மன்னார் நிருபர்
(20-12-2021)
மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை(20) காலை தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய சுகாதார திணைக்களத்தினூடாக கடந்த 13-12-2021 அன்று மேற்கொள்ளப்பட்ட பணியிடை மாற்றம் ஒழுங்கான முறையில் இடம் பெறவில்லை எனவும் குறித்த இடமாற்றம் தொடர்பாக மாவட்ட ரீதியில் உள்ள வைத்தியசாலை நிர்வாகத்தினரின் எந்த வித ஆலோசனையும் மேற்கொள்ளாது வைத்தியர் தேவை உள்ள இடங்களை புறக்கணித்து தேவையற்ற இடங்களுக்கு வைத்தியர்களை நியமித்துள்ளதாக கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இரத்தினபுரி,நுவரெலியா,பொலனறுவை,திருகோணமலை,மன்னார் ஆகிய மாவட்டங்களில் குறித்த முறையற்ற பணியிட மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் பணியிட மாற்றத்தை ரத்து செய்து மாவட்ட ரீதியில் உள்ள வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து தேவை உள்ள இடங்களுக்கு இடமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடந்த 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது .
இதனால் தூர இடங்களில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், vஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.