைமையில் இயங்கிவந்த அமைப்பின்
எழுத்தாளர் மகாநாடு இடம் பெற்றவேளையில் ஈழத்து இலக்கியம் பற்றி கட்டுரையொன்றை வாசிப்பதற்காக அவர் திருகோணமலைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இவர் பற்றிய மனப்பதிவு ஏலவே எனக்கு இருந்தமைக்கான காரணம் இவரது புரட்சிகரமான நாவல்களான ‘சடங்கு’ ‘நீண்டபயணம’; ‘போர்க்கோலம’; ‘செவ்வானம’; போன்றவற்றை படித்திருந்த காரணத்தினால் எமது சந்திப்பு ஒரு ஆரோக்கியமான சந்திப்பாக இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஒருமாணவனாக கற்றுக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக 1976 தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பின் காரணமாக ஈழத்து இலக்கியவாதிகளை அழைத்து கலந்துரையாடல்களை நடாத்திய காலத்தில் கணேசலிங்கம் அவர்களை அழைத்து ஈழத்து இலக்கியம், புரட்சிகர கலை இலக்கியம், மாக்ஸிய இலக்கியம,; பற்றிய பல கலந்துரையாடல்களை நடத்தியதன் காரணமாக அவருக்கும் எனக்குமிடையே இருந்த நட்பு வலுவாகியது. நான் தங்கியிருந்த அக்பர் மண்டபம் அருணாசலம் மண்டபத்தில் என்னுடனேயே தங்கி மாணவர் உண்ணும் உணவை வேண்டி உண்டு நட்பை மதித்த ஒரு மனிதநேயனாக என்னை ஆட்கொண்டார். இடையில் அவருடைய இந்தியப் புலம் பெயர்வு காரணமாக தொடர்புகள் அறுந்துபோயின.
அவருடைய இறப்பு செய்தியை பத்திரிகையில் படித்தபோது ஈழத்து இலக்கியம் ஒரு ஆளுமையை இழந்துவிட்டது என்று வேதனைப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
உருப்பிராய் என்ற ஒரு யாழ்ப்பாண கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்து தனது கல்வியை உருப்பிராய் பாடசாலை யாழ் பரமேஸ்வராக்கல்லூரி ஆகியவற்றில் பயின்று இங்கிலாந்து தேசத்து உயர் கல்வியை (லண்டன் மெட்றிக்குலேஸன); பரீட்சையில் தேறி அரச பதவிகள் பலவற்றை வகித்து இலக்கியத்தை நேசித்த ஒருவராக வாழ்ந்து கடந்த4.12. 2021 தனது 93 வயதில் சென்னையில் காலமாகியுள்ளார்.
கணேசலிங்கத்தின் இலக்கியப்பார்வையும் பதிவுகளும் மாக்ஸிய சிந்தனையின் போற்றபட்டவையாகவே இருந்தது என்பது இலக்கிய உலகம் நன்கறியும் கலை இலக்கியங்கள் யாவும் மேல்மட்ட அமைப்பை சார்ந்தவையாகும் இவை என்றும் அடிப்படை அமைப்பான பொருளாதார அமைப்புக்கு சேவை செய்வதாகவே அமையும் .வர்க்க சமூதாயம் தோன்றிய காலத்திலிருந்து ஆளும் வர்க்க நலன்பேணும் கலை இலக்கியங்களே சமூக அந்தஸ்தை பெற்று வளர்க்கப்பட்டு வந்தததை எளிதில் அறிய முடியும். நிலவுடைமைக்காலத்தில் மன்னர்கள் நிலப்பிரபுக்களை வைத்தே காவியங்கள் படைக்கப்பட்டன.
கைத்தொழில் புரட்சியின்பின் மூலதனம் ஆதிக்கம் பெறத்தொடங்கியது. கலை இலக்கியத்திலும் புரட்சி ஏற்படவே செய்தது. இலக்கியம் என்ற மேல்மட்ட அமைப்பை எடுக்கும்போது கவிதை சிறுகதை நாவல் நாடகம் கட்டுரை வசன கவிதை ஆகிய கலை உருவங்களையே நாம் கருதுகிறோம் இக்கலையுருவங்கள் அனைத்தும் நிலவுடமை முதலாளித்துவத்தால் பெற்றெடுக்கப்பட்ட கலை உருவங்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. அவை அத்தகைய சமூதாய அமைப்பை நிலை நாட்டுவதற்காகவே எழுந்தன என்ற மாக்ஸிய சிந்தனையை தனது ஆதார சுருதியாகக்கொண்டு அடிப்படை கொள்கையாக வைத்துக்கொண்டு ஒரு இலக்கியவாதியாக வாழ்ந்து காட்டியவர் கணேசலிங்கம்.
சிறுகதையாளனாக, நாவல் ஜம்பவனாக மாக்ஸிய சிந்தனை சிற்பியாக, பத்திரிகை மற்றும் சஞ்சிகை ஆசிரியராக பல தளங்களின் தனது ஆளுமையை பதித்தவர். இவரது இலக்கியப்பயணம் 1950 ஆம் ஆண்டு ஆரம்பமாகிறது. தினகரனில் மன்னிப்பு என்னும் தலைப்பில் சிறுகதையை எழுதியதன் மூலம் அப்பயணம் ஆரம்பமாகிறது. இதன்பின் ‘சுதந்திரன’; ‘தினகரன’; ‘புதுமை’ ‘இலக்கியம்’ ‘சாந்தி’ ‘சரஸ்வதி’ ‘தாமரை’போன்ற பத்திரிகைகளிலும் ஏடுகளிலும் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.
தனது பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு அரச துறைக்குள் நுழைந்தவர் ஆரம்பத்தில் வடபுலத்தில் ‘கம்யுனிஸ்ட் கார்த்திகேசன’; என்று அழைக்கப்பட்டவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக அறியப்பட்டவருமான தோழர் மு. காhத்திகேசனுடனான தொடர்பு இவரை பொதுவுடமைத்தத்துவத்துக்குள் ஈர்த்துவிடுகிறது. தோழர் காhத்திகேசன் மாக்ஸிஸ லெனிஸத்தையும் அதன் அடிப்படையிலான பட்டாளிவர்க்க அரசியலையும் தனது ஆயட்கால இலக்காகக்கொண்டு அதற்காக வாழ்ந்து காட்டியவரோடு இவருக்கு ஏற்பட்ட தொடர்பு இடதுசாரிச் சிந்தனைகளோடு எழுத முற்பட்ட கே. டானியல் என்.கே.
இரகுநாதன் டொமினிக் ஜீவா கவிஞர் பசுபதி சுபையிர் இளங்கீரன் நீர்வைப்பொன்னையன் இ.முருகையன் பிரேம்ஜி அகஸ்தியர் சில்லையூர் செல்வராஜன் அ.ந. கந்தசாமி ஆகிய இளந்தலைமுறையினருடன் இவருக்கு இருந்த உடன்பாடு ஈடுபாடு ஈழத்து இலக்கியபபரப்பில் பலவற்றை படைக்க இவருக்கு உறுதணை புரிந்தது.
இவர் தனது வாழ்நாளில் 26 மேற்பட்ட நாவல்களையும் 9 சிறுகதைத் தொகுதிகளையும் 11 சிறுவர் நாவல்கள் 20 மேற்பட்ட கட்டுரை நூல்களையும் ஆக்கித்தந்துள்ளார். கணேசலிங்கத்தின் ஆரம்பகால நாவல்களான நீண்ட பயணம்(1966) சடங்கு 1967 செவ்வானம் 1967 போர்க்கோலம் தரையும் தாரைகையும் பிற்கால நாவல்களான ஈனத் தொழில், ஒருமனிதனின் கதை, அவலங்கள், அடைப்புக்கள் 1998, மரணத்தின் நிழலில,; நகரமும் சொர்க்கமும். போன்ற புகழ்பெற்ற நாவல்களை ஆக்கி தந்துள்ளார். வர்க்க முரன்பாடுகள் பெண்ணிய விடுதலை பெண்ணிய சிந்தனைகள் சாதிய கொடுமைகள் முதலாளித்துவ கெடுபிடிகளை ஆகியவை இவரின் நாவல்களில் ஆழமாக அலசி ஆராயப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் முலாம் பூசப்பட்ட கதா பாத்திரங்களாக அவை அமைந்தன.
இவர் எழுதிய முதல் நாவலான நீண்ட பயணம் 1966 இரண்டாவது நாவலான சடங்கு 1966 மூன்றாவது நாவான செவ்வானம் 1967 ஆகிய மூன்று நாவல்களும் ஈழத்து பத்து சிறந்த நாவல்களில் முதலிடம் பெறுபவையென ந. சுப்பிரமணியம் புகழ்ந்துள்ளார். பேராசிரியர் கைலாசபதி இவை பற்றி குறிப்பிடுகையில் ஒரே குழுவைச்சேர்ந்த ஒரே பிராந்தியத்தை யாழ்ப்பாணத்தை கதைக்களமாகக்கொண்ட நிலமானிய அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமூதாயத்தை சித்தரிக்கும் நவால்களாக மூன்று நாவல்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். நீண்ட பயணத்துக்கு முன்னுரையை இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலனும் செவ்வானம் நாவலுக்கு பேராசிரியர் கைலாசபதியும் முன்னுரை எழுதியிருப்பது சிறப்பம்சமாகும்.
நீண்டபயண நாவல் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகையில் 1956 முன்னைய பின்னைய ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளாகும். அக்கலத்தில் யாழப்பாணத்திலுள்ள சிறு கிராமம் ஒன்றில் ஏற்படும் மாற்றத்தை எழுத முனைந்தேன். ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு கல்தூரத்தை கடக்க முற்படுகின்றனர்.சுரண்டல் ஏற்றதாழ்வுகள் ஆதிக்கவெறி ஆகியன மனிதரிடையே இருக்கும்வரை போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். மனிதவுரிமைப்போராட்டம் ஒரு நீண்ட பயணம் என்று கூறியிருந்தார். ஆசிரியர். சாதிப்போராட்டம் உக்கிரம் பெற்றிருந்த காலத்தில் குறிப்பாக மாவட்டபுர ஆலய போர் வேகம் கொண்ட காலத்தில் செல்லத்துரை சரஸ்வதி என்ற பாத்திரங்களை தன் நாவலில் உருவாக்கி யாழ்ப்பாண பேராட்டத்தை யதார்த்தபூர்வமாக தன் நாவல் மூலம் சித்தரித்துகாட்டியிருந்தவர் கணேசலிங்கம் நீண்ட பயண நாவலில் செல்லத்துரையன் என்ற பனைத் தொழிலாளிமீது காதல் உணர்வுடன் அக்கறை காட்டுபவர்களாக மூன்று பெண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள் பக்கத்துவீட்டு கற்பகம் அடுத்து அவன்மீது தணியாத அன்பும் அக்கறையும் கொண்டவளாக செம்பாட்டு பள்ளர் வகுப்பை சேர்ந்த வள்ளி இன்னொருத்தி வெள்ளாளப் பெண் சரஸ்வதி.
இவரது நீண்டபயண நாவல் 1966 ஆண்டுக்கான சாகித்திய விருதையும் மரணத்தின் நிழல்pல் என்ற நாவல் 1994 ல் தமிழ்நாட்டு இலக்கிய விருதையும் பெற்றதோடு மலேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு சடங்கு நாவல் ஒருபாட நூலாகவும் அயலவர்கள் என்ற நாவல் சென்னை பல்கலைக்கழக முதமாணிப்பட்டப்படிப்புக்கு துணை நூலாகவும் அங்கீகரிக்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேன்பறிப்போர் என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயாப்பு செய்யப்பட்டுள்ளது, இவரது நாவல்களை ஆராய்ந்து பல மாணவர்கள் முனைவர் பட்டத்தையும் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளனர். நாவல் இலக்கியத்தைப்போலவே சிறுகதை படைப்பதிலும் ஆளுமைமிக்க ஒருவராக காணப்பட்டவர் கணேசலிங்கம் ஒன்பது சிறுகதை தொகுதிகளை வெளியட்டுள்ள இவரது சிறுகதைகள் ரஸ்யமொழி உட்பட்ட பிறமொழிகளில் மொழிபெயாக்கப்பட்டுள்ளது கொடுமைகள் தாமே அழிவதில்லை என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள் பலரது பாராட்டைப் பெற்ற சிறுகதைகளாகும். ஈழத்துசிறுவர் இலக்கியவளர்ச்சியில் இவரது பங்கும் பணியும் கனதியும் காத்திரம் நிறைந்ததுமாக கணிக்கப்படுகிறது.சிறுவர் சிந்தனைகளை பெருக்கும் வகையில் இவரால் எழுதப்பட்ட பல நூல்கள் உலக அதிசயங்கள் உலக சமயங்கள் உலக சிந்தனையாளர்கள் உலக மகா காவியங்கள் என பல பரப்பில் படைத்துள்ளார்.
ஈழத்து கவிதையிலக்கியம் புதுப் பொலிவு பெறவைத்ததில் கணேசலிங்கம் ஆசிரியராக இருந்து நடாத்திய குமரன் சஞ்சிகைக்கு அளப்பரிய பங்குண்டு. 1970 களில் தமிழகத்தில் வானம்பாடி என்ற கவிதைச் சஞ்சிகையொன்று வெளிவந்த காலத்தில் மு. மேத்தா காமராஜன்
அப்துல்ரகுமான் அக்கினிபுத்திரன் போன்றோர் புதுக்கவிதைகளில் பலபுதுமைகளை செய்த காலம். இவ்வடிவம் உடைப்பெடுத்து ஓடத் தொடங்கியபோது மரபு விரும்பிகளும் பண்டிதர்களும் புலவர்களும் புதுக்கவிதையின் வரவை கடுமையாக எதிர்த்தார்கள் அக்கலத்தில் 1970 குமரன் என்ற ஏட்டைத் தொடங்கி ஈழத்திலும் அதற்கு அளப்பரிய ஆதரவை நல்கியவர் கணேசலிங்கம்.
அவ்வேட்டில் நூற்றுக்கணக்கான புதியவர்கள் புதுக்கவதைகளை எழுதினார்கள். மட்டுநகர் சாருமதி. அனுராதபுரத்திலிருந்து பேனாமனோகரன் அன்புஜவர்சா ரஞ்சினி ரத்தினம், திருமலை நவம,; ஈழக்குயில் இத்ரீஹ் கல்முனை பூபால் சுபத்திரன் செங்காவலன் வித்தியாபதி மாதுங்கன் ஷெல்லிதாசன், சுகன்ஜா, மாத்தளை செல்வா, அன்புதீன,; நல்லை அமிழ்தன் கனகபாலதேவி மொழிவரதன் மலையன்பன்- லோகேந்திரலிங்கம்., நக்கீரன,; மாத்தளை ராஜலிங்கம் பாலமுனை பாறூக், புதுவை இரத்தினதுரை ஜாவீது கணேஸ், என ஏராளமான புதிய தலைமுறையினரும் பழைய தலைமுறையினரும் எழுதினர். இத்தகைய இலக்கிய பேராண்மையை ஈழத்து இலக்கிய உலகம் இழந்துவிட்டது என்பது கவலைக்கு அப்பாற்பட்ட மறைவாகும்.