தமிழ் மரபுரிமை நடுவம்
ஊடக அறிக்கை
டிசம்பர் 21, 2022
வணக்கம்!
மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட, தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தவல்ல ‘தமிழ் மரபுரிமைத் திங்கள்’ என்ற அரிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அதற்கமைய நாம் ஆண்டுதோறும் மரபுரிமை நிகழ்வுகளை முன்னடுத்து வருகின்றோம்.
மரபுரிமைத் திங்கள் என வரையறுக்கப்பட்ட நாள்களில் எமது சமூகம் நாட்டின் பல பகுதிகளிலும் மரபுசார் நிகழ்வுகளை முன்னெடுப்பது வழமை. பண்பாடு, மரபுகள் சார்ந்த விழிப்புணர்வை யாவருக்கும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளைத் திட்டமிட்டு வடிவமைத்துப் பயன்மிக்க தாக்குவதே தமிழ் மரபுரிமை நடுவத்தின் முதன்மை இலக்காகும்.
2021 – மரபுரிமை நிகழ்வுகளுக்கான கருப்பொருள்:
இவ்வாண்டுக்கான கருப்பொருளாகத் ‘தமிழர் தொன்மை – தேடலும் பேணலும்’ என்ற பொருண்மைத் தொடர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எமது தலைமுறைத் தொடர்ச்சியின் எழுச்சியும் மேன்மையும் எமது வரலாற்றுத் தொன்மையிலேயே தங்கியுள்ளது. தொன்மைமிக்க எமது வாழ்வியல் பதிவுகளையும் வரலாற்றையும் பேணிக் காப்பதன் வாயிலாக நாம் எமது தொடர்ச்சியை வலிமை மிக்கதாக்கிக் கொள்ள முடியும்.
மரபுரிமை நிகழ்வுளை முன்னெடுக்கும் அமைப்புகள் யாவும் இக்கருப்பொருளை உள்வாங்கி நிகழ்வுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத் தமிழ் மரபுரிமை நடுவம் விடுக்கின்றது.
கருப்பொருள் சுவரொட்டி ( Poster) வெளியீடு:
மரபுரிமை நிகழ்வுகளுக்கான கருப்பொருளை வெளிப்படும் எமது சுவரொட்டி டிசம்பர் 17 அன்று, இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டது. இத்துடன் அதை இணைத்துள்ளோம். உங்கள் ஊடகங்கள் வாயிலாக இந்தச் சுவரொட்டியை வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடக்க நாள் – நிறைவு நாள்
ஸ்காபரோவில் அமைந்திருக்கும் தமிழ்கல்விப் பணிமனை முன்றலில் தொடக்க நாளான ஜனவரி 1ம் நாள் சனிக்கிழமை காலை பத்து மணிக்குக் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
அன்று மாலை 5 மணிக்கு இணையவழியாகத் தொடக்கநாள் நிகழ்வுகள் நடைபெறும்.
நிகழ்வுகள்:
இவ்வாண்டு, மரபுரிமை நடுவம் தொடக்கநாள் உட்பட மூன்று நிகழ்வுகளையும் 3 இணையவழிக் கருத்தரங்குகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. விபரங்கள் வருமாறு:
சனவரி 01, 2021 – காலை 10 மணி – கொடியேற்றம்
மாலை 5 மணி – தொடக்கநாள் நிகழ்வு
சனவரி 09, 2021 – காலை 10 மணி – கருத்தரங்கு ‘ஈழத்தில் தமிழர் வரலாற்றுத் தொன்மை’
சனவரி 14, 2021 – மாலை 7 மணி – பொங்கல் விழா
சனவரி 16, 2021 – காலை 10 மணி – கருத்தரங்கு
‘தமிழர் வரலாற்றுத் ‘தொன்மையில் தொல்லியல் ஆய்வுகளின் பங்களிப்பு’
சனவரி 23, 2021 – காலை 10 மணி – கருத்தரங்கு
‘தலைமுறைத் தொடர்ச்சியைப் பேணுவதில் வரலாற்றுத் தொன்மையின் பங்கு’
சனவரி 29, 2021 – மாலை 5 மணி – நிறைவு விழா
மரபுரிமைத் திங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் முதன்மை கொடுத்து, எமது மொழி, பண்பாடு, மரபு என்பவை தொடர்பான விழிப்புணர்வை இளையோருக்கும் மற்றோருக்கும் ஏற்படுத்தும் வகையில் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என அனைத்துத் தமிழ் ஊடகங்களையும் வேண்டிக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 416 757 2006 – 416 400 9662