“பாரெங்கும் பாரதி” என மாதம் தோறும் கொண்டாடப்பட்டு வரும் பாரதி நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியில் இம்முறை கடந்த சனிக்கிழமை (11 12 2021) 11ம் நாள் கனடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. சிவ இளங்கோ ஆதரவுடன் கனடியத் தமிழகக் கலைஞர்கள் வழங்கிய ஆடல், பாடல் நிகழ்வுகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இது ஒரு இணைய வழி நிகழ்வாகும்.
‘பாரெங்கும் பாரதி’யை மீண்டும் நினைவுபடுத்தும் நிகழ்வாக சென்னை ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு நிறுவனத் தலைவர் திரு முரளி – தினமலர் – தமிழ் மேட்ரிமோனி (திருமண ஒருங்கிணைப்பாளர்) ஆகிய மூன்று ஆளுமைகளும் இணைந்து இம்முறை கனடிய தேசத்தை முன்னிலைப்படுத்தி – ரொரன்ரோ CTC பேரவைக் ஊடாக நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்தியிருந்தனர்.
ஏற்கனவே இந்நிகழ்ச்சி முதலில் ஆந்திர – தெலுங்கு நகரங்கள் உள்ளிட்ட நகரங்களிலும் பின்பு, கோவாவிலும் தொடர்ந்து லக்னோ நகரில் வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்களாலும் கொண்டாடப்பட்டு இம்முறை (கனடிய) டொரண்டோ தமிழர்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கனடியத் தேசிய கீதம் – அகவணக்கம் என கனடியத் தமிழர்களின் மரபுப்படி நிகழ்ச்சிகளை திருமதி கே.வி சுபா (வழக்கறிஞர்) தொகுத்து வழங்கினார்.
பிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஓ எஸ் அருண் தனக்கேயுரிய அழகிய குரலில் வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி என… மகாகவியின் தமிழ் மொழி வாழ்த்தை இசையாக வழங்கினார்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் பாடகியாக உலகம் அறிந்த ஒருவர் ரொரன்றோ நகர பாடகி சின்மயி சிவகுமார் “ஆசை முகம் மறந்து போச்சே..” “சுட்டும் விழிச் சுடர்தான் சூரிய சந்திரரோ…” என பாரதி பாடல்களை மிகவும் இனிமையான குரலில் பாவம், சுருதி, லயம் பிசகாமல் எல்லோரையும் மகுடிக்கு மயங்கிய நாகமாக்கிவிட்டார்.
கல்வித் தெய்வம் கலைமகளின் அருகில் நெருங்கி வளர்ந்துள்ளார். வாழ்த்துக்கள் தாயே!
அடுத்து செல்வி சுருதி பாலமுரளி மீட்டிய வயலின் இசையில் பாரதியாரின் …”நிற்பதுவே நடப்பதுவே” பாடல் ஒலி யாவரையும் விழிகளை மூடி மெய்மறக்க வைத்தார். இவரும் சரஸ்வதியின் புதல்விகள் ஒருவரேயாவார்!
மேலும் ரொரண்ரோ நகரில் புகழ் வாய்ந்த நடனப் பள்ளியை பல வருடங்களாக நடத்தி வரும் திருமதி நிரோதினி பரராஜசிங்கம் ஆசிரியையின் மாணவிகள் எண்மர் கொட்டும் மழையில் நனைய வைத்து – இடி மின்னல் களுக்கூடாக திக்குகள் எட்டும் சிதறி ஓட வைத்தனர்.
‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..’ என இயற்கையைப் பாடி ரசிக்க வைத்த பாரதியாரின் வரிகளுக்கு உயிர் ஊட்டி மெய் சிலிர்க்க வைத்த ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கத்தின் மாணவிகள் யாவரும் எம்மை பரதக் கலையை வணங்க வைத்தனர்.
கலைமாமணி சித்ரா கோபிநாத் அம்மையாரின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ என எங்களையும் அவரது இசைக்கு சரணடைய வைத்துவிட்டார். கலைமாமணி – மாலா சந்திரசேகர் பாரதியை நினைவூட்டி மயங்க வைத்தார். ‘ராம்ராஜ் வேட்டி’ நிறுவனர் திரு ஏகே நாகராஜன் – பட்டிமன்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் திரு கே சிவகுமார் ஆகியோரின் உரை ஆழமாக நெஞ்சில் பதிந்து ‘மகாகவி’யின் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சி அவரது 139 வது பிறந்த நாளிலேயே (11 12 21) நடைபெற்றது. கிருஷ்ணா இனிப்பை போல் தொடர்ந்து – இனித்தது – தொடர்ந்தும் பாரெங்கும் இனிக்கும்.
வீணை மைந்தன்.