கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி என இருவர் வந்துள்ளனர். அவர்களின் கையில் சந்தேகப்படும்படியான ஒரு பை இருந்துள்ளது. ஆகையால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதனை செய்ய பிரித்து பார்த்தனர். அதில், சுமார் 8 கிலோ மதிப்பிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தினமும் இருசக்கர வாகனத்தில் வந்து தமிழக கேரள எல்லை பகுதியில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அவர்கள் கொண்டு வந்திருந்த கஞ்சாவுடன் இருவரையும் கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த மது (49), ஸ்ரீபிரியா (39) என்பதும், அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.