மன்னார் நிருபர்
20-12-2021
பிரதேச ரீதியில் உள்ள கலைஞர்களை ஒன்றினைக்கும் முகமாக கலாசார அலுவல்கள் திணைக்களமும், மன்னார் பிரதேச செயலகமும் இணைந்து மன்னார் பிரதேச கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் ஒழுங்கமைத்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வும் பிரதேச மட்ட கலை இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா நிகழ்வும் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் நேற்று(19) மாலை மன்னார் கலையருவி மண்டபத்தில் இடம்பெற்றது
கொரோனா பரவல் காரணமாக நீண்ட காலமாக செயற்பாடுகள் இன்றி காணப்படும் கலாமன்றங்களை ஒன்றினைத்து அதன் அங்கத்தவர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் மன்னார் கலையருவி இயக்குனர் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ், மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தலைவர் தர்மகுமார குருக்கள், மூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் மெளலவி ஜனாப் அஸீம் உட்பட மன்னார் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்,கலாச்சார உத்தியோகத்தர்கள், மூத்த கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களை சேர்ந்த கலைஞர்களினால் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருப்பது திருமணத்திற்கு முன்னா ?இல்லை பின்னா? என்ற தலைப்பில் பட்டி மன்றமும் இடம் பெற்றது.
அத்துடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் மன்னார் அமுதனினால் எழுதப்பட்ட “ஒற்றையானை” நூல் வெளியீடு செய்யப்பட்டது .
மேலும் பேசாலை பகுதியை சேர்ந்த இளைஞர்களால் போதை பொருளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட “உன் செயல் அறிவான்” குறுந்திரைப்படமும் திரையிடப்பட்டது.
அதே நேர இவ்வருடம் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான பரிசாளிப்பு நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது