-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.23:
இரண்டே இரண்டு நாட்கள்தான் தொடர் மழை பெய்தது; அதுவும் கடுமையான மழைகூட அல்ல; இடையிடையே விட்டுவிட்டும் பெய்த அந்த மழைக்கு மலேசியாவில் 40 பேர் வரை பலியாக நேர்ந்துள்ளது. இன்னும் 10 பேரைக் காணவில்லையாம்; எவரும் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட இந்த இயற்கைப் பேரிடர், நல்வாய்ப்பாக அந்த மட்டில் நின்று போனது.
டிசம்பர் 18, 19-ஆம் நாட்களில் பெய்த அந்த தொடர்மழை இன்னும் இரண்டொரு நாட்களுக்கு நீடித்திருந்தால், நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் அஞ்சுகிறது.
மழைவிட்டு ஐந்து நாட்களாகியும் இன்னும் முழுமையாக வெள்ளம் வடியவில்லை. வடிவதற்கு வழியே இல்லை. மலேசியாவின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ மூடா என்னும் வீடமைப்புப் பகுதியில் அதுவும் நாட்டின் மையப் பகுதி மாநிலமான சிலாங்கூரின் புதிய அரச நகரான ஷா ஆலம் என்னும் புது மாநகர எல்லையைச் சேர்ந்த இந்த வட்டாரத்தில் உள்ள குடியிருப்புக் பகுதிகளில் 10 அடிவரை நீர் மட்டம் உயர்ந்ததால் மேல் மாடியில் தஞ்சம் புகுந்து, உடைமை யாவும் வெள்ளத்தில் மூழ்கிவிட, ஒவ்வொரு வீட்டினரும் உண்ண உணவும் உடுத்த உடையும் இன்றி பெரும் அல்லலுக்கு ஆளாகி நின்றனர். மாடி வீட்டுவாசிகளின் நிலை இதுவென்றால் தரைவீடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் புகுந்த வெள்ள நீர் அபாயக் கட்டத்தை எட்டியதும் அருகில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் கூரைகளில் ஏறி தப்பித்தனர். இதில், ஒருசில வழிபாட்டுத் தலங்களும் வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைக்கு யார் காரணம்?
அரசாங்கம், பொதுமக்கள் ஆகிய இரு தரப்பாருக்கும் இதில் சம பங்குண்டு!
சுமார், ஒரு மாதத்திற்கு முன்புதான் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, நாட்டில் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். கோலாலம்பூரில் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள உலகின் இரண்டாவது உயரமான கட்டடமான ‘மெர்டேக்கா 118’ தொடர்பாக நெகிழ்ந்துபோன பிரதமர், நாட்டின் தொழில்நுட்ப மேம்பாடு குறித்தும் தன் மனநிறைவையும் வெளிப்படுத்தினார்.
இப்படிப்பட்ட கோபுரம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருங்குடியிருப்புப் பகுதியில் இருநாள் மழை ஐந்து நாட்களாக வடியாமல் இருக்கிறதென்றால், வடிகால் கட்டமைப்பில் மத்தியக் கூட்டரசும் மாநில அரசும் கோட்டை விட்டுள்ளன எனபதுதான் வெள்ளிடை மலை.
முடிவு எடுக்கும் நிலையில் உள்ள உயர் அதிகாரிகளிடமோ மக்கள்மீதான அக்கறையும் சமுதாயக் கடப்பாடும் இக்காலத்தே மிகவும் அருகி வருகிறது. இத்தகையப் போக்கு, பொதுவாக உலக நாடுகள் அனைத்திலுமே தென்படுகிறது.
பருவ நிலை மாற்றம் குறித்தும் கடுமையான மழை-வெள்ளம் குறித்தும் அரசுதான் எச்சரிக்கை செய்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், இலட்சக் கணக்கான குடியிருப்புகளை நெருக்கமாக கட்டமைத்துள்ள மாநில அரசும், இதை கவனத்தில் கொள்ள வேண்டிய மத்திய அரசும் வாளாவிருந்தது மிகவும் அபத்தமானது.
இதுதான் இப்படி யென்றால், வெள்ளப் பேரிடரில் அகப்பட்டுக் கொண்ட மக்களை மீட்பதிலாவது உடனடி கவனம் செலுத்தப்பட்டதா என்றால் அதுவும் இல்லை; இந்த நாட்டில் எல்லா வசதி-வாய்ப்பையும் தொழில்மய மேம்பாட்டையும் அரசு எய்தியுள்ள நிலையில் பகாங், நெகிரி செம்பிலான், போன்ற அண்டை மாநிலங்களையும் கிளந்தான் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களையும் விடுங்கள்; நாட்டின் பாரம்பரிய தலைநகரை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆபத்தில் இருந்து மீட்கவும் அவர்களை அரவணைக்கவும் உடனே களமிறங்கி மின்னல் வேக மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக இரு நாட்களுக்குப் பின் துயில் நீங்கி, கண்களை கசக்கி, முகத்தைக் கழுவி, மெல்லிய நடை பயிலுவதைப் போல செயல்பட்ட அரசத் தரப்பின் போக்கு இனியும் தொடரக் கூடாது.
இரு நாட்களுக்குப் பின் அதுவும் மீனவப் படகுகளை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தினால், பல்லாயிரக் கணக்கான மக்களை எப்படி உடனே மீட்க முடியும்?.
தேசிய-மாநில மக்கள் பிரதிநிதிகள் ஒரு சிலர் ஆங்காங்கே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்களேத் தவிர, பெருந்-தலைவர்கள் எவரும் எட்டிப்பார்க்கவில்லை; பிரதமரும் இரண்டொரு அமைச்சர்களும் வந்து பார்வையிட்டுச் சென்றனர்; இரண்டொரு அறிவிப்புகளையும் செய்தனர்.
இந்த விசயத்தில் பொது மக்களின் நிகரில்லா ஈடுபாட்டையும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கைம்மாறு கருதாக் கடப்பாட்டையும் மக்கள் என்றென்றும் நினைவில் கொண்டிருப்பார்கள். படகுகளை வழங்கியது; கனரக வாகங்களை தாமாக பயன்படுத்தியது; சமைத்த-சமைக்காத உணவுப் பண்டங்களை சொந்தமாக சேகரித்தது-விநியோகித்தது; இரவு-பகல் பாராமல் ஆளளவு தண்ணீரையும் கருதாது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் என்றென்றும் சமுதாயத்தின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
ஸ்ரீ மூடா வட்டாரத்தைப் பொறுத்தவரை, இப்படிப்பட்ட இன்னலுக்கு அங்கு வாழ்கின்ற மக்களும் சுற்றுவட்டார மக்களும் ஒரு வகையில் காரணம்;
ஆறுகளை இயற்கை வழங்கிய கொடையாகவும் வாழ்க்கைப் பயண நண்பனாகவும் கருதாமல் நகர்கின்ற-ஒடுகின்ற குப்பைத் தொட்டியாகக் கருதி வாழ்ந்தது பெருந்தவறு. குறுக்கே அணைக் கட்டியதைப் போல குப்பைகள் அடியோடு அடைத்துக் கொண்டு ஸ்ரீ மூடா ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்து தேக்கியதும் வெள்ள நிலைமைக்கு ஒரு துணைக் காரணம்.
இவற்றை யெல்லாம் கடந்து இயற்கையின் பாரம்பரிய கட்டமைப்பும் மாறிவிட்டது. புவி வெப்பமயமாதல் காரணமாக, வான்வெளியில் பரவியுள்ள காற்று மண்டலத்தின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், மேகக் கூட்டங்கள் தம்மகத்தே அதிக நீர்த் திவலைகளை சேமித்து வைக்க முடிவதுடன், அவை மழையாக மாறும்பொழுது கொட்டித் தீர்த்துவிடுகின்றன.
இவற்றை யெல்லாம் உணர்ந்து, தெளிந்து விழிப்புடன் நடந்து கொள்ளத் தெரியாத மனிதன், அதற்கான தண்டனையை அனுபவிக்கிறான்.
இத்தனைக்கும் இயற்கை சும்மா இருப்பதில்லை; நான் இப்படிப்பட்ட நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறேன் என்று அவ்வப்பொழுது பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. தன்னகத்தே உள்ள எதையும் மறைத்துக் கொள்ளவோ ஒளித்துக் கொள்ளவோ இயற்கைக்குத் தெரியாது.
காலம் என்னும் நல்லாசிரியனும் இயற்கை என்னும் நற்றாயும் காலந்தோறும் நடத்திவரும் பாடத்தில் நாம்தான் அக்கறைக் காட்டுவதில்லை.
மனதாலும் உடலாலும் ஆணைவிட பெண்ணே வலிமையானவள் என்பதை காலமகள் எத்தனை முறை கற்றுத் தந்தாலும் இன்றைய நவீன சமூகம் அதை ஏற்பதில்லை: மறைந்த மனிதனுக்கு மரியாதை செலுத்தவும் அவனை அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ கற்றுத் தந்தது இயற்கைதான்; விலங்கை வேட்டையாடவும் வேட்டையாடிய விலங்கை சுட்டுத் தின்னவும் கற்றுத் தந்தது இயற்கைதான்; சூரியனின் கோடிக் கணக்கான செல்சியஸ் வெப்ப அனல், உலகவாழ் உயிரினங்களை அப்படியே தாக்கா வண்ணம் ஓசோன் என்னும் பாதுகாப்புப் படலத்தை ஏற்படுத்தியதும் இயற்கைதான்; ஆனால், அதில் ஓட்டையைப் போட்டு இயற்கை வகுத்துத் தந்த பாதுகாப்பான பாட்டையிலிருந்து நாமே விலகிக் கொண்டிருக்கிறோம். இயற்கை மிகவும் விரும்புவது பச்சைவண்ண பட்டாடையைத்தான்; நாமோ அதைக் கிழித்து நார்நாராகத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அறிவியல் சார்ந்த வாழ்க்கையை நம்மால் புறக்கணிக்க முடியாது என்பது உண்மைதான் என்றாலும் இயற்கை வகுத்தக் கட்டமைப்பை நாம் அளவுக்குமீறி சிதைத்தால் இப்படித்தான் அனைத்துவித பேரிடரையும் எதிர்கொள்ள நேரிடும்!.
இந்த இடத்தில் இன்னொன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்தப் பேரிடர்கால நிவாரணப் பணியிலுக்கூட அரசத் தரப்பு அரங்கம் காண்பதிலும் பாதகை வைப்பதிலும் அதிக முனைப்பு காட்டி சுய விளம்பரத்தை மக்களின் வரிப்பணத்தில் செய்துக் கொண்டது சரியா என்பதை நாளைய உலகம் சொல்லும்!
அதைப்போல தொண்டுழியம் புரிந்த நல்லுள்ளங்கள் மரியாதைக்குரியன என்றாலும் ஒருசில தரப்பினர் இதன்மூலம் விளம்பரம் தேடிக் கொண்டதும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டதும் பொதுவெளியில் விமர்சிக்கப்-படுகின்றன.
இதனால்தான், மக்களுக்கு நன்மை புரிந்தாலும் அரசத் தரப்பினரும் பொது மக்களும் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனது!
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24